இல்லறக் கடமைகள்: பொருளாதாரத்தை திரட்டுதல்

கணவன் மனைவி உறவு சீராக இருப்பதற்கு இஸ்லாம் அழகிய பல வழிகளைக் காட்டித் தருகிறது. அவற்றில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையும் சிறந்த வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.


கணவன் மனைவி இடையே பிரிவு ஏற்படுவதற்கு, கணவன் தன்னை சரியாகக் கவனிப்பதில்லை; மதிப்பதில்லை; அன்பு பாராட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் காரணம். இந்தக் குற்றச்சாட்டுகளை சில காரியங்களின் மூலம் சரி செய்யலாம்.


சிலர் வியாபாரம், இறை வணக்கம் என்று முழுவதுமாக அதிலேயே ஈடுபடுகிறார்கள். இதனால் கணவன் மனைவியிடம் மனகசப்புகள் ஏற்படுகின்றன.


மனைவியிடம் பேசுவதற்கும் சில நேரங்களை ஒதுக்கி அவளிடம் பேசும் போது, ''தன்னைக் கவனிப்பதற்கும் ஆறுதல் கூறுவதற்கும் கணவர் இருக்கிறார்'' என்ற எண்ணம் மனைவிக்கு ஏற்படும்.


நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அதை ஓதி விட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர் ஸஜ்தாச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போலவே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கி விட்டால் அவர்களும் படுத்து விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ 1119


(ஒரு நாள்) நான் என் சிறிய தாயார் (அவர்களும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான) மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் இரவு தங்கியிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியாருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு உறங்கி விட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 4569


இறை வணக்கத்தில் அதிகமதிகம் ஈடுபட்ட நபி (ஸல்) அவர்கள், தம் மனைவிமார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றினார்கள். இரவில் தொழுது முடித்ததும் உடன் தூங்கிவிடாமல் தம் மனைவியர் விழித்திருந்தால் அவர்களிடம் சிறிது நேரம் பேசி மகிழ்ந்து விட்டு உறங்குவார்கள். எத்தனையோ வேலைகளில் ஈடுபட்டுப் பல பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருந்த நபிகளார், தமது மனைவிக்கும் சில நேரங்களை ஒதுக்கி பேசிக் கொண்டிருந்துள்ளார்கள். பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள், வியாபாரம் வியாபாரம் என்று இருப்பவர்கள், வணக்க வழிபாடுகளில் மூழ்கி இருப்பவர்கள் ஆகியோருக்கு இது சிறந்த முன் உதாரணம்.


இதைப் போன்று வியாபாரம், வணக்க வழிபாடுகள் என்று சொல்லிக் கொண்டு மனைவிக்குச் செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமைகளைக் கூட செய்யாமல் இருப்பவர்களும் உண்டு. இவ்வாறு மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமல் இறைவனுக்கு மட்டும் செய்யும் வணக்கங்களை இறைவன் பொருந்திக் கொள்வதில்லை.


நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இறை வணக்கம், இறை வணக்கம் என்று சொல்லிக் கொண்டு மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாதவர்களை நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.


ஸல்மான் (ரலி), அபூதர்தா (ரலி) இருவரையும் நபி (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸல்மான், அபூதர்தாவைச் சந்திக்கச் சென்ற போது (அபூதர்தாவின் மனைவி) உம்மு தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். 'உமக்கு என்ன நேர்ந்தது?' என்று அவரிடம் கேட்டார். அதற்கு உம்மு தர்தா (ரலி) 'உம் சகோதரர் அபூதர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை' என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபூதர்தா வந்து ஸல்மானுக்காக உணவு தயாரித்தார். ஸல்மான், அபூதர்தாவிடம் 'உண்பீராக!' என்று கூறினார். அதற்கு அபூதர்தா 'நான் நோன்பு வைத்திருக்கின்றேன்' என்றார். ஸல்மான், 'நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்' என்று கூறியதும் அபூதர்தாவும் உண்டார்.
இரவானதும் அபூதர்தா (ரலி) நின்று வணங்கத் தயாரானார். அப்போது ஸல்மான் (ரலி) 'உறங்குவீராக!' என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் ஸல்மான், 'உறங்குவீராக!' என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் ஸல்மான் (ரலி) 'இப்போது எழுவீராக!' என்று கூறினார். இருவரும் தொழுதனர்.
பிறகு அபூதர்தாவிடம் ஸல்மான் (ரலி), ''நிச்சயமாக உம் இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. உம் குடும்பத்தினருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக!'' என்று கூறினார்.
பிறகு அபூதர்தா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''ஸல்மான் உண்மையையே கூறினார்'' என்றார்கள். அறிவிப்பவர்: அபூஜுஹைஃபா (ரலி) நூல்: புகாரீ 1968


இஸ்லாத்தில் இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. ஆனாலும் மனிதனுக்கு, குறிப்பாக மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் கூட செய்யாமல் நான் நோன்பு நோற்கிறேன், தொழுகிறேன் என்றால் அவர் இஸ்லாத்தின் கடமைகளை ஒழுங்குறச் செய்யாதவன் என்பதை நபித்தோழர்களான ஸல்மான் (ரலி), அபூதர்தா (ரலி) அவர்களின் இந்தச் சம்பவம் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.


