செல்வந்தர்களே! நீங்கள் சேமித்து வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் செல்வத்தைக் கொண்டு நீங்கள் உண்மையில் அனுபவிப்பது எவற்றை என்பதை நிதானமாகச் சிந்தியுங்கள். எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் மனிதன் ஒரு வயிற்றுக்குத்தானே சாப்பிட முடியும். இரண்டு வயிற்றுக்கு சாப்பிட முடியுமா? இரண்டு வாகனங்களில் தான் பிரயாணம் செய்யமுடியுமா? மனிதன் அனுபவிப்பதற்கென்று அல்லாஹ் ஒதுக்கியதற்கு மேல் ஒரு ஊசி முனை அளவுதானும் அனுபவிக்க முடியுமா? இன்னும் தெளிவாகச் சொன்னால் ஒரு ஏழை நடுத்தர வர்க்கத்தினன் அனுபவிக்கும் உலக சுகங்களைக்கூட அனுபவிக்க விடாமல் உங்களது செல்வம் உங்களைத் தடுத்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
செல்வத்தை பெருக்குவதற்கு அதே லட்சியமாக வாழ்ந்து வரும் மனிதனைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான். "செல்வத்தை பெருக்கும் ஆசை உங்களைப் பாராக்கி விட்டது" அல்குர்ஆன் (102:1) என்று அல்லாஹ் கூறுவது மறுமையை மறந்த நிலைதான். ஆனால் செல்வந்தர்களில் பலர் இவ்வுலகில் அவர்கள் அனுபவிக்க வேண்டியவைகளையும் அனுபவிக்காமல் மறந்து செல்வங்களைச் சேர்ப்பதில் மூழ்கி இருப்பதையே பார்க்க முடிகிறது. ஆக பெரும்பாலான செல்வந்தர்கள் செல்வங்களைச் சேர்த்து குவிப்பதில் குறியாக இருப்பது அனுபவிப்பதற்காக அல்ல, மக்களிடையே கிடைக்கும் பெரும் செல்வந்தன் என்ற பெயரையும், அந்த மக்கள் கொடுக்கும் மரியாதையையும், கூழைக்கும்பிடையும், உலகில் கிடைக்கும் அற்ப பதவிகளையும் எதிர் பார்த்தே. இவற்றால் தனக்கு இவ்வுலகில் உரிய பயனில்லை, மறுமயிலும் பயனில்லை அதற்கு மாறாக மிகப்பெரும் வேதனை தண்டனை காத்திருக்கிறது என்பதை அறியாதிருக்கிறார்கள்.
ஆக எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருந்தாலும் அவன் உண்டு கழித்தது, உடுத்தி கிழித்தது, மறுமைக்கென்று அவன் முன்கூட்டியே அனுப்பி வைத்தது மட்டும்தான் அவனுடையதாகும். எஞ்சிய செல்வங்கள் அனைத்தும் அவனது வாரிசுகளுக்குரியதாகும். அந்த வாரிசுகளாவது அது கொண்டு அனுபவிக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. அந்த செல்வங்களைப் பங்கிட்டு கொள்வதில் கூடப்பிறந்த அண்ணன் தம்பிகளிடையே சண்டை சச்சரவு, அடி தடி தகராறு, கோர்ட் கச்சேரி என்ற அவல நிலையையே பார்க்க முடிகிறது. செல்வந்தன் சேர்த்து வைத்த செல்வம் அவனது வாரிசுகளையும் நிம்மதி இழக்கச் செய்து வழக்கு வம்பு என்று அச்செல்வம் கரைந்து போகும் நிலையே ஏற்படுகிறது.
மிதமிஞ்சிய பெரும் சொத்து சுகங்களைச் சேர்த்து வைத்து விட்டுச் சென்றவர்களின் மக்கள், சொத்தைப் பிரித்துக் கொள்வதில் சண்டை சச்சரவு, வழக்கு வம்பு என செல்வத்தை கரைத்து வருவதையும் பார்த்து வருகிறோம். அண்ணன் தம்பிகளிடையேயுள்ள தகராறினால் பல சொத்துக்கள் பாழடைந்து கிடப்பதையும் பார்த்து வருகிறோம். இப்படி பெருங்கொண்ட சொத்து சேர்த்து வைத்த குடும்பங்கள் அவற்ரை முறையாக அனுபவிப்பதற்கு மாறாக சீரழிந்து கொண்டு வருவதையே பார்க்கிறோம். 10 தலை முறை 20 தலை முறை என சொத்து சேர்த்து விட்டுச் செல்கிறார்கள். அவர்களது வாரிசுகள் அவற்றை அழித்துவிட்டு பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்படுவதயும் நாம் பார்த்துத்தான் வருகிறோம்.
