நபித்தோர்கள் வாழ்வினிலே ..... ஒரிறைக் கொள்கை அபூ ரபீஹா

அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் என்னிடம் என் தாயார் வந்திருந்தார். அப்போது அவர் இணை வைப்பவராக இருந்தார். நான் அல்லாஹ்வின் தூதரிடம், ''என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவைப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்ளட்டுமா?'' என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ''ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா (ரலி) நூல்கள்: புகாரீ 2620, முஸ்லிம் 1671


அஹ்மதுடைய (15529) அறிவிப்பில் சில பொருட்களை அன்பளிப்பாகக் கொண்டு வந்ததாகவும் அதை அஸ்மா (ரலி) அவர்கள் மறுத்து விட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடர் குறை கூறப்பட்டுள்ளது)
அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பல மனைவிகள் இருந்தனர். அவர்களில் ஒருவர் குதைலா (சிலர் கைலா என்று குறிப்பிடுகின்றனர்) குதைலா அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் தலாக் விட்டு விட்டார்கள். இவர்கள் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பிறந்தவர்கள் தாம் அஸ்மா (ரலி) அவர்கள். இஸ்லாம் வந்த போது தன் மகள் அஸ்மாவுடன் இணைந்து வாழ, அவர்களின் உதவியை நாட குதைலா எண்ணினார்கள். ஆனால் ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருந்த அஸ்மா (ரலி) அவர்கள், பெற்ற தாயை இணைத்துக் கொள்ளத் தயங்கினார்கள். மார்க்கம் அனுமதித்தால் மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும் என்ற உறுதியான நம்பிக்கையில் தான் நபிகளாரிடம் தன் தாயின் விருப்பத்தையும் அவர் இணை வைப்பவர் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.


பத்து மாதம் சுமந்த தாயை யாரும் சேர்த்துக் கொள்ளத் தயங்க மாட்டார்கள். ஆனால் இஸ்லாத்தின் உயிர் நாடியான ஓரிறைக் கொள்கையில் யாருக்கும் விட்டுக் கொடுக்கத் தயங்காத அஸ்மா (ரலி) அவர்கள், தன் தாய் இணை வைப்புக் கொள்கையில் இருப்பதால் அவரை நபிகளாரின் அனுமதியின்றி சேர்த்துக் கொள்ளத் தயங்கினார்கள்.


இஸ்லாத்தின் உயிர் நாடி ஏகத்துவம்
மறுமை நாளில் அல்லாஹ் மன்னிக்காத பாவங்களின் பட்டியலில் முதலிடம் பெறுவது இணை வைப்பாகும். அல்லாஹ்விற்கு இருப்பதைப் போன்ற சக்தி மற்ற எவரிடம் இருப்பதாக நாம் கருதினாலும் நாம் இணை வைப்பு என்ற மாபாதகமான செயலில் ஈடுபட்டவர்களாகக் கருதப்படுவோம்.


இணை வைப்பதைப் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதரும் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? இணை வைப்பு என்பது....


பகிரங்க வழிகேடு!
மாபெரும் அநீதி!
மிகப் பெரிய பாவம்!
மறுமையில் மன்னிப்புக் கிடையாது!
சுவர்க்கம் ஹராமாக்கப்படும்!


தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார். (அல்குர்ஆன் 4:116)


லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது ''என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்'' என்று குறிப்பிட்டதை நினை வூட்டுவீராக! (அல்குர்ஆன் 31:13)


தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (அல்குர்ஆன் 4:48)


''மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்'' எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். ''இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' என்றே மஸீஹ் கூறினார். (அல்குர்ஆன் 5:72)


தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (அல்குர்ஆன் 4:48)


ஆகிய வசனங்களும் கீழ்க்காணும் ஹதீஸ்களும் இணை வைப்பின் பயங்கரத்தை எடுத்துரைக்கிறன.


''எனது சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் மரணிக்கின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்'' என இறைவனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் சுபச் செய்தியைக் கூறினார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான், ''அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?'' என்று கேட்டேன். ''அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும் தான்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்கள்: புகாரீ 1237, முஸ்லிம் 153


''பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்'' என்று நபித் தோழர்கள் கூறினார்கள். ''(பெரும் பாவங்கள்) அல்லாஹ்விற்கு இணை வைத்தல், பெற்றோருக்கு நோவினை செய்தல்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்கள்: புகாரீ 2654, முஸ்லிம் 143


மேலே நாம் கூறிய வசனங்களும் ஹதீஸ்களும் தான் இணை வைப்புக் கொள்கையில் இருந்த, பெற்ற தாயைக் கூட சேர்த்துக் கொள்வதற்கு அஸ்மா (ரலி) அவர்களுக்குத் தயக்கத்தை ஏற்படுத்தியது.


படைத்த இறைவன் இவ்வளவு தெளிவாக இணை வைப்பின் பயங்கரத்தைக் கூறியிருந்தும் கூட இஸ்லாத்தை ஏற்ற பலர் இன்றும் இணை வைப்புக் காரியத்தில் ஈடுபட்டு வருவது மிகவும் வேதனைக்குரியது.


படைத்தவனிடம் மட்டும் பிராத்திக்க வேண்டியவர்கள் படைப்பினங்களிடம் பிராத்தனை செய்கிறார்கள். எந்த நேரத்தில் கேட்டாலும் எத்தனை பேர் கேட்டாலும் எங்கிருந்து கேட்டாலும் பதிலளிக்கும் ஆற்றல், நம்மைப் படைத்த இறைவனுக்கு மட்டுமே உண்டு. ஆனால் தர்ஹாக்களில் சென்று எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்ட ஒருவரிடம் தமிழ் தெரிந்தவர் தமிழிலும் மலையாளம் தெரிந்தவர் மலையாளத்திலும் தெலுங்கு தெரிந்தவர் தெலுங்கு மொழியிலும் இவ்வாறு அவரவர் மொழிகளில் எத்தனையோ மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு அழைக்கிறார்கள். இவ்வாறு அழைப்பதும், நமது பிராத்தனைகளுக்கு இந்த அவ்லியா பதில் சொல்வார் என்று கூறுவதும் தெளிவான இணைவைப்பு இல்லையா? இந்நிலையில் மரணித்தால் அல்லாஹ் மன்னிப்பானா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


அஸ்மா (ரலி) அவர்களின் தாயார் இணை வைப்புக் காரியத்தைச் செய்வதற்குத் தூண்டவில்லை. சேர்ந்து வாழத் தான் பிரியப்பட்டார்கள். அதைக் கூட அஸ்மா (ரலி) அவர்கள் இணை வைப்பின் குற்றத்திற்கு வந்து விடுமோ என்று பயந்து, நபிகளாரிடம் தீர்ப்பு கேட்டுள்ளார்கள் என்றால் தெளிவான இணை வைப்பில் ஈடுபடுபவர்கள், எந்த அளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? அஸ்மா (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த இந்தச் சம்பவம் இணை வைப்பில் ஈடுபடுவோருக்கு ஓர் அழகிய படிப்பினை இல்லையா?