உயிரைப் பலி வாங்கும் வீண் விரயம்

நிம்மதியான வாழ்க்கையை வாழ, பணம் தான் முக்கியம் என பெரும்பாலோர் நினைக்கின்றனர். பணம் பத்தும் செய்யும் என்கின்ற ரீதியில் பணத்தைக் கொண்டு அமைதியும் பெறலாம் என்ற எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது.


வாழக்கையில் நலமாக வாழ, பணத்தை ஈட்டுவதற்காக அனைத்து சுகங்களையும் அர்ப்பணித்து விட்டு முன் பின் அறியாத அயல் நாடுகளுக்குப் பயணம் செய்யும் மோகம் நம் சமுதாயத்தில் மிகவும் அதிகமாகவே இருக்கின்றது. பொருளாதாரத்தை ஈட்டுவதற்குப் பயணம் மேற்கொள்வதை இஸ்லாம் தடுக்கவில்லை. மாறாகத் தேடத் தான் சொல்கின்றது.


தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 62:10)


ஆனால் சுகம் காண வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் யதார்த்த நிலை தான் என்ன? அவர்கள் கண்ட இலக்கை அடைந்து விட்டார்களா? அல்லது அடையத் தான் போகின்றார்களா? என்று கேட்டால் சுகங்களைக் காணச் சென்றவர்களின் நிலை சோகக் கதையாகத் தான் இருக்கின்றது.


ஆம்! சொகுசைப் பெறுவதற்குப் பயணித்தோர் தற்கொலை என்ற சோகமான முடிவிற்கு இலகுவாகப் பயணித்து விடுகின்ற நிலை இன்று வளைகுடா நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றது.


வளைகுடா நாடுகளில் ஒன்றான, நம்மவர்கள் அதிகமாகப் பயணிக்கும் நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் (யூ.ஏ.இ.) மட்டும் தற்கொலை செய்து கொண்டோரின் புள்ளி விவரம் இதோ!


கடந்த மூன்று மாதங்களில் தற்கொலை செய்து கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 20.
கடந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 50.


இந்தப் புள்ளி விபரம் ஐக்கிய அரபு அமீரகத்துடையது மட்டுமே! இதில் மற்ற வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத், ஓமன் போன்ற நாடுகளின் புள்ளி விபரம் அடங்கவில்லை.


மேற்கூறிய புள்ளி விபரத்தை ஆங்கில நாளேடான ஏன்ப்ச் சங்ஜ்ள் என்ற பத்திரிகை 18.01.2006 அன்று வெளியிட்டது.


ஆனால் 27.01.2006 அன்று Emirates Evening Post என்ற வெளியீடோ, கடந்த ஆண்டில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 80 என்று கூறுகின்றது.


தற்கொலை செய்தவர்களில் பெரும்பாலோர் இந்தியாவில் தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என பத்திரிகைகள் எழுதுகின்றன.


அனைத்து சுகங்களையும் அர்ப்பணித்து விட்டு சொகுசு காணச் சென்றவர்களின் இந்தச் சோகமான முடிவுக்குக் காரணம் என்ன?


பிரதான காரணமாக பொருளாதார நெருக்கடியுடன் கூடிய மோசமான வாழ்க்கை நிலையும், நிலைக்காத திருமண பந்தங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்களின் தற்கொலை முடிவுக்குக் காரணம் என்கின்றார், தற்கொலை செய்ய முனைவோருக்கு வாழ வழி காட்ட ஆரம்பிக்கப்பட்ட அமைப்பான பார்வசி பந்து நலச் சங்கத்தின் தலைவர் ஷம்சுத்தீன்.


தினச் செலவுகள் வானளாவிய அளவிற்கு உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வருமானம் அதே நிலையில் தான் உள்ளது. இங்கு வரும் பெரும்பாலோர் அதிகமான எதிர்பார்ப்புகளுடன் விசாவிற்காக அதிகமான பணத்தைக் கட்டி விட்டு வருகின்றனர்.
குறைந்த மற்றும் நடுத்தரமான வருமான வர்க்கத்தினரிடம் உரையாடியதில் பெரும்பாலோர் இந்தியாவில் வசிக்கும் தங்கள் குடும்பத்தினர் தங்களுடைய பொருளாதார நிலையைக் கவனத்தில் கொள்ளாமல் மிகவும் சொகுசாக வாழ நினைக்கின்றனர்; இதற்காக குடும்பத்தினரின் வருமானதாரரான தங்களிடம் அளவிற்கு அதிகமாக பணத்தைக் கேட்பதாகவும், தங்களை ஒரு பணம் செய்யும் இயந்திரமாகக் கருதுவதாகவும் குறை கூறுகின்றனர் என்கிறார் ஷம்சுத்தீன். (நன்றி: GulfNews 18.01.2006)


வெளிநாட்டிற்குத் தன்னுடைய கணவரோ, தந்தையோ அல்லது சகோதரனோ சென்று விட்டால் வீட்டில் நிலைமையே மாறி விடுகின்றது. ஏராளமான வீண் விரயங்கள் அதுவும் மார்க்கத்தின் பெயரால் நடத்தப் படுகின்றன.


