குடும்ப வாழ்க்கை அமைதியாக இன்பமாக இருக்க மார்க்கம் சொல்லும் வழிமுறைகள் என்ன? என்பதை இத்தொடரில் நாம் பார்த்து வருகிறோம். இதன் தொடர்ச்சியாக இன்னும் சில வழிமுறைகளைக் காண்போம்.
சிறு சிறு உதவிகளைச் செய்தல்
கணவன் மனைவிக்கு மத்தியில் அன்பு அதிகரிக்க, மனைவி வீட்டு வேலைகள் செய்யும் போது அவளுக்குத் துணையாக இருந்து உதவ வேண்டும். காய்கறி நறுக்கும் போது, ரொட்டி சுடும் போது இது போன்ற காரியங்களில் மனைவி ஈடுபடும் போது சிறு சிறு உதவிகளைச் செய்தால் கணவன் மீதுள்ள அன்பு மேலும் அதிகரிக்கும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறான உதவிகளைச் செய்து வந்துள்ளார்கள்.
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ''நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ''நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை) செவியுற்றால் (தொழுகைக்குப்) புறப்பட்டு விடுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அஸ்வத் பின் யஸீத் நூல்: புகாரீ 5363
''நபி (ஸல்) அவர்கள் வீட்டில் வேலை செய்வார்களா?'' என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ''தனது ஆடையைத் தைப்பார்கள்; கிழிந்த செருப்பை தைப்பார்கள்; வீட்டில் ஆண்கள் செய்ய முடிகின்ற வேலைகளை செய்வார்கள்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: உர்வா நூல்: அஹ்மத் 23756
அஹ்மதின் மற்றொரு அறிவிப்பில் (24998) ஆட்டின் பாலைக் கறப்பார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டில் ஆண்கள் செய்ய முடிந்த வேலைகளைச் செய்து தம் மனைவியருக்கு உதவியாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு எத்தனையோ அலுவல்கள் இருந்தும் தம் குடும்பத்தினருக்காக நேரத்தை ஒதுக்கியது அவர்களின் சிறந்த பண்பாட்டைக் காட்டுகிறது. இறைத்தூதர் அவர்களே இவ்வாறு நடந்திருந்தால் நாம் எந்தளவிற்கு நடக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் சிறு சிறு உதவிகள் கணவன் மனைவிக்கு மத்தியில் அன்பையும் பாசத்தையும் நிச்சயம் ஏற்படுத்தும்.
ஊட்டி விடுதல்
சாப்பிடும் போது மனைவிக்கு ஒரு கவள உணவையாவது ஊட்டி விட்டால் கணவனின் மீது உள்ள அன்பை அதிகரிக்கச் செய்வதோடு இறையருளையும் பெற்றுத் தரும்.
''உன் மனைவியின் வாயில் ஊட்டக் கூடிய ஒரு கவள உணவு உட்பட அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீ செலவழிப்பதற்குக் கூலி வழங்கப்படாமல் இருக்காது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ்(ரலி) நூல்கள்: புகாரீ 1296, முஸ்லிம் 3076
மாதவிடாய் நேரத்தில்...
பெண்கள் மாதவிடாய் நேரத்தில் சுத்தமாக இருக்க மாட்டார்கள் என்று கூறி யூதர்கள் அவர்களைத் தனி அறையில் அடைத்து வைத்தனர். பொதுவாக இந்த நேரத்தில் அனைவரும் பெண்களை ஒதுக்கியே வைப்பார்கள். எனவே இதைப் போன்ற நேரங்களில் அவர்களிடம் அன்புடன் நடந்து கொண்டால் கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள். வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, ''நபியே! அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். அது ஓர் (இயற்கை) உபாதை என்று நீர் கூறுவீராக! எனவே மாதவிலக்குற்ற போது பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்'' என்று தொடங்கும் (2:222வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து நபி (ஸல்) அவர்கள், ''தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 507
மாதவிடாய் ஏற்பட்டுள்ள நேரத்தில் உடலுறவைத் தவிர மற்ற அனைத்துக் காரியங்களையும் செய்து கொள்ளலாம். அவர்களுடன் பேசுவது, அவர்கள் சமைத்ததைச் சாப்பிடுவது போன்ற எந்தக் காரியத்தையும் செய்யலாம். இதற்கு நபி (ஸல்) அவர்களே சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துள்ளார்கள்.
நான் மாதவிடாயுடன் இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவிவிடுவேன். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ 295
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது எனது மடியில் சாய்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ 297
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கும் போது அங்கிருந்தவாறே என் (அறையின்) பக்கம் தலையைக் காட்டுவார்கள். நான் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் அவர்களது தலையைக் கழுவுவேன். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ 301
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நான் (ஏதேனும் பானத்தை) பருகி விட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் ஏற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்து விட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 505
மாதவிடாய் என்று கூறி மற்றவர்கள் பெண்களை ஒதுக்கி வைக்கும் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரிடம் அனைத்து உதவிகளையும் பெற்று வந்துள்ளார்கள். மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் தண்ணீரை வாய் வைத்துக் குடித்து விட்டுத் தரும் போது, ஆயிஷா (ரலி) அவர்கள் எந்த இடத்தில் வாய் வைத்து குடித்தார்கள் என்பதைக் கவனித்து, அதே இடத்தில் வாய் வைத்து குடித்துள்ளார்கள். இறைச்சியைக் கொடுக்கும் போதும் ஆயிஷா (ரலி) அவர்கள் கடித்த அதே இடத்தில் கடித்து, மாதவிடாய் நேரத்தில் பெண்களிடம் அன்போடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெரியப்படுத்துகின்றார்கள்.
இந்த நேரம் மட்டுமல்ல! ஒரு பெண் கவலையோடு இருக்கும் போதும், தனக்கு உறுதுணையாக யாரும் இல்லை என்று அவள் எண்ணும் போதும் அவளிடம் கணவன் இது போன்று நடந்து கொண்டால் நிச்சயம் கணவனிடம் மனைவி மதிப்பும் மரியாதையும் வைப்பாள் என்பதில் சந்தேகம் இல்லை.
இல்லறக் கடமைகள் : இல்லறம் இனிக்க இனிய வழிகள் - அபூ ஸமீஹா