இல்லறக் கடமைகள் : உணர்வுகளுக்கு மதிப்பளித்தல்

இல்லற வாழ்க்கை இனிக்க மார்க்கம் தடை செய்யாத விஷயங்களில் மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் விரும்பியதைச் செயல் படுத்த வேண்டும்.


இவ்வாறு செயல் படுத்தும் போது அவர்களின் ஆசை நிறைவேறுவதுடன் கணவன் மீதும் மதிப்பும் மாரியாதையும் உயரும்.
உதாரணமாக எதாவது ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு சொன்னால் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். முடியவில்லையானால் இன்னொரு நாளில் அழைத்துச் செல்வதாகக் கூறி அதன்படி நடக்கவேண்டும்.


இவ்வாறு செய்வதால் கணவன் மனைவி உறவு சீர்படும்; சிறப்பாகும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே நடந்து கொண்டார்கள்.
ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, ''நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?'' எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர்.


(பிறகு அவர்களை நோக்கி) ''அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்'' என்று கூறினார்கள். நான் பார்த்து சலித்த போது, ''உனக்கு போதுமா?'' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ''அப்படியானால் (உள்ளே) போ!'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ 950


நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக் கொண்டிருக்க பள்ளிவாசலில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக சடைந்து விடும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகள் மீது பேராவல் கொண்ட இளம் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்! அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ 5236


அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் விளையாட்டைப் பார்க்க ஆசைப்பட்ட போது அதற்கு நபி (ஸல்) அவர்கள் தடையாக இருக்கவில்லை.


மாறாக ஆயிஷா (ரலி) அவர்களுக்காகத் தாமும் பார்த்ததுடன், அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் போதும்! போதும்! என்று சொல்லும் அளவுக்குத் தன் தோளை விளையாட்டை பார்க்கும் சாதனமாக மாற்றிக் கொடுத்துள்ளார்கள்.


இறைத் தூதராக இருந்த நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனையோ பணிகள் இருந்த போதும் மனைவியின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்று அறிந்து அதற்கும் நேரத்தை ஒதுக்கியுள்ளார்கள்.


நான் (சிறுமியாக இருந்த போது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள்.


அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ 6130


ஆசையோடு தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைக் கடிந்து கொள்ளவும் இல்லை; தடுக்கவும் இல்லை. மாறாக அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அவர்களின் தோழிகளிடம் மீண்டும் விளையாட அனுப்பியுள்ளார்கள்.


இதைப் போன்று மனைவியின் தோழிகளைப் பார்ப்பதற்கு அவர்களுடன் பேசுவதற்கு அனுமதி கேட்டால் கணவன்மார்கள் அனுமதி அளிக்க வேண்டும். பெற்றோர்களிடம் கூட பேசுவதற்கும் பார்ப்பதற்கும் அனுமதி மறுக்கும் கணவன்மார்கள் நபிகளாரின் இந்த முன்மாதிரியை சிந்திக்க வேண்டும்.


விளையாடுதல்
திருமணம் முடிப்பவர்கள் கணவன் மனைவி அன்புடனும் பாசத்துடனும் இருக்க, தாங்கள் அன்பை வெளிப்படுத்தும் வண்ணம் சிரித்து விளையாடுவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது; ஆர்வப் படுத்தப்பட்டுள்ளது.


''கன்னிப் பெண்ணை மணந்து, நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக் குலாவி விளையாடலாமே! நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரீ 5367


கணவன் மனைவியுடனும் மனைவி கணவனுடனும் விளையாடு வதற்கும் அன்பை வெளிப்படுத்துவதற்கும் வயது வரம்பு ஏதும் கிடையாது.


நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றேன். அப்போது நான் இளம் வயதுப் பெண்ணாக இருந்தேன். எனக்கு சதை போட்டு உடல் கனத்திருக்க வில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் (ஓட்டப் பந்தயம் வைத்து) ''முந்தித் செல்லுங்கள்!'' என்றார்கள். அவர்கள் முந்திச் சென்றார்கள். என்னைப் பார்த்து ''வா! உன்னை நான் முந்திச் செல்கிறேன்'' என்றார்கள். அவர்களை முந்திச் சென்று (இறுதியில்) நானே முந்தினேன். நபி (ஸல்) அவர்கள் அமைதியானார்கள்.


எனக்கு சதை போட்டு நான் கனத்து விட்டேன். (ஓட்டப் பந்தயம் விஷயத்தையும்) நான் மறந்து விட்டேன். இன்னொரு முறை அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றேன். அப்போதும் மக்களிடம் (ஓட்டப் பந்தயம் வைத்து) ''முந்தித் செல்லுங்கள்!'' என்றார்கள். அவர்கள் முந்திச் சென்றார்கள்.


பின்னர் என்னைப் பார்த்து ''வா! உன்னை நான் முந்திச் செல்கிறேன்'' என்றார்கள். நான் அவர்களுடன் ஓடினேன். (இறுதியில்) என்னை நபிகளார் முந்தி விட்டார்கள். சிரித்துக் கொண்டு ''அதற்கு இது சரியாகி விட்டது'' என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத் 25075, அபூதாவூத் 2214


எந்தப் பயணத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது என்ற விவரம் இல்லை. எனினும் குறைந்த பட்சம் நபிகளாரின் வயது என்ன? என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். நபி (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் கலந்து கொண்ட பயணங்கள் மதீனா வாழ்க்கையில் தான் நடந்துள்ளது.


நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குப் போகும் போது வயது 53. மதீனா சென்றவுடனே இந்த நிகழ்ச்சி நடந்திருந்தாலும் அவர்களின் வயது 53 ஆக இருக்க வேண்டும்.


நபிகளாரின் வயது (குறைந்த பட்சம்) 53 ஆக இருக்கும் போது தன் மனைவியிடம் ஓட்டப் பந்தயம் வைத்து தோற்றுப் போய், பல வருடங்கள் கழித்து அதை நினைவில் வைத்து வெற்றிக் கொண்டது, மனைவியிடம் கணவன் வயது வரம்பின்றி இதுபோன்று விளையாடி மகிழ்விக்கலாம் என்பதை மிகத் தெளிவாகப் பறை சாற்றுகிறது.


இவ்வாறு நடப்பதும் கணவன், மனைவியிடம் அன்பை அதிகரிக்க உதவும் என்பதை அறியலாம்.