உலகில் பெரும் பெரும் அறிஞர்கள், டாக்டர்கள், எஞ்சினியர்கள் மற்றும் பல துறை மன்னர்கள், அவர்களின் அறிவு ஆற்றலில் குறைவு இல்லை. ஆயினும் மனிதனை தெய்வமாக்குவதும், தெய்வத்தை மனிதனாக்குவதும் தெய்வத்தால் மன்னிக்கப்படாத குற்றம். கல்லை சிலையாக வடித்து அதனை தெய்வமாக வழிபடுவது தெய்வத்திற்கு இணை வைக்கும் செயல், மாபெறும் குற்றம் என்ற மறுக்க முடியாத உண்மையை அவர்களால் ஜீரணிக்க முடிகிறதா? கல்லை தெய்வமாக நம்பி மோசம் போகும் உலகியல் அறிஞர்களின் எண்ணிக்கை தெரியுமா?
இறந்தவர்கள் இறந்தவர்கள்தான்; அவர்கள் இறந்த பிறகும் உயிருடன் இருப்பதாக நம்பி, அவர்களால் மற்றவர்களின் கோரிக்கைகளை கேட்க முடியும், கோரிக்கைகளை நிறைவேற்றித்தர முடியும் என்பது மூட நம்பிக்கையாகும் என்ற இறைவனின் அழகிய உபதேசத்தை ஜீரணிக்க முடியாத எஞ்சினியர்கள் மற்றும் பலதுறை அறிஞர்கள்களின் எண்ணிக்கை தெரியுமா?
அல்லாஹ்வால் இறக்கப்பட்டதை மட்டுமே மார்க்கமாக எடுத்து நடக்க வேண்டும். மனித யூகங்களை மார்க்கமாக எடுத்து நடப்பது, நம்பிச் செயல்படுவது மோசம் போய் நரகில் கொண்டு சேர்க்கும் செயலாகும் என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கையை ஜீரணிக்க முடியாத முஸ்லிம் அறிஞர்களின் உலகியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை தெரியுமா?
இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறப்பிற்குப்பின் உண்டான மத்ஹபுகள், தரீக்காக்கள், மற்றும் பல சடங்குகள் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராதவை பின்பற்றக் கூடாதவை என்பதை உரிய குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் நிலை நிறுத்தினாலும் அவற்றை ஜீரணிக்க முடியாத முஸ்லிம் அறிஞர்களின் உலகியல் பட்டதாரிகள் எண்ணிக்கை தெரியுமா?
அல்லாஹ் இந்த உம்மத்திற்கு கொடுத்த மார்க்கம் இஸ்லாம். பிரச்சார பணி புரிகிறவர்கள் தங்களை முஸ்லிம் என்றே அழைத்துக்கொள்ள வேண்டும் என்பது அல்லாஹ்வின் அழகிய உபதேசமாக இருந்தும் (41:33) அதனை ஜீரணிக்க முடியாமல் தங்கள் சொந்த கற்பனையில் தோன்றிய காரணங்களை காட்டி பல இயக்கங்களாக பிரிந்து செயல்படுவதை நியாயப்படுத்தும் முஸ்லிம் அறிஞர்களின் உலகியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை தெரியுமா?
இப்படி எண்ணற்றோர், கோடிக்கணக்கானோர் சத்தியத்தை ஜீரணிக்க முடியாமல் அசத்தியத்தை அணைத்துக்கொள்ளக் காரணம் என்ன? காரணம், அவர்களின் உள்ளங்களில் ஏற்கனவே ஊறிப்போயிருக்கின்ற, புரையோடிப் போயிருக்கிற உண்மைக்கு புறம்பான தத்துவங்களேயாகும். உள்ளங்களில் புரையோடிப் போயிருக்கிற குருட்டுத் தத்தவங்களை விட நம்மைப் படைத்த எஜமானனாகிய அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடி பணிவதே அடிமையாகிய நமது நீங்காக் கடமையாகும் என்பதை தெளிவாகக் புரிந்து கொண்டவர்களே வெற்றியடைவார்கள். அவர்களால் மட்டுமே அல்லாஹ்வின் கட்டளை என்று அறிந்த மாத்திரத்தில் அவர்களால் ஜீரணிக்க முடியாவிட்டாலும், தங்களின் மனோ இச்சைகளை தூக்கி எறிந்து விட்டு, அல்லாஹ்வின் கட்டளைக்கு அடி பணிய முடியும்.
இப்ராஹீம் (அலை) அவர்களின் உள்ளம் ஜீரணித்தா அருமை மனைவியையும், பாசமுள்ள மகனையும் பாலைவனத்தில் விட்டுச் செல்லத் துணிந்தார்கள்? எண்ணிப் பாருங்கள். துள்ளித் திரியும் அருமை மகனை அறுத்துப் பலியிடத் துணிந்தார்கள்? எண்ணிப் பாருங்கள். ஆம்! தங்கள் பகுத்தறிவை எஜமானனாகக் கொள்ளாமல், படைத்த அல்லாஹ்வை மட்டுமே தங்கள் எஜமானனாகக் கொண்டவர்களால் மட்டுமே இப்படிச் செயல்பட முடியும். அல்லாஹ்வின் கட்டளைகளை ஜீரணிக்க முடியாதவர்கள் தங்கள் பகுத்தறிவை தங்களின் எஜமானனாகக் கொண்டுள்ளார்கள் என்பதில் ஐயமுண்டா?
பகுத்தறிவால் ஜீரணிக்க முடிந்த அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்து நடப்பவர்கள், பகுத்தறிவுக்கு அடி பணிந்தார்களா? அல்லது படைத்த அல்லாஹ்வுக்கு அடி பணிந்தார்களா? இதனை எப்படி அறிந்து கொள்வது? அதனால்தான் பகுத்தறிவால் ஜீரணிக்க முடியாத சில விஷயங்களையும் அல்லாஹ் கட்டளைகளாகக் கொடுத்து மனிதனைச் சோதிக்கிறான்.
பகுத்தறிவை புறம் தள்ளி, அல்லாஹ்வின் தெளிவான கட்டளைக்கு அடி பணிகிறவன் வெற்றி பெறுகிறான், இப்றாஹீம்(அலை) அவர்கள் வெற்றி பெற்றது போல்.
அல்லாஹ்வின் கட்டளையைப் புறந்தள்ளி, தனது பகுத்தறிவுக்கு அடிபணிகிறவன் தோல்வியடைந்து நரகம் புகுகின்றான், ஷைத்தானைப்போல்.
அல்லாஹ்வுக்கு மட்டுமே சுஜூது செய்ய வேண்டியவன், செய்து கொண்டிருந்தவன், நெருப்பால் படைக்கப்பட்ட தன்னைவிட, மண்ணால் படைக்கப்பட்ட படைப்பான ஆதமுக்கு சுஜூது செய்வதா? என்பதுதானே ஷைத்தானின் பகுத்தறிவின் வாதம்? ஆம்! தனது பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்தான்; தன்னையும், ஆதத்தையும் படைத்த இறைவனின் கட்டளையைப் புறந்தள்ளினான்; விளைவு? நரகம் புகுந்தான். அதே போல் அல்லாஹ்வின் கட்டளையை ஜீரணிக்க முடியவில்லை என்பதற்காக பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நாசமடைந்து நரகம் புக நேரிடும். அல்லாஹ் அதைவிட்டும் பாதுகாப்பானாக
மோசம் போகும் மனிதர்கள்