மனிதர்களை உண்மையான நேர்வழியில் செலுத்த வழிகாட்டும் இறுதி இறை வெளிப்பாடாகிய குர்ஆன், இவ்வுலக வாழ்க்கையின் நோக்கம் இறைவனுக்கு அடிபணிவதே ஆகும். மனிதன் இறைவனுக்கு அடிபணிகின்றானா அல்லவா என்று சோதிப்பதற்காகவே அவன் அனுப்பப்பட்ட இடம்தான் இவ்வுலகம் என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது. இந்தச் சோதனையில் மனிதனை நேர்வழியில் நின்றும் பிறழத் தூண்டும் வகையில் படைக்கப்பட்ட பிரத்தியேகக் கூறுகளைப் பற்றி அல்லாஹ் எச்சரிக்கின்றான்; அவற்றின் தன்மைகளைப் பற்றிக் கூறுகையில் அவை முற்றிலும் ஏமாற்றுபவை எனவும் அறிவிக்கின்றான்.
உங்கள் பொருள்களைக் கொண்டும் உங்கள் ஆத்மாவைக் கொண்டும் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 3:186
இவ்வுலகின் உண்மையான இயல்பை வர்ணிக்கும் வசனங்கள் பல குர்ஆனில் உள்ளன. அவற்றுள் சில கீழே தரப்படுகின்றன:
உங்களுடைய செல்வமும், சந்ததிகளும் உங்களுக்குச் சோதனையே. ஆனால் அல்லாஹ்விடத்தில் உங்களுக்கு உங்களுக்கு மகத்தான கூலி உள்ளது. அல்குர்ஆன் 64:15
பெண்களும்,ஆண் பிள்ளைகளும், தங்கம் மற்றும் வெள்ளியின் பெருங்குவியல்களும், உயர்ரகக் குதிரைகளும், கால்நடைகளும், வளம் மிகுந்த விளை நிலங்களும் எல்லாம் மனிதர்களைக் கவரும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. இவை யாவும் இவ்வுலக வாழ்க்கையின் வசதி வாய்ப்புகள். அல்லாஹ்விடத்தில் அழகிய தங்குமிடம் உள்ளது. அல்குர்ஆன் 3:14
உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பவை அனைத்தும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய வசதிவாய்ப்புகளும், பகட்டணிகலன்களுமே ஆகும். அல்லாஹ்விடத்தில் உள்ளவை மேலானாவையும் நிலையானவையும் ஆகும். (இதை) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?" அல்குர்ஆன் 28:60
சமூக தலைமை (அந்தஸ்து) செல்வவளம், சந்ததிகள், உயர் தரமான வாழ்க்கையும் அவையல்லாமல் ஏழ்மையும் மிக வறிய வாழ்க்கை நிலையும் எல்லாமே மனிதனை இவ்வுலகில் சோதிப்பதற்காக உள்ளவையே. குர்ஆன் வசனம் ஒன்று கூறுகிறது.
அவன் (அல்லாஹ்) தான் உங்களை இப்புவியின் வாரிசுகளாக ஆக்கினான். மேலும் உங்களில் சிலரை மற்றவர்களை விட தலைமையில் (அந்தஸ்தில்) உயர்த்தியும் உள்ளான். உங்களுக்கு அருளப்பட்டவை மூலம் உங்களைச் சோதிக்கின்றான். உங்கள் இறைவன் தண்டிப்பதில் மிகத் தீவிரமானவன். அவன் பிழை பொருப்பவனும் பேரருள் உடையவனும் ஆவான். அல்குர்ஆன் 6:165
வாழ்வும் மரணமும் மனிதனைச் சோதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவையே என்பதை கீழ்வரும் வசனம் கூறுகிறது.
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் 67:2
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 21:35
மனிதனுக்கு வழங்கப்படும் நன்மைகளும் ஆதரவுகளும் அதனைப் போலவே அவனிடமிருந்து பறிக்கப்படுபவையும் மனிதனைச் சோதனைக்குள்ளாக்குபவற்றில் உட்படுபவையே.
அவனைச் சோதனைக்குள்ளாக்கி அவனுக்கு அருள் புரிந்து அவனை இறைவன் மேம்படுத்தினால் மனிதன் என்னுடைய இறைவன் என்னை மகிமைப்படுத்தி விட்டான் என்று கூறுகிறான். ஆனால் அவனுடைய செல்வத்தைக் குறைத்து அவனைச் சோதித்ததால் என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 89: 15.16
மறுமையே மனிதனுக்கு யதார்த்தமான வீடு (தங்குமிடம்) ஆகும் எனக் குர்ஆன் அறிவுறுத்துகிறது.
புலனுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட எதையுமே உணர்ந்துகொள்ளும் ஆற்றலற்றவன் மனிதன், எதிர்காலம், இவ்விதம் மனிதன் உணர்ந்து கொள்ள முடியாதவற்றுள் ஒன்று. அடுத்த சில வினாடிகளில் என்ன நேரும் என்று யாருமே அறிய முடியாது. இத்தகைய வரையறைக்குட்பட்ட புலனுணர்வுடைய மக்கள் எல்லாக் காலங்களிலும் வருங்கால நிகழ்வுகள் பற்றி அறிய ஆர்வமுடையவர்களாக இருக்கின்றார்கள்; குறிப்பாக மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை பற்றி அறிய மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.
மனிதர்கள் ஆர்வமுடன் அறிய விரும்புபவை ஆகிய இந்தப் பிரபஞ்சம், மானிட வர்க்கம், இறப்பு, நீதித் தீர்ப்பு நாள், நரகம், சுவர்க்கம், வருங்காலம் கடந்த காலம் மற்றும் மறுமை ஆகியவற்றிற்கெல்லாம் காரணகர்த்தாவாகிய அல்லாஹ் ஒருவனே அறிவிக்க வல்லவன். இந்தப் பிரபஞ்சத்தையும் உயிரினங்கள் அனைத்தையும் அல்லாஹ் “ஒன்றுமில்லாமை”யிலிருந்தே படைத்தான்; இன்னும் ஒவ்வொரு கணமும் படைத்துக்கொண்டே இருக்கின்றான். இப்பிரபஞ்சத்தில் ஓர் அம்சமாக விளங்கும் காலத்தையும் அல்லாஹ்வே திட்டமிட்டு வகுத்துள்ளான். காலத்திற்கு எல்லா படைப்பினங்களும் கட்டுப்பட்டாக வேண்டும். அல்லாஹ்வோ காலத்திற்கு கட்டுப்பட்டவன் அல்லன். காலததிற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவன் அல்லாஹ். காலத்தின் கட்டுப்பாடின்றியே அல்லாஹ் யாவற்றையும் பரிமாணத்தோடு படைத்தான். நாம் கடந்தவை என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை என்றும் கருதும் யாவற்றையும் முழுமையாக அறிந்த நிலையில் ஒரு நொடியில் படைத்தான்.
நம்முடைய புலனுக்கு எட்டாத பிற்காலம் உட்பட யாவுமே “மறையானவை” என்று குறிப்பிடப்படுகின்றன. “மறுமை”யும் கூட மனிதர்கள் இம்மையில் வாழும் காலம் வரை ‘மறைவான’வற்றில் ஒர் அம்சமாகவே விளங்கும். “மறுமையை” பற்றிக் குறிப்பிடும் குர்ஆன் அதைப் பற்றிய விவரங்களைத் தருகின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தத்துவ ஞானிகள் பல்வேறு கலாச்சாரங்களில் காணப்படுகின்ற மூட நம்பிக்கைகளோடு இணைந்து, மறுமையைப் பற்றி பல அனுமானங்களைக் கூறுகின்றனர். இவ்வுலக வாழ்க்கையில் பற்றும் சொத்தும் செல்வமும் குவிப்பதில் ஆர்வமும், மக்களை உலகில் வசதி வாய்ப்புகளை அடையும் முயற்சியில் நின்றும் விடுபட விடுவதில்லை. தொல்லைகளும் இடர்ப்பாடுகளும் எதிர்படும் போது ஏமாற்றமடைந்து நம்பிக்கை இழப்பார்கள். இத்தகைய மன நிலையை குர்ஆன் கீழ் வருமாறு வர்ணிக்கிறது.
