இறை நம்பிக்கையாளர்கள் யார் எனில் அவர்கள் குர்ஆனையும், சுன்னாவையும் தங்கள் வாழ்வினிலே முழுமையாகக் கடைபிடிப்பவர்களாவார்கள். அதாவது முஸ்லிமான ஆணாயினும் அல்லது பெண்ணாயினும் அவர்கள் குர்ஆனுக்கு அடுத்ததாக தங்கள் வாழ்க்கையின் வழிகாட்டியாக நபி(ஸல்) அவர்களது வழிமுறைகளான ஹதீஸ்களையும் பின்பற்றுவது என்பது இறைவனால் கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது. ஹதீஸுக்கு மாற்றமாக யார் நடந்தாலும் அவர்கள் பாவமான கரியங்களில் ஈடுபடுகின்றார்கள் என்பதாகும்.
ஒவ்வொரு முஸ்லிமும் குர்ஆனையும், சுன்னாவையும் மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்ற இறைவனின் கட்டளையை மதிக்கின்றார்கள். அதனைத் தன் வாழ்வில் நடைமுறைப்படுத்த ஆர்வம் கொள்கின்றார்கள். ஆனால் இதற்கிடையே மத்ஹபுகள் வந்து குறுக்கிடும் போது, இறைக்கட்டளையை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற அவர்களின் நோக்கத்தில் தடையொன்று ஏற்படுகின்றது. மத்ஹபுகள் குறுக்கிடாத வரை அவர்களது நோக்கத்தில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான் :
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்குர்ஆன் : 4:59)
மார்க்க விஷயத்தில் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டால், உடனே அவர் தன்னுடைய கவனத்தை ஹதீஸின் பக்கம் செலுத்த வேண்டும். அதிலிருந்து தனக்குத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்ள முயற்சிகள் செய்யவேண்டும். ஒரே விதமான பிரச்னைக்கு பல்வேறு விதமான கருத்துக்களை இமாம்கள் வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறு இருக்கும் போது நாம் ஏன் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதும், வாழ்வியல் நடைமுறைகளான நபி(ஸல்) அவர்களுடைய ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது? மத்ஹபுகளை அறிவித்த இமாம்களும், இன்றுள்ள உலமாப் பெருமக்களும் நம்மைப் போல, அறிந்தோ அறியாமலோ தவறுதலாக வெளியிட்டு விடக்கூடிய சாதாரண மனிதர்களேயாவார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் இறைவனால் பாதுகாக்கப்பட்டவர்கள் ஆவார்கள். இவ்வளவு உண்மைகளைத் தெரிந்திருந்தும் ஒருவர் மீண்டும், தான் ஏற்றுக்கொண்டுள்ள இஸ்லாத்திற்கு முரணான கருத்துக்களைக் கொண்ட மத்ஹபுக் கொள்கைகளையும், அதன் இமாம்களையும், அதில் உள்ள உலமாக்களையும் தான் நான் பின்பற்றுவேன் எனச் சொன்னால், அவர்கள் நபி(ஸல்) அவர்களுடைய நடைமுறைகளைக் கொண்ட ஹதீஸ்களை மதிக்கவில்லை என்றே நாம் கருத வேண்டியிருக்கின்றது.
முஸ்லிம் குர்ஆனையும் சுன்னாவையும் கற்றுக் கொண்டு, அவற்றின் உள்அர்த்தங்களை விளங்கிச் செயல்படுவது என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும். மேலும், இவற்றிலிருந்து எவற்றைச் செய்யலாம், எவற்றைச் செய்யக் கூடாது என்பதையும் தெளிவாகக் கற்றுணர்ந்து செயல்பட வேண்டும். மேற்கண்டவற்றை ஒருவர் தன்னால் செய்ய இயலாத சூழ்நிலையில் இருப்பாரேயானால், அவர் அவற்றை விளக்கிச் சொல்லக்கூடிய அறிஞரை அணுகி, அவற்றை அறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் உள்ள மனிதர் குறிப்பிட்ட ஒருவரை மட்டுமே பின்பற்றி, அவரது கருத்துக்களுக்கு மட்டுமே மதிப்பளிப்பேன், செயல்படுத்துவேன் எனக்கூற இயலாது. இவ்வாறு செய்வதால் அந்த இமாமை நபிமார்களுக்கு சமமாகக் கருதிய குற்றத்திற்கு ஆளாக நேரிடும்.