குடும்ப உறவு கெடுவதற்கு, தன் குடும்பத்திற்குத் தேவையான பொருளாதாரத்தைக் கொடுக்காமல் இருப்பதும் முக்கிய காரணமாகும். மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தேவையான பணத்தைக் கொடுக்காமல் இருக்கும் போது பிரச்சனைகள் தலை தூக்குகின்றன. எனவே இவற்றைக் கவனத்தில் கொண்டு தம் குடும்பத்திற்குத் தேவையான பொருளாதாரத்தை ஈட்டுவதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தினரின் செலவுக்காக போர்க்களத்தில் கிடைத்த செல்வத்தை வைத்திருந்தார்கள். அதன் மூலம் தன் குடும்பத்தினருக்குச் செலவும் செய்து வந்தார்கள்.


பனூ நளீர் குலத்தாரின் செல்வங்கள் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவையாகும். அதைப் பெறுவதற்காக முஸ்லிம்கள் (தங்களின்) குதிரைகளையோ ஒட்டகங்களையோ செலுத்திப் போர் செய்திருக்கவில்லை. ஆகவே அவை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரியனவாக இருந்தன. அவற்றிலிருந்து நபியவர்கள் தமது ஆண்டுச் செலவுக்காகத் தம் வீட்டாருக்குக் கொடுத்து வந்தார்கள். பிறகு மீதமானவற்றை அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்கான) ஆயத்தப் பொருள்கள் வாங்க ஆயுதங்களுக் காகவும் குதிரைகளுக்காகவும் செலவிட்டு வந்தார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) நூல்: புகாரீ 4885


மேலும் தம் குடும்பத்தைச் சரிவர கவனிக்காது அலட்சியமாக இருப்பவனை பாவி என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார்கள். நல்ல மனிதனாக இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனாக இருப்பவன் தன் குடும்பத்தை நல்ல முறையில் கவனித்து வருவான் என்பதையும் உணர்த்தி உள்ளார்கள்.


''தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணடிப்பது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: அபூதாவூத் (1442)


கணவன், மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளை குறிப்பிடும் போது நபி (ஸல்) அவர்கள், முக்கியமான ஐந்து விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்கள்.


ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ''மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கும் அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும்'' ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரலி) நூல்கள்: அஹ்மத் (19162) அபூதாவூத் (1830)


1 உண்ணும் போது உணவளிப்பது
2. உடுத்தும் போது உடை அணிவிப்பது
3. (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காமல் இருப்பது
4. (கண்டிக்கும் போது) கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது
5. வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பது
இந்த முக்கியமான ஐந்து விஷயங்களைப் பின்பற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் கணவன்மார்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.


சிலர் வெளியில் சென்று நல்ல உணவுகளைச் சாப்பிடுவார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் மனைவிக்குச் சரியான உணவுகளை வழங்குவதில்லை. நண்பர்களுக்கு வாங்கிக் கொடுப்பார்கள், ஆனால் சொந்த மனைவிக்கு வாங்கிக் கொடுப்பதில்லை. இந்நிலையை ஒருவர் மேற்க் கொள்ளக் கூடாது.


இதைப் போன்று தனக்கு மட்டும் நல்ல ஆடைகள் எடுத்துக் கொண்டு மனைவிக்கு எதுவும் எடுத்துக் கொடுக்காமல் இருக்கக் கூடாது. தான் சாப்பிடாமல் இருந்து மனைவியும் சாப்பிடாமல் இருந்தால் பிரச்சனை இல்லை. தனக்கும் உடுத்த ஆடைகள் எடுக்கவில்லை, வசதியில்லை என்றால் மனைவிக்கும் எடுக்காமல் இருக்கலாம்.


மனைவியைக் கண்டிக்கும் போது அடிக்க வேண்டிய நிலை வந்தால் மெதுவாக அடிக்கலாம். ஆனால் முகத்தில் அடிக்கக் கூடாது! முகத்தில் அடிப்பது மிக விரைவாகக் கோபத்தை ஏற்படுத்தும். எனவே முகத்தில் அடிப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.


மனைவியிடம் பேசும் போதும், கண்டிக்கும் போதும் கெட்ட வார்த்தைகளைக் கொண்டு அர்ச்சனை செய்யக் கூடாது. கண்ணியமான, தூய்மையான வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும்.


சில வார்த்தைகள் குடும்ப உறவை நிரந்தரமாகப் பிரிக்க வழி வகை செய்து விடும். மேலும் மறுமையில் கடும் தண்டனையும் பெற்றுத் தந்து விடும்.


''ஒரு அடியார் பின் விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசி விடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ 6477)


இறுதியாக நபிகளார் சொன்ன அறிவுரை மிக மிக முக்கியமானதாகும். பெண்களை சர்வ சாதரணமாக அந்நியருக்கு மத்தியில் கண்டிப்பதையும் ஏசுவதையும் வாடிக்கையாக சிலர் வைத்துள்ளனர்.


என்ன செய்தாலும், அவளைக் கண்டிப்பதும், வெறுப்பதும் வீட்டில் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு மத்தியில் மிகவும் கண்ணியத்திற்குரியவளாக கருதும் வண்ணம் நம் நடவடிக்கைகளை வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு நடப்பது கணவன் மனைவிக்கு மத்தியில் ஏற்படும் மிகப் பெரிய பிளவைத் தடுத்து நிறுத்தும்..

இன்ஷா அல்லாஹ் தொடரும்