மனிதனின் வாழ்க்கையில் மிகவும் அவசியமான ஒன்று திருமணம். இது ஜாதி, மதங்களைக் கடந்து மனித வாழ்க்கையில் அவசியமான ஒன்றாக ஒன்றிப் போய் விட்டது. ஏழை, பணக்காரன், அரசன், ஆண்டி, ஆன்மீகவாதி, நாத்திகவாதி என்று எல்லா தரப்பினரும் திருமண சுகத்தை அனுபவிக்க ஆசைப்படுகின்றனர். படைத்த இறைவன் இவ்வாறே மனிதனை ஆசை உள்ளவனாகப் படைத்துள்ளான்.
பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய மன விருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப் பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது. (அல்குர்ஆன் 3:14)
மனிதனாகப் பிறந்த எல்லா ஆண்மகனும் பெண்கள் மீது ஆசைப் படக் கூடியவனாகவே படைக்கப் பட்டுள்ளான் என்பதை இறைமறை வசனம் தெளிவு படுத்தியுள்ளது. அதனால் தான் இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகவும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத் தூதர்களும் திருமணம் முடித்து, குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.
உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். (அல்குர்ஆன் 13:38)
''திருமணம் செய்ய வசதி வாய்ப்பு உள்ளவர்கள் உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும்'' என நபி (ஸல்) அவர்களும் கட்டளை பிறப்பித்துள்ளார்கள்.
''இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும், கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப் படுத்தக் கூடியதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்கள்: புகாரீ 5066, முஸ்லிம் 2485
மனிதனின் வாழ்க்கையில் மிக அவசியமான இத்திருமணத்தை வசதியில்லாத ஜோடிகளுக்கு வசதியுள்ளவர்கள் முடித்து வைக்குமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 24:32)
மனிதனின் வாழ்க்கையில் அவசியம் தேவைப்படும் இந்தத் திருமணம், பெரும்பாலான வர்களின் வாழ்க்கையில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் புரிந்த பிறகு சில நாட்கள் அல்லது சில மாதங்களில் பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டு, அது தொடர்கதையாக மாறி விடுகிறது. பலரின் வாழ்க்கையே தொடர்பு அறுந்து அந்தரத்தில் தொங்குகிறது.
மனித வாழ்க்கையில் பிரித்துப் பார்க்க முடியாத இந்தத் திருமணம் ஏன் சில நாட்களில் கசக்கத் துவங்குகிறது? இதற்குக் காரணம் என்ன? இன்பமான வாழ்க்கை அமைய என்ன வழி வகைகள் இருக்கின்றன? என்பன குறித்து மார்க்கம் என்ன சொல்கிறது? என்று பார்ப்போம்.
இல் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமானால் முதலில் முக்கியமான ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி இருவரும் தவறு செய்பவர்களே! என்பதை ஆழமாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
தாம் எதிர் பார்த்த அளவிற்கு முழுமையாக யாரும் இருக்க மாட்டார்கள். கொஞ்சம் அப்படியும் இப்படியும் தான் இருக்கும். குறிப்பாக பெண்கள் நாம் எதிர் பார்த்த அளவிற்கு இருப்பது மிகக் கஷ்டம் தான். அவர்களிடம் பல குறைகள் நமக்கு தென்படலாம். அப்போது நாம் பொறுத்துக் கொண்டு அவளிடம் இருக்கும் மற்ற நற்பண்புகளை எண்ணி திருப்தி கொள்ள வேண்டும். அப்பெண்ணிடம் இருக்கும் சில குறைகள் கூட நமக்கு நன்மைகளை பெற்றுத் தரலாம்.
அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத் திருப்பான். (அல்குர்ஆன் 4:19)
தான் விரும்பியபடி நடக்கவில்லை, என் விருப்பதிற்கு மாற்றமாக நடக்கிறாள் என்ற எண்ணம் தான் பெரும்பாலும் கணவன், மனைவியிடம் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்த எண்ணத்திற்கு முதலில் முட்டுக்கட்டை போட வேண்டும்.
பெண்கள் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறிய பின்வரும் பொன்மொழி அழகிய அறிவுரையாகும்.