முஸ்லிம்கள் அனைவரும் பல்வேறு பிரிவுகளைக் கொண்டவர்கள் என்றில்லாமல், ஒரே வழிமுறையைப் பின்பற்றுபவர்கள் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே சரியாகும். அல்லது இந்த மத்ஹபு சரியில்லை, அதனால் இதை விட்டு விட்டு வேறு மத்ஹபுக்கு மாற்றிக் கொள்வதோ அல்லது இன்னும் பல்வேறு பிரிவுகளை ஏற்றுக் கொள்வதோ அல்லது தங்களுடன் இணைத்துக் கொள்வதோ சரியான வழிமுறையல்ல. கண்மூடித்தனமாக மத்ஹபுகளைப் பின்பற்றுபவர்கள் ஏன்? எதற்கு? என்ற காரணங்களை அறியாமல், அறிவுக்கு வேலை கொடுக்காமல், சந்தேகத்திற்கிடமான வழிகளில் நகைப்புக்கிடமான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இறைவன் கூறுகிறான்:
உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். (அல் குர்ஆன் 4:65)
இந்த மத்ஹபு அபிமானிகள் நபி முஹம்மது (ஸல்) அவர்களது தோழர்களை விட இமாம்களை மிகவும் மதிப்புமிக்கவர்களாகவும், கண்ணியமானவர்களாகவும் கருதிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் தங்களது இமாம்களின் கூற்றுக்கு நெருக்கமாக ஒரு ஹதீஸ் கிடைக்கப் பெற்று விட்டால், அந்த ஹதீஸைக் காட்டி தங்களது இமாம்களின் கருத்துக்கு வலுச் சேர்க்கினறனர். அதே போல் ஒரு ஹதீஸ் இன்னுமொரு இமாமின் கருத்துக்கு மிக நெருக்கமாக இருக்குமேயானால், அந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள். எந்தவொரு ஹதீஸ் அவர்களது இமாம்களின் கருத்தை ஆதரிக்கவில்லையோ அந்த ஹதீஸை உதாசினம் செய்து விடுகின்றனர், தேவையற்றது என்று ஒதுக்கி விடுகின்றனர். ஆதரப்பூர்வமான அந்த ஹதீஸை ஏற்றுச் செயல்படுவதை விட்டுவிட்டு, தங்களது இமாம்களின் கூற்றுத்தான் சிறந்தது எனக் கூறி, அவர்களது இமாம்களுக்கு ஆதரவாக வாதாடவும் ஆரம்பித்து விடுகின்றனர்.
சில வேளைகளில் தங்களது இமாம்களின் கூற்றுக்கு ஆதரவாக ஹதீஸ்களின் அர்த்தங்களை மாற்றியும், இமாம்களின் கூற்றுக்கு ஏற்ப வளைக்கவும் முயற்சி செய்கின்றனர். அவ்வாறு செய்ய இயலவில்லை எனில், எந்த வித வாதபிரதி வாதங்களுக்கும் அந்த ஹதீஸை உட்படுத்தாமல், அவற்றை ஒழுங்கான முறையில் ஆய்வு செய்யாமல், அவற்றைத் தள்ளுபடி செய்வதற்குண்டான எந்த வித ஆதாரமும் இல்லாத நிலையிலேயே தள்ளுபடி செய்து விடுகின்றனர். கண்மூடித்தனமாக மத்ஹபுகளைப் பின்பற்றும் இத்தகையவர்கள் தங்கள் இமாம்களுக்கெதிராக கூறப்படும் எந்தவித வித கருத்தையும் அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தி, அவற்றை சீர்தூக்கிப் பார்த்து, அவற்றை ஏற்றுக் கொள்ளவோ அல்லது அவற்றை நிராகரிக்கவோ சம்மதிப்பதில்லை. இந்த மத்ஹபுகளின் கருத்துக்கு எதிராக குர்ஆனில் இருந்தும், ஹதீஸ்களில் இருந்தும், மறுக்க முடியாத வகையில் அமைந்த தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வந்தாலும், அந்த ஆதாரங்களை அவர்கள் ஏற்க மனமில்லாமல், தங்கள் மன இச்சைப்படி நடந்து கொள்கின்றனர்.
உண்மையிலேயே உண்மையைத் தேடுகின்ற முஸ்லிமானவன் செய்ய வேண்டியது என்னவென்றால், தவறிழைத்து விடக் கூடியவைகளிலிருந்தும், நமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தி விடக் கூடியவைகளிலிருந்தும் நாம் நம்மைத் தடுத்துக்கொள்ள வேண்டும். இமாம்களின் கருத்துக்களிலிருந்து நமக்கு எது சந்தேகத்தை ஏற்படுத்தவில்லையோ மற்றும் குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் மாற்றமாக இல்லாமல், இவற்றின் கொள்கைகளுக்கு மாறுபடாமல் இருக்கின்றதோ அவற்றைப் எடுத்துச் செயல்படுத்துவதும், இவற்றிற்கு மாறுபட்டவைகளைப் புறக்கணித்து விடுவதும் தான் உண்மையான முஸ்லிமிற்கும், சத்தியத்தைத் தேடக் கூடியவனுக்கும் உள்ள நல்ல அடையாளங்களாகும். குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் மாற்றமான வகையில் எந்த அறிஞரோ அல்லது சூபியோ அல்லது நீதிபதியோ சொன்னாலும், அதை யார் சொன்னார்கள் எனப் பார்க்காமல், அது தவறானது என்று அறிந்து கொண்ட மாத்திரத்திலேயே அவற்றைப் புறக்கணித்து விடவேண்டும். யார் இந்த அளவு கோள்களை எல்லாம் புறக்கணித்து விடுகின்றார்களோ அவர்கள், மிகப் பெரியதொரு நஷ்டத்திலே இருக்கின்றார்கள்.
