பள்ளிவாசலுக்குள் வந்து சீட்டியடித்து கைதட்டி.....

ஒரு முறை ரமழானில் அந்த நகரத்தில் வகுப்புக் கலவரம் நடைபெற்றது. அந்த நகரைச் சார்ந்த ஒருவரை சந்தித்து என்ன நடந்தது என்று கேட்டேன். அவர் கூறினார்:--

இரவு நேரம் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தராவீஹ் தொழுது கொண்டிருந்தனர். திடீரென சாலையில் கூச்சல் குழப்பம்.....! மற்றொரு வகுப்பாரின் ஊர்வலமும் மேளதாளத்துடன் வந்து கொண்டிருந்தது. மேளச் சத்தம் காதைப் பிளந்தது. ஊர்வலம் பள்ளிவாசலை நெருங்கியபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த முஸ்லிம்கள் ஊர்வலக்காரர்களை நோக்கி பள்ளிவாசலில் தொழுகை நடந்து கொண்டிருக்கின்றது. ஆகவே பள்ளிவாசலுக்கு அருகில் மேளம் அடிக்காதீர்கள் என்றனர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இரு தரப்பினருக்கும் பேச்சு வார்த்தை முற்றி கைகலப்பு தொடங்கியது. பிறகு அது கலவரமாக மாறிவிட்டது.

நான் சொன்னேன்: இது உங்களுடைய வழிமுறை....! நபி அவர்களின் நடைமுறை என்ன தெரியுமா? நபி அவர்கள் இஸ்லாமிய அழைப்புப் பணியைத் துவங்கிய ஆரம்ப காலத்தில் மக்கா நகரும் கஃபா இறை ஆலயமும் இணைவைப்பாளர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தன. அவர்கள் நபி அவர்களையும், நபித்தோழர்களையும் அவமானப்படுத்திக் கொண்டிருந்தனர். நபி அவர்களும் தோழர்களும் தொழுது கொண்டிருக்கும்போது எதிரிகள் கூச்சல் போடுவார்கள், விசில் அடிப்பார்கள், கைகளை தட்டுவார்கள் இதுதான் எங்கள் வணக்கமுறை என்று கூறுவார்கள். அவர்களுடைய செயல் குறித்து அல்குர்ஆன் கூறுகிறது:

அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கைதட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்கு கூறப்படும்) நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள். அல்குர்ஆன் 8:35

இந்த குர்ஆன் வசனத்திற்கு விரிவுரையாளர்கள் என்ன விளக்கம் தந்துள்ளார்கள் என்பதை பார்ப்போம்.

அபுதுல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

மக்காவிலுள்ள இணைவைப்பாளர்கள் கஃபா ஆலயத்திற்குள் வந்து கை தட்டுவார்கள்; விசில் அடிப்பார்கள். அவர்கள் இவ்வாறு செய்வதின் நோக்கம் தொழுகையிலிருந்து நபி அவர்களின் கவனத்தைத் திருப்ப வேண்டும்; இடையூறு விளைவிக்க வேண்டும் என்பதே! இமாம் ஜுஹ்ரி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்கள் இப்படியெல்லாம் செய்வதன் நோக்கம் முஸ்லிம்களை கேலி செய்வதுதான்! (தப்ஸீர் இப்னு கதீர்)

அவர்கள் (மக்கா காஃபிர்கள்) இறையில்லத்தை நிர்வாணமாக வலம் வருவார்கள்; தம் கைவிரல்களைக் கோர்த்த வண்ணம் விசில் அடிப்பார்கள்; கை தட்டுவார்கள்; நபி அவர்கள் குர்ஆன் ஓதும்போது இடையூறுகள் செய்வார்கள். (தஃப்ஸீரே நஸ்வி)

அண்ணல் நபி அவர்கள் காஃபாவில் தொழும்போது இடது பக்கம் இரண்டு பேரும், வலது பக்கம் இரண்டு பேரும் நின்று கொண்டு கை தட்டி விசில் அடித்து தொழுகைக்கு இடையூறு செய்வார்கள். (தப்ஸீர் அல்மஸ்ஹரி)

நபி அவர்கள் மக்கா நகரில் 13 ஆண்டுகள் இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அந்தக் காலகட்டம் நெடுகிலும் மக்காவாசிகள் அண்ணலாரிடம் இந்தப் போக்கைத்தான் கையாண்டனர். ஆனால் இறைத்தூதர் அவர்கள் அந்த மக்கா வாசிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அன்றைக்கு நபி அவர்களுக்காக சஹாபாக்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கத் தயாரக இருந்தவர்கள் இறைத்தூதர் நினைத்திருந்தால் எதிர் நடவடிக்கை எடுத்திருக்கலாம் ஆனால் எடுக்கவில்லை. பொறுமையை கடைப்பிடித்தார்கள்.

இணை வைப்பாளர்களின் குறும்புத்தனமான செயல்களை முற்றிலும் புறக்கணித்து விட்டு இறை வழியில் மேலும் கடுமையாக உழைத்தார்கள். பிறகு ஒரு நேரம் வந்தது. அல்லாஹ் நிலைமையை முற்றிலும் மாற்றி விட்டான். ஏன் இணைவைப்பாளர்களே இல்லாமல் போய்விட்டனர்.

நபி அவர்கள் காலத்தில் வேண்டுமென்றே இறையில்லத்தில் நுழைந்து மக்கள் கூச்சலும் கூப்பாடும் போட்டனர். ஆயினும் நபி அவர்கள் எதிர் நடவடிக்கை எடுக்காமல் பொறுமை காத்தனர். ஆனால் இன்றோ பள்ளிவாசலுக்கு வெளியே சாலையில் செல்பவர்கள் மேளம் அடித்துக் கொண்டோ கூச்சல் போட்டுக் கொண்டோ போகிறார்கள் எனில் உடனே நாம் அவர்களுடன் மோதலுக்குத் தயாராகிரோம். நபி அவர்களுடைய நடமுறைதான் இஸ்லாம் என்றால், நம் நடமுறையை என்னவென்பது?