சர்வதேச தலைப்பிறை!

நன்மைகளை அள்ளித்தரும் ரமழான் மாதத்திற்கு முந்திய மாதமான ஷஃபானில் இருக்கிறோம். ஷஃபான் தலைப்பிறை 13.08.07 திங்கள் அன்று பிறந்து 11.09.07 செவ்வாயுடன் 30 நாட்களை பூர்த்தி செய்கிறது.11.09.07-ல் சூரிய கிரஹணம் ஏற்படுகிறது. எனவே ரமழானின் தலைப்பிறை 12.09.07 புதன் அன்று பிறக்கிறது. சங்கைமிகு ரமழான் 11.10.07 வியாழனுடன் 30 நாட்களை பூர்த்தி செய்கிறது; 12.10.07 வெள்ளிக்கிழமை ஷவ்வால் முதல் நாள் 'ஈதுல்பித்ர்' எனும் நோன்புப் பெருநாள். அன்று நோன்பு நோற்பது தடுக்கப்பட்டது, ஹராமாகும். ஆனால் முஸ்லிம்களை, மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட மவ்லவிகள், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தும், அதில் கோணலையும் உண்டு பண்ணவே விரும்புவார்கள். முஸ்லிம்களை வழிகெடுக்கும் நோக்கத்தில் உரிய நாளில் நோன்பை ஆரம்பிக்காமலும், முடிக்காமலும், நோன்பு பிடிக்க ஹராமாக்கப்பட்ட நாளில் நோன்பு நோற்குமாறும், உரிய சரியான நாளில் ஈத் தொழுகை தொழுது, பெருநாள் கொண்டாடுவதைத் தடுத்தும், ஒரே குடும்பத்தில் இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் என பிளவுபட்டு பெருநாள் கொண்டாட வைத்தும் ஆனந்தம் அடைவார்கள் இந்த மவ்லவிகள்.
தங்களின் வழிகெடுக்கும் கொள்கையை நிலைநாட்ட இந்த மவ்லவிகள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு சொத்தை வாதத்தையும் எடுத்துப் பரிசீலித்து அதிலுள்ள மடமையை வரிசையாகப் பார்ப்போம்.

முதலில் அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரம், நபி அவர்கள் صوموا لرؤيته وأفطروا لرؤيته "ஸூமூலிருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லிருஃயத்திஹீ" அதைப் பார்த்து நோன்பை ஆரம்பியுங்கள். அதைப் பார்த்து நோன்பை முடியுங்கள் என்று கட்டளையிட்டிருக்கிறார்கள். எனவே அந்தந்தப் பகுதியில் உள்ளவர்கள் தங்கள் புறக் கண்ணால் பிறையைக் கண்டு நோன்பை ஆரம்பிக்க வேண்டும். அடுத்த பிறையைக் கண்ணால் கண்டு நோன்பை முடிக்க வேண்டும் என்பது இந்த மவ்லவிகளின் வாதம். ஆனால் رؤيت 'ருஃயத்' என்ற அரபி பதம் புறக்கண்ணால் மட்டும் பார்ப்பதைக் குறிக்காது. கண்ணால்; தகவலால், அறிவால், ஆய்வால்,,கணிப்பால், கணக்கீட்டால் பார்ப்பது என்று அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான பொருள் தரும் சொல்; அதற்கு ஆதாரம் தேடி வேறு எங்கும் போக வேண்டியதில்லை. அல்குர்ஆனிலேயே சுமார் 336 இடங்களில் இந்த அரபி பதம் பயன்பட்டுள்ளது. அவற்றில் ஒரு சிலதான் புறக் கண்ணால் பார்ப்பதை குறிக்கின்றன.


பொரும்பலானவை தகவலால், அறிவால், ஆய்வால் பார்ப்பதையே குறிக்கின்றன. (பார்க்க 105:1, 37:102, 2:243,246,258,260, 3:23, 4:44,49, 51,60,77, 14:9,24,28, 19:83, 22:18, 63,65, 24:41,43, 25:45, 26:225) எனவே رؤيت 'ருஃயத்'பதத்தை புறக் கண்ணால் மட்டும் பார்ப்பதற்குள் கட்டுப் படுத்துவதைவிட வேறு மடமை இருக்க முடியாது என்று தெளிவுபடுத்தி அவர்களின் அறிவீனத்தை வெளிப்படுத்திய பின்னர் அடுத்து அவர்கள் எடுத்து வைக்கும் வாதம் வருமாறு.