இன்றைக்கு, குழந்தை பிறந்த விழா, பெண் பூப்பெய்க்கும் போது எடுக்கப்படும் விழா, கத்னா செய்யும் போது செய்யப்படும் அனாச்சாரங்கள் முதல் திருமண தடபுடல் விரயங்கள் வரை அனைத்திலும் பெண்கள் தான் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.


பல குடும்பங்களில் ஆண்கள் இந்த அனாச்சாரங்களையும், மார்க்கத்திற்கு முரணான செயல்களையும் விரும்பா விட்டாலும் பெண்கள் அவர்களை வற்புறுத்தி மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் விரயம் செய்ய வைக்கின்றனர்.


பின்வரும் வசனங்கள் ஆண்களுக்காக மட்டும் அருளப்பட்டவை அல்ல! மாறாக, பெண்களுக்கும் சேர்த்துத் தான் என்பதைச் சகோதரிகள் உணர வேண்டும்.


உமது கையைக் கழுத்தில் கட்டப்பட்டதாகவும் ஆக்காதீர்! ஒரேயடியாக அதை விரித்தும் விடாதீர்! (அவ்வாறு விரித்தால்) இழிவடைந்தவராக வறுமைப்பட்டு அமர்ந்து விடுவீர்! (அல்குர்ஆன் 17:29)


விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:27)


தன்னுடைய அடியார்களின் தன்மையைப் பற்றி வல்ல அல்லாஹ் பின்வருமாறு சிலாகித்துச் சொல்கின்றான்.


அவர்கள் செலவிடும் போது விரயம் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். அதற்கு இடைப்பட்ட நிலையாகவே அது இருக்கும். (அல்குர்ஆன் 25:67)


மேலே கூறப்பட்ட வசனங்கள் அல்லாமல் ஏராளமான வசனங்கள் குர்ஆனில் செலவு செய்வதைப் பற்றியும் விரயத்தை எச்சரித்தும் உள்ளன. அவ்வாறே நபிமொழிகளும் உள்ளன.


விரயம் செய்வதால் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதோடு மட்டுமல்லாமல் உலகிலும் ஏராளமான துன்பங்களுக்கு உள்ளாக நேரிடுகின்றது.


ஒருவன் இரவு பகலாக, பாலைவனத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது வீட்டில் இருப்பவர்களோ, அந்தப் பணத்தை விரயம் செய்து விட்டு மேலும் அதிகமாகப் பணத்தைத் தர வற்புறுத்துகின்றனர்.


இதனால் எல்லா சுகங்களையும் அர்ப்பணித்து விட்டுப் பாலைவனத்தில் குடும்பத்திற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் அவன் தற்கொலை முடிவைக் கையில் எடுக்கின்றான்.


சோதனைகளைத் தாங்கிக் கொள்ளும் மன வலிமை படைத்த ஆண் மகனையே இந்த விரயம் தற்கொலையின் பால் கொண்டு செல்கின்றது என்றால் விரயத்தின் விளைவு எவ்வளவு மோசமானது என்பதை அறியலாம்.


அது மட்டுமின்றி பார்ப்பதை எல்லாம் அடைய வேண்டும் என்ற எண்ணம் பெண்களிடம் அதிகம் உண்டு. தன்னுடைய பொருளாதார வசதி இடம் கொடுக்காவிட்டாலும் விரும்பியதை வாங்கியே தீர வேண்டும் என்று பெண்கள் நினைக்கின்றனர். அதற்காக வீட்டின் வருமானதாரரான ஆண்களை வற்புறுத்துகின்றனர்.


இவர்களின் வற்புறுத்தலுக்காகக் கடனை வாங்கி இவர்களின் ஆசையை நிறைவேற்றும் ஆண்கள், கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டால் தற்கொலை என்ற சோக முடிவின் பால் பயணிக்கின்றனர்.


தன்னிடம் இல்லாததை மற்றவர்களிடம் பார்க்கும் போது அல்லது தன்னை விடப் பொருளாதாரத்தில் மேன்மையான வர்களைக் காணும் போது எப்படிப்பட்ட அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்பதை மிக சிறப்பாக நபி (ஸல்) அவர்கள் பின்வரும் நபிமொழியில் விளக்கியுள்ளனர்.


''செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால் உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களைப் பார்க்கட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 6290


இது மட்டுமின்றி தாங்கள் செய்யும் விரயத்திற்கும், கணவன் இல்லாத போது வீட்டில் நடப்பவற்றிற்கும் வல்ல இறைவனிடத்தில் பெண்களும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.


உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான். (நூல்: புகாரீ 2409)


மேலும் கணவன் கஷ்டப்படும் போது மனைவி ஆறுதலாக இருந்து அவனுக்குப் பக்க பலமாக இருக்க வேண்டும் என்ற ஓர் உன்னதமான முன்னுதாரணத்தையும் நபிமொழிகளில் காணலாம்.


எனவே வல்ல அல்லாஹ் அருளியதைக் கொண்டு மன நிறைவு கொண்டு, மேலும் பொருளாதார வளத்திற்காக அவனிடமே மன்றாடி, அவன் காட்டித் தந்த வழியில் நம்முடைய பொருளாதாரங்களைச் செலவழித்தால் வாழ்க்கை பூந்தோட்டமாக அமையும், இன்ஷா அல்லாஹ். அதற்கான பாக்கியத்தை வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அருள்வானாக!