நபித்தோழர்கள் வாழ்வினிலே...- திருக்குர்ஆனில் புலமை பெற்ற பெண்: அபூ ரபீஹா

''பச்சை குத்தி விடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து தன் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!'' என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.


இந்தச் செய்தி பனூ ஸஅத் குலத்தைச் சேர்ந்த 'உம்மு யஃகூப்' எனப்படும் ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம் வந்து ''இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே'' என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதர் அவர்கள் யாரை சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டவர்களையும் நான் ஏன் சபிக்கக் கூடாது?'' என்று கேட்டார்கள்.


அதற்கு அந்தப் பெண், ''(குர்ஆன் பிரதியில்) இரு அட்டைகளுக்கு இடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே!'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ''நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். 'இறைத் தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுக்கின்றாரோ அதை விட்டும் நீங்கள் விலகி இருங்கள்'' எனும் (59:7) வசனத்தை நீ ஓதவில்லையா?'' என்று கேட்டார்கள்.


அந்தப் பெண்மணி ''ஆம் (ஓதினேன்)'' என்று பதிலளித்தார். அப்துல்லாஹ் (ரலி), ''நபி (ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்'' என்று கூறினார்கள். அந்தப் பெண்மணி, ''உங்கள் மனைவி இதைச் செய்வதாக நான் கருதுகிறேன்'' என்று கூறினார்.


அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், ''சரி, நீ சென்று (என் மனைவியைப்) பார்!'' என்று கூறினார்கள். ஆகவே அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் எண்ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள், ''என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால் அவளுடன் நான் சேர்ந்து வாழ மாட்டேன்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அல்கமா நூல்: புகாரீ (4886)


நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு அடுத்த காலமான நபித்தோழர்கள் காலத்தில் நடந்த ஒரு சம்பவம் இது. இச்சம்பவத்தில் இச்சமுதாயத்திற்கு நிறைந்த படிப்பினைகள் உள்ளன.


நபித்தோழர்களில் மிகச் சிறந்தவராகத் திகழ்ந்தவர்களில் ஒருவர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி). இவர்களுக்குத் திருக்குர்ஆனோடு அதிகத் தொடர்பு உண்டு. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வஹீயை எழுதி வந்தவர்களில் இவர்களும் ஒருவர். ''இவரிடமிருந்து திருக்குர்ஆனை எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார்கள்.


அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் குறித்து அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறுகையில் ''நான் என்றென்றும் அவர்களை நேசிப்பேன். (ஏனெனில்) அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), ஸாலிம் (ரலி), முஆத் பின் ஜபல் (ரலி), உபை பின் கஅப் (ரலி) ஆகிய நால்வரிடமிருந்து குர்ஆனை (ஓதக்) கற்றுக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்'' என்றார்கள். அறிவிப்பவர்: மஸ்ரூக் நூல்: புகாரீ (4999)


மேலும் திருக்குர்ஆன் வசனம் எங்கு அருளப்பட்டது? யார் விஷயமாக அருளப்பட்டது? என்பதை நன்கு அறிந்தவர்களாகவும் திருக்குர்ஆன் தொடர்பான விஷயங்கள் யாரிடம் இருந்தாலும், எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அதைக் கேட்டறிந்து கொள்பவர்களாகவும் இருந்தார்கள். திருக்குர்ஆனில் 70க்கு மேற்பட்ட அத்தியாயங்களை அவர்கள் பெற்றிருந்தார்கள்.


எங்களிடையே அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கேட்டு அறிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! தங்களிலேயே அல்லாஹ்வின் வேதமான குர்ஆனை நன்கறிந்தவன் நானே என்பதை நபித் தோழர்கள் நன்கறிவார்கள். (அதற்காக எல்லா வகையிலும்) நான் அவர்களில் சிறந்தவன் அல்லன்'' என்று குறிப்பிட்டார்கள்.
(இது குறித்து) மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைச் செவிமடுத்தவாறே அந்த அவையில் நான் அமர்ந்திருந்தேன். இப்னு மஸ்வூவூத் (ரலி) அவர்கள் சொன்னதை மறுத்து வேறு விதமாகப் பேசியதை யாரிடமிருந்தும் நான் கேட்கவில்லை.
அறிவிப்பவர்: ஷகீக் பின் ஸலமா நூல்: புகாரீ (5000)


எவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தில் ஓர் அத்தியாயம் அருளப்பட்டால், அது எஙகே அருளப்பட்டது என்பதை நான் நன்கு அறிவேன். அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு வசனம் அருளப்பட்டால் அது யார் விஷயத்தில் அருளப்பட்டது என்பதையும் நான் நன்கறிவேன். என்னை விட அல்லாஹ்வின் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், ஒட்டகம் சென்றடையும் தூரத்தில் இருந்தால் நான் (அவரிடமிருந்து அதைக் கற்றுக் கொள்வதற்காக) அவரை நோக்கி நிச்சயம் பயணம் புறப்பட்டு விடுவேன். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) நூல்: புகாரீ (5002)


நபி (ஸல்) அவர்கள் காலத்தில் திருக்குர்ஆனோடு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களுக்கு எவ்வளவு தொடர்பு இருந்தது என்பதற்கு மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் மிகத் தெளிவான சான்றுகளாகும். இதை மனதில் வைத்துக் கொண்டு, மேல் நாம் கூறிய முதல் ஹதீஸை நினைவு படுத்திப் பாருங்கள்.


அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் சில காரியங்களைச் செய்தவர்களைச் சபிக்கிறார்கள். இந்தச் செய்தி அன்றைய காலத்தில் வாழ்ந்த உம்மு யஃகூப் என்ற பெண்மணிக்கு எட்டுகிறது. இதைக் கேள்விப் பட்டவுடனே அந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ளாமல் இதற்கு விளக்கம் கேட்க நபித்தோழர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்து நேரடியாக விளக்கம் கேட்கிறார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதர் அவர்கள் யாரை சபித்தார்களோ அவர்களையும் அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டவர்களையும் நான் ஏன் சபிக்கக் கூடாது?'' என்று கேட்டார்கள்.


திருக்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் சபித்த காரணத்தால் நான் அவர்களை சபித்தேன் என்று கூறிய போது திருக்குர்ஆனிலும் இவர்கள் சபிக்கப்பட்டுள்ளார்கள் என்ற கருத்தை அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) கூறிய போது, திருக்குர்ஆனோடு அதிகம் தொடர்புள்ள நபித்தோழராகவும் 70க்கும் மேற்பட்ட அத்தியாயங்களை வைத்திருந்தவர்களாகவும், நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வஹீயை எழுதுபவர்களாகவும் இருந்த ஒரு நபித்தோழரிடம் அந்தப் பெண்மணி கேட்கிறார்கள்.


''(குர்ஆனில் பிரதியில்) இரு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே!'' என்று கேட்கிறார்.


ஒரு பெண்மணி, விவரமான ஒரு நபித்தோழரிடம் இவ்வாறு கேட்பது அன்றைய காலத்தில் பெரிய விஷயமல்ல! ஆனால் இன்றைய காலத்தில் உள்ள பெண்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


ஆலிம்கள் எதைச் சொன்னாலும் சுன்னத் என்று எண்ணி மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபடுபவர்கள் இந்த உம்மு யஃகூப் என்ற பெண்மணியை எண்ணிப் பார்க்கட்டும்!


ஆலிம்களிடம் நாம் கேள்வி கேட்க முடியுமா? நமக்கு விவரம் உள்ளதா? நம்மை விட விவரமானவர்களிடம் கேள்வி கேட்பது குற்றமாகாதா? என்று எண்ணுபவர்களுக்கு இந்தச் சம்பவத்தில் சிறந்த முன்மாதிரி இருக்கிறது.


உம்மு யஃகூப் என்ற பெண்மணியை விட எவ்வளவோ பெரிய மனிதரான அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), அவர்களிடம் உம்மு யஃகூப் அவர்கள் கேள்வி கேட்கவில்லையா? அதை அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் தான் கண்டித்தார்களா?


திருக்குர்ஆன் வசனமும் இதைத் தான் நமக்குக் கட்டளையிடுகிறது.


நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! (அல்குர்ஆன் 16:43)


உம்மு யஃகூப் அவர்களுக்கு ஐயம் ஏற்பட்ட போது எப்படிக் கேள்வியை எழுப்பினார்களோ அதைப் போன்று இன்றைய கால பெண்மணிகளும் ஆலிம்களிடம் கேள்வி கேட்க வேண்டும்.


தர்ஹா வழிபாடு நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததா?
நபி (ஸல்) அவர்கள் தர்ஹாவிற்குப் போனார்களா? அங்கு பிரார்த்தனை புரிந்தார்களா?
இறந்தவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் ஒன்றாம், ஏழாம், நாற்பதாம் பாத்திஹாக்கள் ஓதினார்களா?


என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டிருந்தால் இன்று இவ்வளவு பித்அத்கள் தோன்றி இருக்காது. இல்லாததையும் கற்பனை கதைகளையும் ஆலிம்கள் சொல்லி இருக்க மாட்டார்கள்.


பெண்ணாக இருந்தும் திருக்குர்ஆனோடு உம்மு யஃகூப் என்ற பெண்மணிக்கு எவ்வளவு தொடர்பும் ஈடுபாடும் இருந்தது என்பதையும் இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.


திருக்குர்ஆனில் இன்னவர்கள் சபிக்கப்பட்டதாக இல்லை என்று ஆணித்தரமாக அப்பெண்மணி வாதிடும் போது அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) . ''இறைத் தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுக்கின்றாரோ அதை விட்டும் நீங்கள் விலகி இருங்கள்'' எனும் (59:7) வசனத்தை நீ ஓதவில்லையா? என்று கேட்டார்கள். அந்தப் பெண்மணி ''ஆம் (ஓதினேன்)'' என்று பதிலளித்தார்.


இந்த வசனத்தின் பொருள் என்ன? நபி (ஸல்) அவர்கள் கூறிய அனைத்துக் காரியங்களும் அல்லாஹ் கூறியதைப் போன்றே! எனவே நபி (ஸல்) அவர்கள் இன்னின்னவர்களை சபித்தார்கள், நபி (ஸல்) அவர்கள் சபித்தால் அல்லாஹ்வும் சபித்ததாகத் தான் இந்த வசனம் பொருள் தருகிறது என்ற விளக்கத்தை அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் தந்தார்கள்.


''இறைத் தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுக்கின்றாரோ அதை விட்டும் நீங்கள் விலகி இருங்கள்'' என்ற வசனம் திருக்குர்ஆனில் ஆரம்பமோ அல்லது கடைசியோ அல்ல! 57வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது. நவீன வசதிகள் இல்லாத, இன்று போன்று அழகிய காகிதங்களில் அச்சிடப்படாத காலத்தில் 57வது அத்தியாயத்தைக் கூறும் போது, ''இதை நான் ஓதியிருக்கிறேன்'' என்று அந்தப் பெண்மணி கூறியிருப்பது அவர்கள் திருக்குர்ஆனோடு எவ்வளவு ஈடுபாட்டுடன் இருந்தார்கள் என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகிறது.


இன்றைய காலத்தில் வாழும் பெரும்பாலான முஸ்லிம் பெண்களுக்குத் திருக்குர்ஆனை பார்த்துக் கூட படிக்கத் தெரியாத அவல நிலை உள்ளது. பெண்கள் நினைத்தால் ஆண்களைக் கூட மிஞ்சும் வண்ணம், அவர்களைக் கேள்வி கேட்டு அவர்களின் தவறுகளைத் திருத்தும் வண்ணம் மாற முடியும் என்பதற்கு உம்மு யஃகூப் என்ற பெண்மணி சிறந்த உதாரணம். இந்தச் சம்பவத்தைப் படிக்கும் பெண்கள் திருக்குர்ஆனோடு தொடர்பை அதிகரிப்பதோடு கேட்டதை எல்லாம் மார்க்கம் என்று எண்ணாமல் ஆதாரத்துடன் மார்க்க விஷயங்களை அறிந்து பின்பற்ற முயல வேண்டும்.