நபி அவர்களது காலத்தில் கண்ணால் பார்ப்பதுதானே நடைமுறையில் இருந்தது. எனவே இன்றும் பிறையை புறக் கண்ணால் பார்த்து தலைப்பிறையை ஏற்பதே நபிவழி யாகும் என்பதாகும். வஹீ மூலம் அறிவிக்கப்பட்டு மார்க்கமாக்கப்பட்டுள்ள பல அமல்களில் நபிவழியை காற்றில் பறக்கவிட்டு விட்டு, இவர்கள் நம்பிக்கை வைத்துள்ள இவர்களின் முன்னோர்களின் கற்பனைகளை, அல்லது இவர்களின் சொந்தக் கற்பனைகளை மார்க்கமாகக் கொண்டிருக்கும் இவர்கள், இந்த பிறை விவகாரத்தில் மட்டும் ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் அப்படியே நபி அவர்களைப் பின்பற்றுகிறோம் என்று கூறுவது நகைப்பிற்கிடமானதாகும்.

அவர்களின் இந்த வாதத்தில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், صلوا كما رأيتموني 'ஸல்லூகமார அய்த்துமூனி உஸல்லி'- என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள் என்ற கட்டளைப்படி, அன்று நபி அவர்கள் தொழுகை நேரத்தை சூரியனைப் பார்த்து முடிவு செய்ததுபோல் இன்றும் இவர்கள் சூரியனின் ஓட்டத்தைப் பார்த்தே தொழுகை நேரத்தை முடிவு செய்து தொழ வேண்டும். ஆனால் இன்று இந்த மவ்லவிகள் சூரியனைப் பார்த்து தொழுகை நேரத்தை முடிவு செய்வதில்லை. கடிகாரத்தை பார்த்தே தொழுகை நேரத்தை முடிவு செய்கின்றனர்.

இதுவே அவர்களின் இந்த வாதமும் சொத்தை வாதம் என்பதை அம்பலப்படுத்துகிறது. நபி அவர்களின் இந்த ஹதீஸின் பிற்பகுதி மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்பதைக் காட்டி பிறையைக் கண்ணால் பார்ப்பதுதானே நபிவழி என்று கூறி அவர்களின் கண் மூடி ஆதரவாளர்களை ஏமாற்றி வரு கின்றனர். ஏதோ நாம் இன்று, அன்று நபி அவர்கள் புறக் கண்ணால் பார்த்து பிறையை தீர்மானிக்கவில்லை என்று கூறுவது போல் அவர்களின் ஆதாரவாளர்களை நம்ப வைத்து ஏமாற்றுகின்றனர். ஆனால் நாமோ அன்றிருந்த ஒரே வழியான பிறையைப் புறக் கண்ணால் கண்ட தகவலை வைத்துதான் முடிவு செய்தார்கள் என்பதை என்றுமே மறுத்ததில்லை.
நாம் என்ன கூறுகிறோம் என்றால், பிறையைக் கண்ணால் பார்ப்பது, ரமழான் மாதத்தின் அசலான கடமைகளுக்கு உட்பட்டதல்ல; அப்படி கடமையாக இருந்தால் நபி அவர்களும் பிறையை தமது கண்ணால் அவசியம் பார்த்திருப்பார்கள்; தமது மனைவிமார்களையும் பிறையைக் கண்ணால் பார்க்கக் கட்டளை யிட்டிருப்பார்கள்; முஸ்லிம் ஆண்கள் பெண்கள் அனைவரும் அவசியம் பிறையைப் புறக் கண்ணால் பார்த்தாக வேண்டும் என்றே கட்டளை யிட்டிருப்பார்கள். ஆனால் அதற்கு மாறாக நபி அவர்களே பிறையை ஒருபோதும் பார்த்ததில்லை. ரமழான் மற்றும் ஷவ்வால் பிறை கண்டதாக சொல்லப்பட்ட தகவலை வைத்தே மாதம் ஆரம்பமானதையும், முடிவானதையும் முடிவு செய்தார்கள். இதிலிருந்தே பிறையைப் பார்ப்பது மார்க்கக் கடமைக்கு உட்பட்டதல்ல; மாதம் பிறந்ததை அறிந்து கொள்ள அன்றிருந்த ஒரே வழியான பிறையை புறக் கண்ணால் பார்க்கும் பழக்கம் இருந்தது, தொழுகை நேரத்தை சூரியனை கண்ணால் பார்த்து முடிவு செய்தது போல் என்றே உறுதியுடன் கூறுகிறோம்.