வாரிசுகளுக்கு நீங்கள் அளிக்கும் செல்வம்!
செல்வந்தர்களே! இதை எல்லாம் இங்கு ஏன் குறிப்பிடுகிறோம் தெரியுமா? பெரும் சொத்துக்களை சேர்த்து வைத்து விட்டுச் செல்கிறவர்கள் தங்களின் வாரிசுகளுக்குப் பெரும் துரோகத்தைச் செய்து விட்டுச் செல்கிறார்கள் என்பதை புரிய வைக்கத்தான். அவர்களின் இவ்வுலக வாழ்க்கையும், மறு உலக வாழ்க்கையும் பாழாக்குகிறார்கள் என்பதே உண்மையாகும். சொத்து சேர்க்கும் பேராசையாகப்பட்டது உங்கள் வாரிசுகளை நல்லொழுக்க முடையவர்களாக, மார்க்கத்தில் பேணுதல் உடையவர்களாக பயிற்றுவிப்பதை விட்டும் உங்களைத் தடுத்து விடுகிறது. அதற்கு மாறாக உங்களின் மிதமிஞ்சிய செல்வம் அவர்களைப் பல தவறான வழிகளில் இட்டுச் செல்ல வழிகாட்டுகிறது. பல தீய பழக்க வழக்கங்களுக்கும் ஆளாகி விடுகிறார்கள். பல செல்வந்தக் குடும்பங்களில் இதை நிதர்சனமாகப் பார்க்க முடிகிறது.
சொந்த உழைப்பே உயர்வுக்கு வழி!
சொத்து சுகங்களைச் சேர்க்காவிட்டாலும், தங்கள் குழந்தைகளை நல்லொழுக்கம் உடையவர்களாக மார்க்கம் பேணக்கூடியவர்களாக ஐங்காலத் தொழுகைகளைப் பேணித் தொழுபவர்களாகப் பழக்குவதோடு, தங்கள் கைகளால் உழைத்து ஹலாலான முறையில் தங்களின் வாழ்வாதாரங்களைத்த் தேடிக்கொள்ள அவர்களை பயிற்றுவிப்பதே சாலச் சிறந்ததாகும். உங்கள் சம்பாத்தியத்தில் சேர்த்து வைத்ததைக்கொண்டு அவர்கள் வாழ்வதைவிட அவர்களே அவர்களது வாழ்வாதரங்களைத் தேடிக்கொள்ள பயிற்றுவிப்பதே மிக மிக ஏற்றமாகும்.
அல்குர்ஆனை பொருள் விளங்கி நீங்கள் படிப்பீர்களானால் எண்ணற்ற இடங்களில் அல்லாஹ்வுடைய பாதையில் பந்துக்களுக்கும், அனாதைகளுக்கும், மிஸ்கீன்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், கடனாளிகளுக்கும் செலவிடுவதை உற்சாகப்படுத்து வலியுறுத்தி சொல்லப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். அவற்றை நன்கு படித்து விளங்கினால் வருடா வருடம் ஜகாத் கொடுப்பது மட்டுமல்லாமல் தாராளமாக இந்த வகைகளுக்கு அதிகம் அதிகமாக செலவிடுவதை எந்த அளவு அல்லாஹ் வலியுறுத்துகிறான் என்பதை விளங்க முடியும். அந்த வசனங்கள் வருமாறு:
2:3,177,195,219,254,261,267,270-274,3:92,134,4:34,38,39,95, 5:64, 8:3,36,60,72, 9:20,34,44,53,54,91,98,99,13:22,14:31,16:75, 22:35,24:33,25:7,26:88,89,28:54,29:15, 32:16,34:39,35:29,36:47,42:38, 47:38,57:7,10,59:8,60:10,11,63:7,10,64:16,65:7,70:24
இந்த வசனங்கள் அனைத்தையும் கவனமாக பொருள் அறிந்து படித்துப் பார்ப்பவர்கள், அல்லாஹ் அளித்துள்ள செல்வத்தை எந்த அளவு இல்லாதவர்களுக்கும் கொடுத்து
உதவ வேண்டுமென்பதை விளங்க முடியும்.
செல்வந்தர்களே ............