புகழ் அனைத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே! சாந்தியும் சமாதானமும் உத்தம நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள், தோழர்கள், நல்லோர்கள் மீதும் உண்டாகட்டும். இப்பிரசுரத்தில் நடுநிலையோடு சிந்திக்க உங்களை அழைக்கின்றேன். சமுதாய மக்களே! இன்று நாம் நமக்குள் பல பிரிவுகளை நாம் வகுத்துக் கொண்டோம். இருப்பினும் நாம் ஒரே இறைவன், ஒரே நபி, ஒரே வேதம், ஒரே கிப்லா என்ற ஒற்றுமையில் உறுதியாக இருக்கிறோம். விசுவாசிகள் அனைவரும் சகோதரர்கள். என்று சூளுரைக்கிறோம். பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கு சொந்தமானது உலக முஸ்லிம்களுக்கு பொதுவானது என்று சட்டம் கூறுகிறோம்.
உலகிலுள்ள பள்ளிவாசல்கள் அனைத்தும் இறையில்லமான கஃபத்துல்லாஹ்வை அடிப்படையாகக் கொண்டதாகும். அதை கருப்பர், வெள்ளையர், அரபி, அஜமி என்று பலரும் ஹஜ் செய்கிறார்கள். அங்கு தொழுகிறார்கள். அது கட்டப்பட்ட நாள் முதல் இன்று வரை முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவாகவே உள்ளது. இன்றும் அங்கு மத்ஹபுகளைச் சார்ந்தவர்களும், சாராதவர்களூம் வந்து செல்கின்றனர். அல்லாஹ்வை மட்டும் வணங்க வருபவர்களுக்கு இன்றுவரை அது பொதுவாகவே உள்ளது. அப்படித்தான் இருக்கவும் வேண்டும். பள்ளிவாசல்களை பற்றி அல்லாஹ் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.
நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். அல்குர்ஆன் 72:18
அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. அல்குர்ஆன் 2:114
நாம் சற்று நிதானமாக சிந்திப்போம். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விசுவாசித்து இஸ்லாமை மார்க்கமாக ஏற்றுக்கொண்டவர்களையே முஸ்லிம் என்று சொல்கிறோம். இதையே குர்ஆன், நபிமொழியும் உறுதி செய்கிறது. ஆனால் இன்று நாம் நடைமுறையில் (தமிழகத்தில்) நான்கு மத்ஹபுகளை சாராதவர்கள் பள்ளிக்குள் நுழையக்கூடாது என்று சட்டம் இயற்றியுள்ளோம். இப்போது சில கேள்விகள் எழுகின்றன.
1.மத்ஹபுகளைச் சாராதவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று மத்ஹபுகளைச் எந்த ஆலிமாவது தீர்ப்பு வளங்கியுள்ளாரா?
2.மத்ஹபுகளைச் சாராதவர்களும் முஸ்லிம்கள்தான் என்றால் அவர்களை அல்லாஹ்வின் இல்லத்திலிருந்து தடுக்க நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
3.மத்ஹபுகளை நாம் மார்க்கத்தில் ஜாதிகளாக எடுத்துக்கொண்டோமா? இணை வைப்பர்வர்கள்தாம் தங்களை பல ஜாதிகளாக பிரித்துக்கொண்டு ஒரு ஜாதியினர் மற்ற ஜாதியினரின் கோயிலுக்கு செல்லாததையும், சென்றால் தடுக்கப்படுவதையும் நாம் பார்க்கிறோம்.
நாளை மத்ஹபுகளைச் சாராத முஸ்லிம்களுக்கு ஒரு துன்பம் வந்தால் நாம் உதவி செய்ய முன்வரமாட்டோமா? அவர்களது ஜனாஸாவில் கலந்து கொள்ளாமல் இருக்க அனுமதியுண்டா? அல்லது நமக்கு ஒரு பிரச்சனை என்று அவர்கள் உதவிக்கு வந்தால் 'நீங்கள் மத்ஹபை பின்பற்றவில்லை' என்று கூறி நாம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவோமா?