அல்குர்ஆன் ஹஜ் அத்தியாயம் 22:27-ல் மக்கள் நடந்தும், வெகு தொலைவிலிருந்து மெலிந்த ஒட்டகங்ளிலும் ஹஜ்ஜுக்கு வருவார்கள் என்று மெலிந்த ஒட்டகத்தைக் குறிப்பிட்டே அல்லாஹ் கூறுகிறான். இங்கு رأي "ரஆ" என்ற அரபி பதத்திற்கு கண்ணால், தகவலால், அறிவால், ஆய்வால், கணிப்பால், கணக்கீட்டால் பார்ப்பது, அறிவது என்று விரிந்த பொருள்கள் கொள்வது போல், மெலிந்த ஒட்டகம் அல்லாத வேறு பொருள் கொள்ளவே முடியாது. ஆனால் பெரும்பாலான ஹாஜிகள் ஒட்டகத்தில் போவதில்லை. விதவிதமான வாகனங்களில் செல்கின்றனர். அவ்வாறு சென்று ஹஜ் செய்யும் ஹாஜிகளின் ஹஜ் கூடாது, ஒட்டகத்தில் சென்று ஹஜ் செய்தால் மட்டுமே அது நிறைவேறும் என்று பிறை விஷயத்தில் விதண்டாவாதம் செய்யும் மவ்லவிகளில் யாரும் சொல்லுவதேயில்லை.

இங்கு, மக்காவை சென்றடைவது ஹஜ் கடமைகளுக்கு உட்பட்டதல்ல; மக்கா போய் அங்கு செய்யும் செயல்களே ஹஜ் கடமைக்கு உட்பட்டவை என்பதை மறுக்காமல் இந்த மவ்லவிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள். அதே போல் பிறையைப் பார்ப்பதும், நோன்பு நோற்பதற்கு உட்பட்டதல்ல; நோன்பு நோற்கும் ரமழான் மாதம் பிறந்துவிட்டதா என்று அறிவதற்கு அன்று பிரயாணத்திற்கு ஒட்டகம் மட்டும் இருந்ததுபோல், பிறையைக் கண்ணால் மட்டுமே பார்த்து அறியும் நிலை இருந்தது; ஆனால் இன்றோ பிரயாணத்திற்கு பலவித வாகனங்கள் இருப்பதுபோல், தலைப்பிறையை அறிவதற்கும் பலவித வசதிகள் ஏற்பட்டு விட்டன என்பதை அறிந்துகொள்ள முடியாத அளவில் இந்த மவ்லவிகள் ஞான சூன்யங்களா? என்பதே எமது கேள்வி.

பிறையைப் புறக்கண்ணால் கண்டே மாதத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்ற இந்த மவ்லவிகளின் சொத்தை வாதங்கள் அனைத்தும் அப்பட்டமான சொத்தைதான் என்பது எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டு போனபின் அடுத்து சில சொத்தை வாதங்களை எடுத்து வைக்கின்றனர் இந்த மவ்லவிகள். இங்கு இந்தியாவில் பகல் என்றால் அமெரிக்காவில் இரவாகும். இந்த நிலையில் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் எப்படி நோன்பை ஆரம்பிக்க முடியும்? என்று கேட்டு சுய சிந்தனைக்கு தடைவிதித்து முழு முகல்லிதுகளாக, செமி முகல்லிதுகளாக இருக்கும் தங்கள் ஆதரவாளர்களை ஏமாற்றுகின்றனர். ஒரேநாள் 24 மணி நேரத்திற்குள் என்று நாம் சொல்லுவதை ஒரே நேரத்தில் என்று நாம் கூறுவதாகச் சொல்லி தங்களை நம்பியுள்ளோரை ஏமாற்றுகின்றனர். பாவம்! இந்த விஷயத்தில் இந்த மவ்லவிகளை நாம் முழுமையாக குறை சொல்ல முடியாது. இவர்கள் கல்வி பயின்று வந்த இவர்களின் புரோகித மதரஸாக்களில் கற்றுக் கொடுக்கப்படும் சுமார் 600 அல்லது 700 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது பூமி உருண்டை, சூரியனை சுற்றி வருகிறது என்ற உண்மைகள் கண்டு பிடிக்கப்படாத கால கட்டத்தில், பூமி தட்டை, பூமியைச் சுற்றி சூரியன் வருகிறது என்று அறியாமையில் எழுதிய தஷ்ரீக்குல் அஃப்லாக் என்ற நூலே, பழமையில்தான் பரக்கத்-அபிவிருத்தி இருக்கிறது என்ற மூட நம்பிக்கையில் இன்றும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதைக் கொண்டு பாடம் படித்த இந்த மவ்லவிகளுக்கு இன்றைய நவீன விஞ்ஞான உலகத்தின் சுழற்சி முறை அறவே தெரியாது. தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் இல்லை; தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. அதனால்தான் பிறை விஷயத்தில் இத்தனை தடுமாற்றமும், அறிவற்ற பிதற்றல்களும் அவர்களின் வாயிலிருந்து வெளிப்படுகின்றன.
அந்த அறியாமையினால்தான், அல்லாஹ் 2:185-ல் உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் நோன்பு நோற்கட்டும் என்று கூறுகிறான். எனவே நோன்பு நோற்பதில் இருசாரார் இருக்கிறார்கள். ஒரு சாரார் முதல் நாள் நோன்பு நோற்றால், அடுத்த சாரார் அடுத்த நாள் நோன்பு நோற்க ஆரம்பிப்பார்கள் என்று கூறி ஒரே நாளைக் குறிக்கும் தலைப்பிறை இரண்டு நாட்கள் இருக்க முடியும் என்ற அபத்தமான அறிவீனமான வாதத்தை வைக்கின்றனர்.

