ஐயமும் தெளிவும்:வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளுக்கும் திருக்குர்ஆன் நபிவழியில் மட்டும் தீர்வு காண முடியாது; எனவே மத்ஹபுகள் அவசியம் என்று கூறுகிறார

படைத்தவனின் வேத நூலை மறந்து, அவனது தூதரின் வழிகாட்டுதலைப் புறக்கணித்து மனிதர்களால் எழுதப்பட்ட நூல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்ஹபு வெறியின் வெளிப்பாடு தான் இந்த கருத்து.


வாழ்க்கையின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் திருக்குர்ஆனிலும் நபிவழியிலும் தீர்வு இல்லை என்றால் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளைத் தீர்க்க முடியாமல் நபிகளார் திணறினார்களா? அல்லது 1000 வருடங்களுக்குப் பிறகு எழுதப்பட்ட நூல்களைப் பார்த்து தீர்ப்பு வழங்கினார்களா? என்ன கருத்தை சொல்ல வருகிறார்கள் இந்த மத்ஹபு வெறியர்கள்?


இவ்வாறு பேசுவதற்கும் எழுதுவதற்கும் அவர்களை ஊக்குவித்தது அவர்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் மத்ஹபு நூல்கள் தான்.


திருக்குர்ஆனுக்கு பிறகு நபி (ஸல்) அவர்களின் மிகப் பெரிய அற்புதங்களில் அபூஹனீஃபாவும் ஒருவராவார். (துர்ருல் முக்தார் முன்னுரை)


ஏனைய நபிமார்கள் என்னைக் கொண்டு பெருமையடிப்பார்கள். நான் அபூஹனீஃபாவைக் கொண்டு பெருமையடிப்பேன். யார் அவரை விரும்புவாரோ அவர் என்னை விரும்பியவராவார். யார் அவரை வெறுப்பாரோ அவர் என்னை வெறுத்தவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (துர்ருல் முக்தார் முன்னுரை)


மற்ற இறைத்தூதர்கள் நபிகளாரைக் கொண்டு பெருமையடித்தால் அதில் நியாயம் இருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் மற்ற நபிமார்களை விட சிறந்தவர்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அபூஹனீஃபாவைக் கொண்டு பெருமையடிக்கிறார்கள் என்றால் நபிகளாரை விட அபூஹனீஃபா சிறந்தவரா? இவ்வாறு நபிகளார் சொன்னார்களா? நபிகளார் மீது இட்டுக்கட்டிச் சொன்ன செய்தியல்லவா இது. மத்ஹப் வெறி அவர்களை எந்தளவுக்குக் கொண்டு போய் சேர்த்துள்ளது என்பதை பாருங்கள்.


நமது சகாக்களின் புத்தகங்களை (மத்ஹப் நூல்களை) காதால் கேட்காமல் (கண்ணால்) பார்ப்பது இரவில் நின்று தொழுவதை விட சிறந்தது. (துர்ருல் முக்தார் முன்னுரை)


கடமையான தொழுகைக்கு பிறகு சிறந்த தொழுகை இரவில் நின்று தொழுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2157)


ஆனால் அதை விடச் சிறந்தது மத்ஹப்வாதிகள் எழுதிய நூல்களை பார்ப்பதாம்.


அபூஹனீஃபா ஒரு தடவை கஅபத்துல்லாஹ்வில் தொழுதபோது அபூஹனீஃபாவே! நீர் நம்மை சரியாக அறிந்து கொண்டீர். அழகிய முறையில் பணிவிடை செய்தீர். நாம் உம்மை மன்னித்தோம். உம்மை பின்பற்றி உமது மத்ஹபில் உள்ளவர்களையும் மறுமை நாள் வரை மன்னித்தோம் என்று ஒரு சப்தம் வந்ததாம். (துர்ருல் முக்தார் முன்னுரை)


பார்த்தீர்களா எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்கிறார்கள்! நபி (ஸல்) அவர்களை பின்பற்றியவர் களுக்குக் கூட இந்த பாக்கியம் கிடையாது. ஆனால் ஹனஃபி மத்ஹபை பின்பற்றியவர்களுக்கு மட்டும் மறுமை நாள் வரையிலும் மன்னிப்பு அட்வான்ஸாகக் கிடைத்து விட்டதாம். இப்படியெல்லாம் சொல்லிக் கொடுத்தால் யார் தான் அந்த மத்ஹபை விட்டு வருவார்கள்?