''பெண் (வளைந்த) விலா எலும்பைப் போன்றவளாவாள். அவளை நீ நிமிர்த்த நினைத்தால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை அனுபவிக்க நினைத்தால் அவள் கோணலாக இருக்கும் நிலையிலேயே அனுபவிப்பாய்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ 5184, முஸ்லிம் 2669
பெண்களை அவர்கள் வழியிலேயே விட்டுப் பிடிப்பது தான் புத்திசாலித் தனம். அவர்களைத் திருத்துகிறேன் என்று எண்ணி முழுமையாக அப்பெண்ணை இழந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
திருமணம் வாழ்க்கை சிக்கலாக அமைவதற்கு இன்னொரு காரணம் மணப்பெண்ணை மார்க்கத்தின் அடிப்படையில் தேர்வு செய்யாமல் பணத்தையும் அழகையும் மட்டும் பார்த்து தேர்வு செய்வது தான்.
''நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளது செல்வத்திற்காக 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக 3. அவளது அழகிற்காக 4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ 5090, முஸ்லிம் 2661
மார்க்கம் தெரிந்து, அதன் படி நடக்கக் கூடிய பெண்ணை மணமகளாகத் தேர்வு செய்ய வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளை முழுமையாக புறக்கணிக்கப்படுவது குடும்ப வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தக் காரணமாக அமைகின்றது.
கணவன், மனைவிக்கு மத்தியில் சிக்கல் ஏற்படும் போது, அவர்களைச் சேர்த்து வைக்கும் நல்ல நோக்கத்தில் அவர்களை அழைத்து, மார்க்கம் கூறும் அறிவுரைகளைச் சொல்லும் போது, மார்க்கத்தைப் பற்றி தெரிந்திருந்தால் அந்த அறிவுரைகளை மதித்து சேர்ந்து வாழ முயற்சிப்பார்கள். மார்க்கத்தின் அடிப்படையே தெரியாதவர்களாக அந்தத் தம்பதி இருந்தால் எப்படி மார்க்கத்தின் போதனைகளை செவி சாய்த்துக் கேட்பார்கள்?
எனவே மணமகளையோ, மணமகனையோ தேர்வு செய்யும் போது இஸ்லாத்தின் அடிப்படை பற்றித் தெரியுமா? தொழும் பழக்கம் இருக்கிறதா? திருக்குர்ஆன் ஓதத் தெரியுமா? நற்பண்புகள் இருக்கிறதா? என்பதை முதலில் தெரிந்து இதற்கு முதலிடம் கொடுத்துத் தேர்வு செய்யுங்கள்.
''இவ்வுலகம் இன்பங்களாகும். இவ்வுலக இன்பங்களில் சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: முஸ்லிம்
''அதிகம் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடிய, அன்பு செலுத்தக் கூடியவர்களை திருமணம் செய்து கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மஃகல் பின் யஸார் (ரலி), நூல்: நஸயீ 3175
''அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக! என்ற வசனம் இறங்கிய போது முஸ்லிம்களுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. அப்போது உமர் (ரலி) அவர்கள், ''நான் உங்கள் கவலையை நீக்குகிறேன்'' என்று கூறி விட்டு (நபியவர்களிடம்) சென்று ''அல்லாஹ்வின் தூதரே! தங்களின் தோழர்களுக்கு இந்த வசனம் பெரும் கவலையை ஏற்படுத்தி விட்டது'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''உங்களில் மீதமுள்ள செல்வங்களை தூய்மைப் படுத்துவதற்குத் தான் அல்லாஹ் ஸகாத்தை கடமையாக்கியுள்ளான். வாரிசுரிமையை உங்களுக்குப் பிறகு வருபவர்களுக்காக ஏற்படுத்தியுள்ளான்'' என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், ''அல்லாஹு அக்பர்'' என்று கூறினார்கள். பின்னர் ''மனிதன் சேமிப்பதிலேயே சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்டு விட்டு ''கணவன் பார்க்கும் போது மகிழ்ச்சியூட்டுவாள். அவன் கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் இல்லாத போது கற்பைப் பாதுகாப்பாளே அப்படிப்பட்ட நல்லொழுக்கமுள்ள பெண்மணி'' என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத் 1471
மேற்கூறிய நபிமொழிகளின் படி மணமக்களைத் தேர்வு செய்திருந்தால் பெரும்பாலான பிரச்சனைகளைச் சரி செய்து விடலாம்.
இல்லறக் கடமைகள்: மணவாழ்க்கை சிறக்க சிறந்த வழிகள் - அபூ ஸமீஹா