பாவம் அவர்கள்! ஆசியாக் கண்டத்தின் ஆகக் கிழக்குப் பகுதியில் தேதிக் கோட்டுக்கு அருகில் இருப்பவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழும் அதே நேரத்தில் அமெரிக்க கண்டத்தின் மேற்குப் பகுதியில் தேதிக் கோட்டுக்கு அருகில் இருப்பவர்கள் வியாழக்கிழமை லுஹர் தொழுவார்கள். உலகம் உருண்டையாக இருப்பதால் வெள்ளி ஜும்ஆ தொழுபவர்களும், வியாழன் லுஹர் தொழுபவர்களும், ஏறக்குறைய ஒரு இடத்தில் ஒரே நேரத்தில் இருக்கிறார்கள். ஆனால் 24மணி நேரம் ஒரு நாள் வித்தியாசத் தில் இருக்கிறார்கள் என்ற உண்மை இந்த மவ்லவிகளுக்கு விளங்காது. உலகிலுள்ள அனைவரும் 24 மணி நேரத்திற்குள், அதாவது 1428-ல் ஒரே நாள் புதன், ஒரே கிழமை அவகாசத்தில் நோன்பை ஆரம்பித்து விடுவார்கள். புதன், வியாழன் என இரண்டு கிழமைகள் ஒருபோதும் ஆக முடியாது என்ற சாதாரண அடிப்படை உண்மை கூட இந்த மவ்லவிகளுக்கு விளங்காது.
இந்த அறிவீனம் காரணமாகவே, அமெரிக்காவில் அல்லது சவூதியில் நோன்பு திறந்தால் நீங்கள் நோன்பு திறப்பீர்களா? அங்கு சூரிய, சந்திர கிரஹண தொழுகை தொழுதால் இங்கும் தொழுவீர்களா? அங்கு லுஹர் தொழுதால் இங்கும் லுஹர் தொழுவீர்களா? என்று கேட்டு தங்களின் சிந்தனையற்ற ஆதரவாளர்களை மயக்கி ஏமாற்றுவதோடு, தங்களின் அறிவீனத்தின் ஆழத்தை அறிஞர்களுக்கு மத்தியில் வெளிப்படுத்துவார்கள்.

