ஸஃபருல் முழஃப்பர் எனும் வெற்றி வாய்ந்த ஸஃபர் என்று சிறப்பித்தழைக்கப்படும் மாதம், “எம் மாதத்தால் எத்தீங்கும் நிகழ்வதில்லை” என்று நபி(ஸல்) அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோ அத்தகைய ஸபர் மாதம் நம்மிடையே வந்திருக்கிறது.
அவர்கள் தமக்கு அல்லாஹ்வின் சொல்லையும், அவனது ரசூலின் வார்த்தைகளையும் ஆதாரமாகக் கொள்ள வேண்டியதிருக்க, தவறுகள் மலிந்து காணப்படும் அரபுத் தழிழ் கிதாபுகளை ஆதாரம் காட்டி பின்வருமாறு அதில் எழுதப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். அதாவது வருடத்திற்கு 1,24,000 பலா முஸீபத்துகள் இறங்குவதாகவும், அவை ஒட்டு மொத்தமாக ஒடுக்கத்து புதனன்றுதான் இறங்குகின்றன என்றும், அதற்குப் பரிகாரமாக குர்ஆனில் குறிப்பிட்ட சில வசனங்களை ஒரு தட்டையில் எழுதி கரைத்துக் குடித்து விட்டால் அவை நம்மை வந்தணுகாது என்கிறார்கள்.
வேறு சிலரோ, அல்லாஹ் “ஆது” கூட்டத்தாரை புதன்கிழமை அன்று தான் பலமான காற்றை விட்டு அழித்து நாசப்படுத்தினான். அல்லாஹ் அதுபற்றி “அய்யாமின்னஹிஸாத்தின்” (பீடை நாட்களில்….) என்று குர்ஆனில் கூறியிருக்கிறான் என்றும், அதன் காரணமாகவே நாங்கள் இதைப் பீடை நாள் என்று கூறுகிறோம் என்கிறார்கள். வேறு சிலரோ, நமது நபி(ஸல்) அவர்களுக்கு இம்மாதத்தில் தான் சுகக்குறைவு ஏற்பட்டிருக்கிறது, அதனால்தான் இதைப் பீடை மாதமென்று கூறுகிறோம் என்று அனைவரும் மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார்கள்.
வல்ல அல்லாஹ் ஆது கூட்டத்தாரை ஷவ்வால் மாதத்தின் இறுதி வாரத்தின் புதன்கிழமை காலையிலிருந்து அடுத்த புதன் மாலை முடிய ஏழிரவும், எட்டுப் பகலும் தொடர்ந்து பலமான காற்றை அனுப்பி, அவர்கள் செய்த அநியாயம் அக்கிரமத்திற்குத் தண்டனையாக அழித்து, நாசமாக்கினான். ஆனால் அக்கூட்டத்தாரின் நபியாகிய “ஹுது”(அலை) அவர்களையும், அவர்களைப் பின்பற்றிய நன்மக்களையும் காப்பாற்றினான்.
அல்லாஹ் அவர்களை ஷவ்வால் மாதத்தின் இறுதிப் புதனில் அழித்து நாசமாக்கியதற்கும், அதன் பெயரால் இவர்கள் ஸஃபர் மாதத்தின் இறுதி புதன்கிழமையில் இஸ்லாத்தைப் போட்டு நாசமாக்குவதற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது?
அவ்வாறே நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு மாதத்தில் சுகக்குறைவு ஏற்பட்டதினால், அம்மாதம் பீடைமாதமென்று கூற முற்பட்டால், நபி(ஸல்) அவர்களுக்கு ஸஃபர் மாதத்தில் மாத்திரம் தானா சுகக்குறைவு ஏற்பட்டிருக்கிறது? அது அல்லாத எத்தனையோ மாதங்களிலும் சுகக்குறைவு ஏற்படத்தானே செய்திருக்கிறது? அதனால் வேறு பல மாதங்களையும் பீடை மாதங்கள் என சொல்ல வேண்டியதாகி விடுமே!