இன்று கஃபத்துல்லாஹ்வை முஸ்லிம்களில் ஒரு கொள்கையுடைய சாரார் நிர்வகித்து வருவதால் அந்த கொள்கையைச் சாராதவர் அங்கு வரக்கூடாது என்றால் நாம் அதை ஏற்றுக்கொள்வோமா? உண்மையில் மத்ஹபுகளைச் சாராதவர்கள் வழிகேட்டில் இருந்தால், நேர்வழியில் இருக்கும் நாம் அவர்களை பள்ளிக்குள் அனுமதித்தால்தானே நமது பண்பு குணங்கள் ஒற்றுமையைப் பார்த்து நமக்கு ஆதாரங்களையும் நல்லுபதேசங்களையும் கேட்டு அவர்கள் நேர்வழி பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். பள்ளிக்குள் ஏகத்துவ கொள்கைக்கு முரண்பட்டு வணக்க வழிபாடுகள் செய்வதற்குத்தான் அனுமதியில்லை. அதைத்தவிர அல்லாஹ்வை வணங்குவதற்காகவே பள்ளிகள் உள்ளன.
நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். அல்குர்ஆன் 72:18
நாம் அவர்களை தடுப்பதால் நேர்வழி பெருவதிலிருந்து தடுத்தவர்களாவோம். கருத்து வேற்றுமை யாரிடம்தான் இல்லை. நான்கு மத்ஹபுகள் ஒற்றுமையானதா? இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் இமாமுக்குபின் தொழுபவர், நிலையில் குர்ஆன் ஓதினால் அது ஹராமுக்கு நெருக்கமான குற்றம் என்றும், இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள் ஓதுவது கட்டாயக்கடமை என்றும் கூறுகின்றனர். இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள் கையை தூக்கவேண்டும். பிஸ்மில்லாஹ், ஆமீன் சப்தமிட்டு சொல்லவேண்டும் என்று சொல்ல, அதை இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் மறுக்கிறார்கள். இன்னும் ஃபர்ளு வாஜிபுகளிலேயே பல கருத்து வேற்றுமைகள் உள்ளன. அவ்வாறிருக்க இதைவிட முக்கியத்துவமற்ற விஷயங்களுக்காக நாம் பிறரை எப்படித்தடுக்க முடியும்?
தொப்பி அணிந்துதான் பள்ளிக்கு வரவேண்டும், அல்லது தொழவேண்டும் என்று சட்டமிடுவதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளோம். அப்படி நாம் பின்பற்றும் மத்ஹபுகளில் தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதா? பள்ளியின் ஒழுக்கங்கள் அல்லது தொழுகையின் ஒழுக்கங்களில் ஒன்று தொப்பி அணிவது என மத்ஹபுகளின் எந்த ஆதாரப்பூர்வமான, தீர்ப்பளிக்க தகுந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது? அப்படி எங்கும் கூறப்படவில்லையே! அப்படி இருக்க நாம் அதை சட்டமாகவும், கட்டாயமாகவும் ஆக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது?
நபி(ஸல்) தொப்பி அணிந்திருந்தார்கள் என்பதற்கு சில ஆதாரங்களைச் சொல்பவர்கள் தலைப்பாகை அணிந்திருந்தார்கள் என்பதற்கு பல ஆதாரங்களை குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த ஆதாரங்களை பார்க்கும்போது தொப்பியைவிட தலைப்பாகை அணிவதைத்தான் கட்டாயமாக்க வேண்டும். ஆனால் தொப்பி அணியக்கூறும் எவரும் தலைப்பாகைக்கு ஏன் முக்கியத்துவம் அளிப்பதில்லை? தொப்பி அணிய வேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் எங்கும் கூறவில்லை. ஆனால் தாடி நீளமாக வைக்கவேண்டும் என்று பல இடங்களில் வலியுறுத்தி கூறியிருக்கிறார்கள். எனவே தாடி வைக்காதவர்களையும் அல்லது தாடியை குறைப்பவர்களையும் பள்ளிக்குள் வரக்கூடாது என்று சொல்லும் தைரியம் இருக்கிறதா? இக்காலத்தில் தமிழ்நாட்டில் பெரும்பாலான ஆலிம்கள் தாடியை குறைப்பவர்களாகவும், பள்ளி நிர்வாகிகள் தாடியை சிரைப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்களை கண்டித்து புத்தகம் எழுதவோ, பள்ளிவாயிகளில் போர்டு போடவோ தைரியம் இருக்கிறதா?