இந்த போதனைகள் தான் வாழ்க்கையின் அனைத்து பிரச்சனை களுக்கும் திருக்குர்ஆன் நபிவழியில் மட்டும் தீர்வு காண முடியாது என்று பேச வைத்துள்ளது.


திருக்குர்ஆன், நபிமொழிகளை விட மத்ஹப் சட்டங்கள் தான் மேலானது என்ற குருட்டு நம்பிக்கை இவர்களை இந்நிலைக்குக் கொண்டு போய் சேர்த்துள்ளது.


திருக்குர்ஆனும் நபிமொழிகளும் இவ்வாறு போதித்துள்ளதா? என்பதை நாம் பார்ப்போம்.


இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். (அல்குர்ஆன் 2:185)


மனிதர்களுக்கு வழிகாட்டி திருக்குர்ஆன் என்று அல்லாஹ் கூறுகிறான். எந்த மக்களுக்கு? உலகம் அழியும் வரை உள்ள மக்கள் அனைவருக்குமா? அல்லது மத்ஹபு தோன்றுவதற்கு முன்னுள்ள மக்களுக்கு மட்டுமா? எல்லா மக்களுக்கும் என்று தான் அறிவுடைய எவனும் கூறுவான். அப்படியானால் இன்றுள்ள இந்த மக்களுக்கு திருக்குர்ஆன் வழி காட்டாதா?


இவ்வுலகத்தைப் படைத்து, அதில் மனித இனத்தைத் படைத்த இறைவன், உலகம் அழியும் நாள் வரைக்கும் என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் என்பதை மிகத் துல்லியமாக அறிந்திருக்கிறான்.


அவனே முதலானவன்; முடிவானவன்; வெளிப்படையானவன்; அந்தரங்கமானவன். ஒவ்வொரு பொருளையும் அவன் அறிந்தவன். (அல்குர்ஆன் 57:3)


மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். அவன் தரை யிலும், கடலிலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை. (அல்குர்ஆன் 6:59)


படைத்தவன் முக்காலத்தையும் அறிந்தவன். எனவே அவன் இறக்கி சட்டங்களை எக்காலத்துக்கும் பொருந்தும் வண்ணமே அமைத்துள்ளான். எந்தக் காலத்தில் பார்த்தாலும் அக்காலத்திற்கு தேவையான சட்டங்கள் அவனது வேதத்தில் இல்லாமல் இருக்காது.


இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமாகவும், நேர்வழியாகவும், அருளாகவும், முஸ்லிம்களுக்கு நற்செய்தியாகவும் உமக்கு அருளினோம். (அல்குர்ஆன் 16:89)


அவனது வேதம் எல்லாவற்றுக்கும் தீர்வை அளிக்கும் என்று திருக்குர்ஆனின் மேற்கூறிய வசனம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.


திருக்குர்ஆனை ஆய்வு செய்வதன் மூலம் எல்லா விஷயங்களுக்கும் தீர்வை நாம் பெற முடியும் என்பதைத் தவிர இவ்வசனத்திற்கு வேறு என்ன பொருள் உள்ளது?


திருக்குர்ஆனின் இவ்வசனத்தை மறுக்கப் போகிறார்களா?


மறுமையின் வெற்றிக்கு திருக்குர்ஆன், நபிமொழி மட்டுமே போதுமானது. இவ்விரண்டை மட்டும் பின்பற்றியவர்கள் நிச்சயம் மறுமையில் வெற்றியடையவார்கள் என்பதற்குத் தெளிவான உத்தரவாதம் கொடுக்கப் பட்டுள்ளது.


நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்! (அல்குர்ஆன் 47:33)


நீங்கள் நம்பிக்கை கொண்டிருந் தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! (அல்குர்ஆன் 8:1)


இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 4:13)


அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மை யாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன் 4:69)


அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படு வோரே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24:52)


அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார். (அல்குர்ஆன் 33:71)


இதைப்போன்ற ஏராளமான வசனங்கள் திருக்குர்ஆன் நபிமொழிகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். அவ்வாறு செய்பவர்கள் சுவர்க்கத்தில் நுழைவார்கள் என்று தெளிவான உத்தரவாதத்தை அளிக்கின்றன. ஆனால் மத்ஹபைப் பின்பற்றினால் மறுமையில் சுவர்க்கம் உண்டு என்று எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. மாறாக திருக்குர்ஆன் நபிமொழிகளை விட்டு மற்ற வழிகளைப் பின்பற்றுபவர்கள் வழிகேடர்கள், நரகத்திற்குரியவர்கள் என்று திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கிறது.


நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக் கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண் பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத் தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும். (அல்குர்ஆன் 4:59)


அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ் வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33:36)


அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப் படும் போது 'செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24:51)


அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 4:14)


உலக மாந்தர்கள் அனைவரும் திருக்குர்ஆன், நபிமொழியின் அடிப்படையில் தான் நடக்க வேண்டும். இவை இரண்டும் உலகம் அழியும் வரை தெளிவாக வழி காட்டும் என்று இவ்வளவு தெளிவாகக் கூறியதற்குப் பிறகும் மத்ஹபு தேவை என்று கூறுபவர்கள் படைத்தவனின் அருள் மறையைக் கேவலப்படுத்துபவர்களாக, அவமதிப்பவர்களாக, மறுப்பவர்களாகக் கருதப்படுவார்கள்.


நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம், நபித்தோழர்கள் வாழ்ந்த காலம் ஆகிய இரண்டு காலங்கள், அதாவது இமாம்கள் வரும் வரை, குர்ஆனையும் நபிமொழிகளையும் மட்டுமே மக்கள் பின்பற்றி வாழ்ந்தார்கள். ஆனால் இமாம்கள் தோன்றிய பிறகு மக்கள் மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என்று மத்ஹபை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள். அப்படியானால் அதன் கருத்து என்ன?


திருக்குர்ஆனில் இல்லாத நபிமொழியில் இல்லாத ஆழ்ந்த கருத்துக்கள் மத்ஹப் நூல்களில் இருக்கின்றன.
திருக்குர்ஆனை, நபிமொழியை விட மத்ஹப் நூல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
அல்லாஹ் தெளிவுபடுத்த முடியாததை, நபிமொழிகள் தெளிவு படுத்த முடியாததை மத்ஹபு நூல்கள் தெளிவுபடுத்தும்
மத்ஹப் நூல்களை எழுதியவர் கள், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விட அறிவில் கூடியவர்கள்.
திருகுர்ஆனும் நபிமொழிகளும் சுமார் 100 வருடங்கள் வரை தான் வழிகாட்டும்; ஆனால் மத்ஹப் நூல்கள் உலகம் அழியும் வரை வழிகாட்டும்


குர்ஆன், ஹதீஸில் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு இல்லை; மத்ஹபுகளில் தான் உள்ளது என்று கூறுபவர்கள் இப்படித் தான் எண்ணுகின்றார்கள். இவ்வாறு எண்ணுபவர்கள் உண்மையில் முஃமின்களாக இருப்பார்களா?


அனைத்து பிரச்சனைகளுக்கும் மத்ஹபு நூல்கள் வழிகாட்டும் என்று கூறுபவர்கள் இன்றைய நவீன பிரச்சனைகள் அனைத்துக்கும் மத்ஹப் நூல்களிலிருந்து விடையளிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது.


ஏனெனில் எத்தனையோ நவீன பிரச்சனைகள் மத்ஹப் நூல்கள் எழுதிய காலத்தில் இருக்கவில்லை. எனவே அவற்றுக்கான தீர்வுகள் அதில் நிச்சயமாக இருக்காது.


ஆனால் படைத்த இறைவன் முக்காலத்தையும் அறிந்தவன். எனவே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளபடி அவன் தனது வேதத்தின் வாசகங்களை அமைத்துள்ளான். இதைப் போன்று நபிகளாரின் பொன்மொழிகளும் அவ்வாறே அமைக்கப் பட்டுள்ளன.


எனவே திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளைக் கொண்டு எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும் என்பது தான் உண்மை. அதைத் தான் குர்ஆன், ஹதீஸ் கூறுகின்றது.