குறிப்பாக நபி(ஸல்) அவர்கள் பிறந்த ரபீஉல் அவ்வல் மாதத்தையே பீடை பிடித்த மாதம் எனக் கூறும் நிலை ஏற்பட்டுவிடும். ஏனெனில் அம்மாதத்தில் தானே நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகியுமிருக்கிறார்கள். எனவே காலம் பொதுவானது. அது நல்லது, தீயது என அவரவர் செயல்களைப் பொறுத்தே அமைகிறதே அன்றி, வெறுமனே ஒரு மாதம் ஒரு நாள் அனைவருக்கும் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ அமைவது கிடையாது.
இதோ, இம்மாதம் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறியதொரு ஹதீஸைக் காண்போம். அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் தொற்று நோய் என்று ஏதுவுமில்லை என்றும் அவ்வாறே ஆந்தையின் சப்தத்தால் ஆவப்போவதொன்றுமில்லை. எனவே (மற்றொரு அறிவிப்பில் பறவை, மான், பூனை முதலியவை வலமிருந்து இடம், இடமிருந்து வலம் குறுக்கே செல்வதால் நலமோ, இடரோ விளைவதில்லை) என்றும்,
அதுபோன்ற ஸஃபர் மாதத்தாலும் நடக்கப் போவதொன்றுமில்லை என்றும் கூறினார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த கிராமவாசி ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! மானைப் போன்று (ஒரு வியாதி கூட ஏற்பட்டிருக்காத) ஓர் ஒட்டகை சொரி பிடித்த வேறொரு ஒட்டகையுடன் சிறிது காலம் சேர்ந்து பழகி விட்டால் அச்சொரி இதனையும் பற்றிக் கொள்கிறதே என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (விஷயம் அவ்வாறென்றால்) முதன் முதலாகச் சொரி ஏற்பட்ட அந்த ஒட்டகைக்குச் சொரியை ஒட்டி விட்டவர் யார்? என்று கேட்டார்கள் (புகாரி)
மேற்காணும் ஹதீஸில் , நபி(ஸல்) அவர்கள், அக்கால மக்களிடையே ஆழமாய்ப் பதிந்து கிடந்த மூன்று மூடநம்பிக்கைகளைக் களைந்துள்ளார்கள்; அவையாவன:
1) குறிப்பிட்ட சில வியாதிகளுக்குப் பிறரைத் தொற்றிக் கொள்ளும் சக்தியுண்டு.
2) ஒரு வீட்டில் ஆந்தை கத்தினால், அவ்வீட்டில் எவருக்கேனும் மரணம் சம்பவிக்கும்.
3) ஷஃபர் மாதம் வந்துவிட்டால் அதன் வருகையால் பொதுவாக மக்கள் அனைவருக்கும் கஷ்டம் ஏற்படும்.
ஆகவே நபி(ஸல்) அவர்கள், அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் வல்ல அல்லாஹ்விடம், அனைத்து ஆதிக்கமும் இருக்கும் பொழுது, சுயமே அவனது நாட்டமின்றி, கேவலம் ஒரு மாதத்தின் வருகையோ, ஓர் ஆந்தையின் சப்தமோ, அடுத்தவனிடமுள்ள ஒரு நோயோ பிறரை எதுவும் செய்து விட முடியாது என்ற உண்மை நிலையை எடுத்துணர்த்தியுள்ளார்கள்.
பொதுவாக அல்லாஹ்வை அன்றி மற்றெவராலும், அவர்கள் மலக்குகளாகட்டும், நபிமார்களாகட்டும், வேறு இறைநேசச் செல்வர்களாகட்டும், இவ்வுலகத்தில் ஒரு துரும்பையேனும் ஆட்டவோ அல்லது ஆடும் ஒன்றை அமைதிப்படுத்தவோ, அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் முடியவே முடியாது. காரணத்தை இதோ திருமறை கூறுகிறது: “பியதிஹீ-மலக்கூத்து - குல்லி - ஸைஃ” அவனது கரத்திலேயே அனைத்துப் பொருட்களின் ஆதிக்கமுமிருக்கிறது.
