தஸ்பீஹ் மணி

தஸ்பீஹ் மணி இதனை எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, எல்லாம் வீடுகளிலும் இது இருக்கும். ஹஜ்ஜிற்கு செல்பவர்கள் ஜம் ஜம் தண்ணீருடன் தஸ்பீஹ் மணியையும் வாங்கி வந்து தங்கள் உறவினர் அன்பர்களுக்கு கொடுத்து மகிழ்வர். நம்மில் சிலர் தஸ்பீஹ் மணியை ஓதி எண்ணி முடித்தவுடன் கண்ணில் ஒற்றி முத்தமிடவும் செய்கிறார்கள். ஒரு சிலர் இதனை பேசிக்கொண்டே உருட்டிக்கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் தஸ்பீஹ் மணிக்கு பதிலாக டிக் டிக்கென்று மிஷினை அழுத்தி கொண்டிருப்பார்கள். மேலும் ஒளு இல்லாமல் தஸ்பீஹ் மணியைத் தொடக்கூடாது என்ற பழக்கமும் உள்ளது. இந்துக்களின் உத்திராட்ச மாலை, கிறிஸ்தவர்களின் ஜபமாலை இருப்பது போன்று முஸ்லிம்களிடம் இந்த தஸ்பீஸ் மணி மிக கண்னியப்படுத்தப்படுகின்றது. முஸ்லிம்களும் இதை இஸ்லாமிய நடைமுறைதான் என்று எண்ணியிருக்கிறார்கள். இது நம் நடைமுறைதானா? நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த பழக்கமா என்பதை நம்மில் பலர் சிந்திப்பதில்லை.

இன்றைய தஸ்பீஹ் மணியுடைய இடத்தில் கற்களைக் குவித்து, ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு அன்றைய சில நபித்தோழர்கள் தஸ்பீஸ் செய்ததாக இரு ஹதீஸ்கள் உள்ளன. அவை மிக மிக பலஹீனமானவையாகும். ஆதாரப்பூர்வமான நபிமொழிப்படி இது தவிர்க்கப்பட வேண்டிய ஒரு அநாச்சார (பித்அத்) செயலாகும். அதன் விளக்கத்தை பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் தஸ்பீஹ் செய்யும்போது தங்களின் வலது கைவிரல்களால் எண்ணுவதை நான் கண்டிருக்கிறேன் என அப்துல்லாஹ்பின் அம்ர்(ரழி) அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அபூதாவூத், திர்மிதி, ஹாகிம், பைஹகீ

இதன் மூலம் நபி(ஸல்) தஸ்பீஹ் செய்ய தனது கை விரல்களையே உபயோகிப்பது தெளிவாகிறது. இதற்குக் காரணம் அல்லாஹ்வும், அவனது ரசூலும் நமக்கு தெளிவாக்குவது கவனிக்கத்தக்கது.

"அந்நாளில் அவர்களின் வாய்கள்மீது முத்திரையிட்டு விடுவோம். மேலும் அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; அவர்களின் கால்களும் அவர்கள் செய்து கொண்டிருந்ததைப்பற்றி சாட்சி சொல்லும்" (அல்குர்ஆன் 36:65)

மேற்படி குர்ஆன் வசனப்படி கைகளும் கால்களும் பேசுமென்றால் நாம் உபயோகிக்கும் தஸ்பீஹ் மணி மட்டும் பேசாதா? என குதர்க்கவாதம் செய்பவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

தஸ்பீஹ் செய்கையில் நீங்கள் விரல்களால் எண்ணுங்கள். ஏனெனில், அந்த விரல்களும் (அல்லாஹ¤வால்) விசாரிக்கப்பட்டு பேச வைக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள்: அபூதாவூது, ஹாகிம்

அடுத்து சிலர் தஸ்பீஹ் மணியை கண்ணியப்படுத்துவதற்காக கண்ணில் ஒற்றிக்கொள்வதும் ஆயிரக்கணக்கில் பல்லாயிரக்கணக்கில் மதிப்பிடுவதற்காக மிஷினை கையில் வைத்து எண்ணிகொள்வதும் நபி வழி அல்ல. மாற்று மதத்தவர்கள் தங்களது ஜபமாலைகளை கண்ணியப்படுத்துவதைக் கண்டு காப்பியடித்த வழக்கமாகும். இவர்கள் கண்ணியப்படுத்தும் தஸ்பீஹ் மணிகளை நமது நபிவழி சஹாபிகள் அவமதித்து இருப்பதை காணலாம்.

நபித்தோழர்களில் பேரறிஞராக கணிக்கப்படும் அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரழி) ஒரே வழியில் இரு செய்கைகளை கண்ணுற்றார்கள். ஒரு பெண்மணி தஸ்பீஹ் மணி மூலம் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தாள். இதனைக் கண்ட அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரழி) அவர்கள் அதனைப் பிடுங்கி அறுத்தெறிந்தார்கள்.

இன்னும் சிறிது தூரம் சென்றதும் ஒருவர் சிறிய கற்களைக் குவித்து வைத்து அதன் மூலம் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தார். அதனைத் தன் காலால் எட்டி உதைத்து விட்டு,

"நீங்கள் நபித்தோழர்களைவிட கல்வியில் மிஞ்சிவிட்டீர்களா? அவர்களைவிட முந்தி விட்டீர்களா? இல்லை! நீங்கள் அனாச்சாரம் (பித்அத்) என்ற வாகனத்திலேயே சவாரி செய்கிறீர்கள்" என வன்மையாகக் கண்டித்தார்கள். இந்த நிகழ்ச்சியை சல்து இப்னு பஹ்ராம்(ரழி) அறிவித்ததாக இமாம் குர்துபீ அவர்கள் தனது 'பித்அத்துகள்' என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத இப்பழக்கத்தை விட்டொழித்து நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறையில் நமது வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொள்வதே சிறந்ததாகும்.