மத்ஹபுகளை சார்ந்து ஒரு காரியத்தை செய்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்று நாம் வாதிட்டால் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் சட்டப்படி விரலை ஆட்டவேண்டும். அதை ஏற்றுக்கொள்வோமா? இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் சட்டப்படி உடலில் கட்டாயமாக மறைக்க வேண்டியது முன்பின் இரு பகுதிகள் மட்டுமே. தொடை அவ்ரத் அல்ல. அப்படி மாலிக்(ரஹ்) அவர்களின் மத்ஹபைச் சேர்ந்தவர் வந்து தொழுதால் அனுமதிப்போமா? இமாம் அஹ்மது(ரஹ்) அவர்களின் சட்டப்படி காலணி சுத்தமாக இருக்கும்போது அணிந்துதான் தொழவேண்டும். இதை நாம் பள்ளிவாசல்களில் அங்கீகரிப்போமா?
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். அல்குர்ஆன் 3:103
ஆகவே ஒரே மார்க்கத்தில் இனைந்துவிட்ட நாம் ஏன் சில கருத்து வேற்றுமைக்காக மீண்டும் எதிரிகளாக்கிக் கொள்ளவேண்டும். இமாம்களை ஒரு கூட்டம் குறை கூறினால் அதன் தண்டனையை அவர்கள் மறுமையில் அனுபவித்துக் கொள்ளட்டும்.
நபி(ஸல்) அவர்களே தன்னையும் தன் குடும்பத்தாரையும் ஏசி துன்புறுத்திய முனாபிக்குகளைக் கூட பள்ளிக்குள் வரக்கூடாதென்று தடுத்ததில்லை. வஞ்சித்ததும் இல்லை. கஃபத்துல்லாஹ்வைவிட மதினாவின் பள்ளியைவிட நமது பள்ளிகள் உயர்வானதல்ல. எனவே நபி(ஸல்) அவர்களை நாம் பின்பற்றுவது உண்மையென்றால் கலிமா சொன்ன எவரையும் தடுப்பதற்கு நமக்கு உரிமை இல்லை. கலிமா சொன்ன நமக்கு பள்ளிவாசலில் என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை கலிமா சொன்ன அனைவருக்கும் இருக்கிறது என்று எல்லோருக்கும் விளங்கவேண்டும். நபி(ஸல்) அவர்களை ஏற்றுக்கொள்ளாத ஷியா, போராக்கள் கூட இன்று கஃபத்துல்லாஹ் மற்றும் மஸ்ஜிது நபவிக்கு வருவதையும் அவர்கள் தடுக்கப்படாததையும் நாம் பார்க்கிறோம். இறுதியில் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியை நாம் நினைவில் நிறுத்துவோம்.
நீங்கள் உங்களுக்குள் துண்டித்து வாழாதீர்கள்; புறக்கணித்து வாழாதீர்கள்: கோபம், வெறுப்பு கொள்ளாதீர்கள்: பொறாமைப்படாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டபடி சகோதரர்களாக ஆகிவிடுங்கள். நூல்: முஸ்லிம்
ஆழ்ந்து சிந்தித்து இதுபோன்ற பிரிவினைகளையும் பினக்குகளையும் ஏற்படுத்தும் அறிவிப்புகளை பள்ளிவாசல்களிலிருந்து அகற்றுமாறு சங்கைமிகு இமாம்களையும், மதிப்புமிகு ஜமாஅத்தார்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இது விஷயத்தில் உலமா சமுதாயம் மக்களுக்கு நடுநிலையுடன் சத்தியத்தை எடுத்துரைக்கக் கோருகிறோம்.
நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். அல்குர்ஆன் 8:46
சகோதரத்துவம் பேணுவோம்!