மற்றபடி இங்கு நாம் லுஹர் தொழும் அதேவேளை அதே நேரத்தில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் அஸர், மஃறிபு, இஷா, பஜ்ர் என ஐந்து நேரத் தொழுகைகளும் ஒரே நேரத்தில் நடந்துகொண்டிருக்கும். இப்படி 24 மணிநேரத்திலும் விடாது ஐங்கால தொழுகைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும். இதை இந்த பூமிக்கு வெளியே சென்று விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டு அவதானித்தால் விளங்க முடியும். அல்லது இவ்வுலகிலேயே எல்லா நாடுகளின் ஒலி, ஒளி பரப்புக்களை ஒரே இடத்தில் இருந்து கொண்டு தொடர்ந்து பார்த்து வந்தால் விளங்க முடியும் போன்ற உண்மைகளை விளங்க முடியாத அறிவீனர்களே இப் படிப்பட்ட அறிவீனமான வாதத்தை வைக்க முடியும் என்பதை இந்த விதண்டாவாத மவ்லவிகள் விளங்க மாட்டார்கள்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் அதாவது தொழுகை நேரங்கள் ஒரு சில மணித்துளிகள் நீடிக்கும், நோன்பு நோற்று, துறப்பது அதிக பட்சம் 13 மணிநேரம் நீடிக்கும். இவை அனைத் தும் ஒரு நாளான 24 மணி அவகாசத்திற்குள் தோன்றி முடிந்து விடும்; ஆனால் தலைப்பிறை தோன்றி முடிய 29 அல்லது 30 நாட்கள் 720 மணி பிடிக்கும். எனவே ஒரு நாளைக்குள் தோன்றி முடியும் ஐங்கால தொழுகை, சூரிய, சந்திர கிரஹண தொழுகை, நோன்பு நோற்று துறத்தல் போன்ற நிகழ்வுகளை 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும் பிறையோடு ஒப்பிட்டுப் பேசி மக்களை ஏமாற்றுகிறார்களே, இவர்களை அறிவீனர்கள் என்பதா? அல்லது அறிந்து கொண்டே மக்களை ஏமாற்றி வழி கெடுக்கிறார்கள்; கண்டிப்பாக நோன்பு நோற்க வேண்டிய நாட்களில் நோன்பு நோற்பதை தடுக்கிறார்கள். நோன்பு நோற்கத் தடுக்கப்பட்ட - ஹராமான நாட்களில் நோன்பு நோற்க வைத்து பாவச் செயல்களில் மூழ்கடிக்கிறார்களா? என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும். கடமையான ஒரு நோன்பை விட்டுவிட்டு, பின்னர் ஆயுள் பூராவும் நோன்பு நோற்றாலும் அவை அந்த ஒரு நோன்புக்கு ஈடாகாது என்ற நபி அவர்களின் கடுமையான எச்சரிக்கை இந்த மவ்லவிகளுக்குத் தெரியாதா?

இப்படி ஊர் ஊருக்குத் தனித்தனித் தலைப்பிறை என்ற விதண்டாவாதத்தை எடுத்து வைக்கி றார்களே, அவர்களின் இந்த வாதத்தில் உண்மையாளர்களாக இருக்கிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. உதாரணமாக சென்ற ஆண்டில் அவர்களது கணக்குப்படி 29 நோன்புகளோடு நோன்பை முடித்துக் கொண்டு பெருநாள் கொண்டாடினார்கள். அனைவரும் தங்கள் தங்கள் ஊரில் பிறையைப் பார்த்து 29 நோன்புகளுடன் மாதத்தை முடித்துக் கொண்டு பெருநாள் கொண்டாடினார்களா? நிச்சயமாக இல்லை. மேகமூட்டமாக இருந்தது. எனவே நபிவழிப்படி நடப்பதாக மார்தட்டிக் கொண்டு பிறையைப் புறக்கண்ணால் கண்டே தீர்மானிக்க வேண்டும் என்று விதண்டா வாதம் செய்கிறவர்கள், அந்த நபியின் உபதேசப்படி மேக மூட்டமாக இருந்த தால் 30ஐ பூர்த்தி செய்திருக்க வேண்டும்! செய்தார்களா? இல்லையே! இங்கு நபிவழியை காற்றில் பறக்க விட்டுவிட்டு 29 நோன்புகளோடு மாதத்தை முடித்துக் கொண்டு எப்படி பெருநாள் கொண்டாடினார்கள். ஆம்! சென்னை டவுன் காஜியின் குருட்டுத் தனமான ஃபத்வாவை ஏற்று குர்ஆன், ஹதீஸ்படி நடக்கிறோம் - தவ்ஹீத் வாதிகள் என்று பீற்றிக்கொள்வோரும் செயல்பட்டார்கள். அவர்களின் விதண்டாவாதத்தின் லட்சணம் இதுதான்.

இன்று கணினி கணிப்பீட்டைக் கொண்டு 50 வருடங்கள், 100 வருடங் களுக்குப்பின் ஏற்படும் சூரிய, சந்திர கிரஹணங்களை இன்றே கணித்துச் சொல்லி அவை 100% உண்மைப் படுத்தப்பட்டிருக்கிறது. இதையும் இந்த மவ்லவிகளில் சிலர் உண்மைதான் என்று ஒப்புக்கொண்டு விட்டே விதண்டா வாதம் செய்கின்றனர். இதிலிருந்தே நன்கு அறிந்த நிலையில்தான் முஸ்லிம் களை வழிகேட்டில் இழுத்துச் சொல் கின்றனர் என்பது குன்றிலிட்ட தீபமாக விளங்குகிறது. எனவே முஸ்லிம்கள் அவர்களின் வஸீகர வலையில் வீழ்ந்து வழிகேட்டில் செல்லாமல் நேர்வழி நடக்க முன்வர வேண்டும்.

பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே மாதத்தை தீர்மானிக்க வேண்டும் என்று அடம் பிடிப் பவர்கள், அதை முறைப்படி கடை பிடிப்பதும் இல்லை. முறையாக 12 மாதங்களும் தினசரி பிறையைப் பார்த்து வருவார்களானால், பிறைக் குரிய மன்ஸில்களை அல்குர்ஆனில் கூறியுள்ளபடி அவதானிக்கமுடியும். மாதத்தின் கால்பகுதி, அரைப்பகுதி (பூரணச்சந்திரன்) முக்கால் பகுதி என அவதானித்து வந்தால், பெரும்பாலும் மாத துவக்கத்தை கணித்துவிட முடியும். இந்த மவ்லவிகள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? மாதாமாதம் முறைப்படி பிறையை அவதானிப்பதில்லை. ரஜபு மாதம் அவதானிப்பது அரிது. ஷஃபான் மாதம் முடிவில் வானத்தைப் பார்க்க முற்படுவார்கள்.

ரமழான் தலைப்பிறையை அறிய ஹிந்துக்கள் கணித்து, முஸ்லிம்களின் கோரிக்கை அடிப்படையில் சிவகாசியில் அச்சடிக்கப்பட்ட காலண்டரைப் பார்ப்பார்கள். அதில் 2-ம் பிறையையோ 3-ம் பிறையையோ முதல் பிறையாகக் குறிப்பிட்டிருப்பார்கள். உதாரணமாக ஹி.1428 ஷஃபான் மாதம் 13.08.07 திங்கள் ஆரம்பித்து விட்டது. ஆனால் சிவகாசி காலண்டர் களில் 15.08.07 புதன்கிழமை ஷஃபான் பிறை 1 என்று இருக்கிறது. இந்தக் கணக்குப்படி 12.09.07 ரமழான் பிறை 1ஐ ஷஃபான் பிறை 29ஆக கணக்கிட்டு வானத்தில் பிறையைப் பார்ப்பார்கள். வானத்தில் மேக மூட்டமாக இருந்தால் பிறை தெரியாது. எனவே சரியான கணக்குப் படி ரமழான் பிறை 2ஐ ஷஃபான் 30ஆக கணக்கிட்டு ரமழான் பிறை 3ஐ 1ஆக கணக்கிட்டு வழிகேட்டில் செல்வார்கள்.

அல்லது டவுன் காஜி அறிவித்துள்ளபடி ரமழான் பிறை 1ஐ 30ஆக கணக்கிட்டு, ரமழான் பிறை 2ஐ பிறை 1ஆக கணக்கிடுவார்கள். மேலே எழுதியுள்ளதுபோல் ஷஃபான் மாதம் 13.08.07 திங்கள் அன்று பிறந்து 11.09.07 செவ்வாயுடன் 30 நாட்களைப் பூர்த்தி செய்கிறது. 11.09.07 செவ்வாய் 12:44(U.T.) சர்வ தேச நேரப்படி சூரிய கிரஹணம் ஏற்படுகிறது. இது ஷஃபான் மாதம் முடிவடைவதை உறுதிப் படுத்துகிறது. எனவே ரமழான் முதல் நோன்பு 12.09.07 புதன் அன்று ஆரம்ப மாகிறது. 30 நோன்புகளுடன் 11.10.07 வியாழனுடன் முடிவடைகிறது. 12.10.07 வெள்ளிக்கிழமை ஷவ்வால் முதல் பிறையாகும். அன்று நோன்பு நோற்பது ஹராம். தடுக்கப்பட்டது. காரணம் அன்றுதான் பெருநாள் தினம். எனவே சகோதர, சகோதரிகள் இந்த மவ்லவிகளின் வழிகேட்டுப் போதனைகளைக் கேட்காமல், தவறான நாளில் தலைப்பிறையைப் பார்த்து ஏமாறாமல், ஏமாந்து இன்னும் ஒரு நாளை நீடிக்காமல் மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளில் நோன்பு நோற்று, துறந்து பெருநாள் கொண்டாடுவார்களாக.

அந்நஜாத்