இஸ்லாமிய சட்ட முடிவுகளுக்கும் அதன் வரையறைகளையும் மீறக் கூடிய அளவில் இமாம்களின் கருத்துக்கள் இருந்தாலும். அவற்றை விட்டு நீங்காமல் ஒருவர் மீண்டும் அந்தத் தவறான கொள்கைகளின் வழியே தன்னுடைய அமல்களை செயல்படுத்தி வருவாரேயானால், அவரது அணுகு முறை முற்றிலும் தவறானதும், அவர் வழிகேட்டில் இருக்கின்றார் என்றும் கருதப்படும். அவர் இமாம்களைப் பின்பற்றுகின்றார் என்று கூறுவதை விட அவர் தன்னுடைய மன இச்சையின் பிரகாரம் தன்னுடைய அமல்களைச் செயல்படுத்திக் கொள்கின்றார் என்றே கருதப்படும். இவர்களின் இத்தகைய தவறான செயல்களுக்காக இமாம்கள் பொருப்பேற்கக் கூடியவர்களல்லர். அவர்கள், குர்ஆனையும், சுன்னாவையும், இரண்டுக்கும் முரண்படாத தெளிவான இஸ்லாமியச் சட்டங்களையும் தான் வழுவாது பின்பற்ற வேண்டும் என்று மிகவும் வலியுறுத்திக் கூறிச் சென்றுள்ளார்கள்.
எனவே, இவர்கள் தங்களையும் வழிகேட்டில் தள்ளிக் கொண்டு, பிறரையும் வழிகேட்டில் இட்டுச் சென்று கொண்டிருக்கின்றார்கள்.; இறைவனால் நமக்கு அனுப்பி வைக்ககப்பட்ட நம்முடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் பெறப்பட்டவைகள் மட்டும் தான் உண்மையும், சத்தியமும், நேர்வழியும் ஆகும். மேலும், குர்ஆனில் இருந்தும், ஹதீஸ்களில் இருந்தும் தெளிவான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்ற பின்பும், என்னுடைய இமாம் கூறிய கருத்தைத்தான் பின்பற்றுவேன் என்று கூறி ஒருவர் மத்ஹபையே பின்பற்றுவாரானால், அவர் தவறிழைக்கின்றார் என்பதை விட அவர் எந்த மத்ஹபைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றாரோ அந்த மத்ஹபை விட்டு வெளியேறியவராகவும், எந்த இமாமைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றாரோ அந்த இமாமினுடைய கருத்திற்கு மாறு செய்தவராகவும் ஆகிவிடுகின்றார்.
இவருடைய நிலையில் இன்று இவர் பின்பற்றக் கூடிய இமாம் உயிருடன் இருக்கும் பட்சத்தில், அவர் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கிடைத்த மாத்திரத்தில், அவருடைய கருத்தை மாற்றிக் கொண்டு, அந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸையே பின்பற்றுவாரே ஒழிய, இவரைப் போல் கண்மூடித்தனமான குருட்டுத்தனமான வகையில் மத்ஹபு மாயையில் உழன்று கொண்டிருக்க மாட்டார். இத்தகைய நிலையில், உண்மையை அறிந்த பின்பும் ஒருவர், இஸ்லாத்திற்கு மாற்றமான வகையில் இருக்கும் மத்ஹபு மாயையில் தன்னை உட்படுத்திக் கொள்வாரேயானால், அவர் தன்னுடைய இறைவனுக்கும், அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கும் எதிராக போர் தொடுக்கின்றான் என்றே பொருளாகும்.
இறைவன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான் :
(நபியே!)எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா? (அல்குர்ஆன் 45:23)
மத்ஹபுகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்களும், அதன் அபிமானிகளும் தங்கள் சிந்தனைச் சக்தியைப் பயன்படுத்தாமல், அறிவு மழுங்கியவர்களாகவும், அறிவுக் குருடர்களாகவும், எது நேர்வழி என்பதை அவற்றை அவர்களுக்கு உணர்த்திய பின்பும், எது சிறந்த வழி, எது தவறான வழி என்பதை அறிந்த கொள்ள இயலாமல், அதற்கான முயற்சிகளைச் செய்யாமல் இருக்கக் கூடிய இவர்களது போக்கு, உண்மையிலேயே ஒளியை அகற்றி விட்டு இருளிலே நடக்கக் கூடியவர்களுக்கு ஒப்பாகத் தான் இருக்கின்றது
(தவறான வழியில் செல்வதில் இருந்தும் இறைவன் நம்மைப் பாதுகாப்பானாக! நாம் நேர்வழி பெறுவதற்கு இறைவன் வழிகாட்டுவானாக!) ஆமீன்!
தொடர்ந்து படிக்க...
இமாம்களும் குர்ஆன், ஹதீஸைத் தான் பின்பற்றச் சொல்கிறார்கள்
இறை நம்பிக்கையாளர்களின் வழிமுறைகள்