ஆதிக்கமனைத்தும் இருக்க வேண்டியவனிடத்தில் ஒட்டுமொத்தமாக அமைந்திருக்கும் பொழுது, யாராலும், எதுவாலும், எதுவும் நடக்காது.
உண்மைநிலை இவ்வாறிருக்க, இவர்களாகவே ஒடுக்கத்து புதன் என்று ஒன்றை உண்டுபண்ணிக் கொண்டு, அதில் பலாமுஸீபத்துகள் இறங்குவதாக குர்ஆன், ஹதீஸ் ஆதாரமின்றி இவர்களாவே கற்பனை செய்துகொண்டு, அவை தம்மை வந்தணுகாமலிருப்பதாக, நபருக்கிரண்டு மா இலைகளாம்! ஆயத்துகள் எழுதப்பட்டவைகளாம்! ருபாய்க்கு இரண்டாம், தலைக்கும் உடம்பிற்கும் தேய்த்துக் குளிக்க ஒன்றாம்! குளித்து விட்டு, கரைத்துக் குடிக்க ஒன்றாம்! அவ்வாறு செய்து விட்டால் அன்றைக்கிறங்கும் அனைத்து முஸீபத்துகளும் அடியோடு போய்விடுமாம்! இப்படி கதையளக்கிறார்கள்.
அவர்களின் கூற்றுப்படி, அந்த பலாமுஸீபத்துகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உண்மையில் இறக்கி வைக்கப்படுமானால், இவ்வாறெல்லாம் மா இலைகளில் எழுதிக் கரைத்துக் குடிப்பதன் மூலம் அவை எதுவும் போய் விடாது, அப்படி மீறி அதனால் ஏதேனும் போவதென்று ஒன்றிருக்குமானால், மா இலைகளில் அவர்கள் எழுதும் அந்த மையானது, அரிசியை அடுப்பலிட்டுக் கரித்துத் தயார் செய்யப்படுவதால், இரண்டொரு விடுத்தம் கழிப்பறைக்குப் போவது ஒன்று தானிருக்குமே தவிர, மற்றபடி அதனால் போவது என்று வேறெதுவும் இருக்க முடியாது.
இவை அனைத்தும் வெறும் வயிற்றுப் பிழைப்பிற்காக, சுய நலமிகளால், சமுதாயப் புல்லுருவிகளால் தோற்றுவிக்கப்பட்டவையே அன்றி, உண்மையில் குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் அவ்வாறெல்லாம் எதுவுமேயில்லை என்பதை உணர வேண்டும். இன்றைக்கு இவை போன்றவை அனைத்தும் மூடப்பழக்கங்கள் என்பதை அநேகர் உணர்ந்து கொண்டு, குர்ஆன் ஹதீஸ்களுக்குப் புறம்பாக கப்ஸா விடுவோர், கதைளயப்போரின் பக்கம், கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்து விட்டதால், மேற்கூறிய மூடப்பழக்க வழக்கமெல்லாம் புறமுதுகு காட்டி ஓடிக் கொண்டிருக்கின்றன.
அநேக ஊர்களில் மா இலைகளில் எழுதிக் கரைத்துக் குடிக்கும் பழக்கம் அடியோடு நின்று போய் விட்டது. எத்தனை காலம் தான் இந்த ஏமாற்று வித்தைக்காரர்களுக்கு மக்கள் பலியாகிக் கொண்டிருப்பார்கள். ஏமாறுவோர் இருந்தால் தானே ஏமாற்றுவோர் இருக்க முடியும்? இன்றைக்கு ஓரளவேனும் குர்ஆன் ஹதீஸ்களை மக்கள் சிந்திக்கத் துவங்கியதன் பயனாக மூட நம்பிக்கை, தீய பழக்க வழக்கங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அல்லாஹ்வின் பேரருளால் இந்நிலை நீடிக்கும் பொழுது, இம்மூட நம்பிக்கைகள் எல்லாம் ஓடி மறைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை.
இத்தகைய மூடப் பழக்கங்கள் அனைத்தும் நமது சமுதாயத்தை விட்டும் அடியோடு ஒழிய, வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.
ஸஃபர் மாதம்,