“நம்முடைய அருட்கொடையை மனிதன் நுகரச் செய்து அதன்பின் அதனை அவனிடமிருந்து பறிக்கப்பட்டால் அவன் நம்பிக்கை இழந்து நன்றி கெட்டவனாக ஆகிவிடுகின்றான். அவன் அனுபவித்த இடர்ப்பாடுகளை நீக்கி நம்முடைய அருட்கொடைகளை நுகரச் செய்தால் “என்னுடைய துன்பங்கள் நீங்கிவிட்டன” எனக் கூறி பெரும் மகிழ்ச்சியடைந்து பெருமை பாராட்டுகிறான். அல்குர்ஆன் 11:9,10
எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அனைத்து நிகழ்வுகளையும் குர்ஆனின் நெறிமுறைக்கு உகந்து விளங்கி, இறையுணர்வு நீங்காமல் மறுமையின் நினைவு மாறாமல் மனிதனின் நிரந்தர வீடாகிய மறுமையை அடையும் நோக்கோடு இறை நம்பிக்கையாளன் நிலை தவறாமல் முயலுகின்றான். “இவ்வுலகில் ஓர் அந்நியனைப் போல் அல்லது ஒரு பிரயாணியைப் போல் வாழ்வீராக” எனும் நபி மொழி (அல்புகாரி)க்கு ஏற்ப இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரமானது என்றும் நம்பி வாழ்வான். எனவேதான் இறை நம்பிக்கையாளர்கள் ஏராளமான நன்மைகளும் பேறுகளும் கிட்டும் போது வழி பிறழுவதுமில்லை; அவற்றை இழக்க நேரும்போது ஊக்கம் இழந்து சோர்வடைவதும் இல்லை. பேறுகளும் நன்மைகளும் அவை போன்று இழப்புகளும் எல்லாம் சோதனையே எனும் உண்மையை உணர்ந்தவர்களாக இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ் விரும்பும் நேரும் நிகழ்வுகளை எல்லாம் கீழ்வரும் இறை வசனத்தை நினைவு கூர்ந்து ஏற்றுக் கொள்வார்கள்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மையும் தீமையும் அனுபவிக்கும் நிலைக்கு உள்ளாக்கி நாம் உங்களைச் சோதிப்போம். நீங்கள் நம்மிடமே மீள்வீர்கள். அல்குர்ஆன் 21:35
இதனை உணரும்போது, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கருணை குர்ஆன் மூலம் வெளிப்படுவதைத் தெளிவாக மனிதன் அறிந்து கொள்கிறான். குர்ஆனின் மூலமே மறுமையைப் பற்றிய மிகச் சரியான உண்மைகளை இறை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். உண்மையான மார்க்கமே மறுமையைப் பற்றிய யதார்த்தங்களை அறிவிக்கவல்லது.
உண்மையான மார்க்கமே மனிதனுக்கு இவ்வுலக வாழ்க்கையின் நிலையற்ற தற்காலிக நிலையையும், நிரந்தரமான மறுமை வாழ்க்கையையும் பற்றி அறிவிக்கிறது. மனிதனின் நற்செயல்களுக்கும் தீயச் செயல்களுக்கு ஏற்ப கூலி வழங்கப்படும் ஒரு நாளைப் பற்றிக் குர்ஆனில் அறிவிக்கப்பட்டுள்ளது. மரணவேளை, நீதித் தீர்ப்பு நாள், சுவர்க்கம் மற்றும் நரகம் பற்றிய தகவல் தரும் தனிச் சிறப்பு வாய்ந்த ஒரே மூலம் குர்ஆனே ஆகும். இறைவனின் இறுதி வெளிப்பாடாகிய குர்ஆன் பல வசனங்களில் மனிதனின் நிரந்தர வீடு மறுமையே என அறிவிக்கின்றது. அவற்றுள் ஒன்று:
உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? அல்குர்ஆன் 6:32
இந்த இறைவசனத்தில் இந்தச் சோதனை வாழ்க்கையை விளங்கிக் கொள்ள முடியாத உணர்வற்ற ஒரு மனிதனின் மனப்போக்குத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இறை நம்பிக்கையாளர்கள் இத்தகைய உணர்வற்ற மனப்போக்கைப் பற்றி எச்சரிக்கப்படுவதோடு, அவர்களின் இம்மை வாழ்க்கையின் யதார்த்த நோக்கத்தைக் குறித்துத் திரும்பத் திரும்ப நினைவூட்டப்படுகிறார்கள்.
அவர்களில் சிலருக்கு இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவையெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும். அல்குர்ஆன் 20:131
ஆனாலும் இவ்வுண்மைகளை ஊன்றிக் கவனித்து உணர முடியாதவர்கள் இந்த உலக வாழ்க்கையில் வசதி வாய்ப்புகளில் மயங்கி விடுகின்றனர்.
இவ்வுலக வாழ்க்கை
ஸஃபர் மாதம்,
ஸஃபருல் முழஃப்பர் எனும் வெற்றி வாய்ந்த ஸஃபர் என்று சிறப்பித்தழைக்கப்படும் மாதம், “எம் மாதத்தால் எத்தீங்கும் நிகழ்வதில்லை” என்று நபி(ஸல்) அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோ அத்தகைய ஸபர் மாதம் நம்மிடையே வந்திருக்கிறது.
அவர்கள் தமக்கு அல்லாஹ்வின் சொல்லையும், அவனது ரசூலின் வார்த்தைகளையும் ஆதாரமாகக் கொள்ள வேண்டியதிருக்க, தவறுகள் மலிந்து காணப்படும் அரபுத் தழிழ் கிதாபுகளை ஆதாரம் காட்டி பின்வருமாறு அதில் எழுதப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். அதாவது வருடத்திற்கு 1,24,000 பலா முஸீபத்துகள் இறங்குவதாகவும், அவை ஒட்டு மொத்தமாக ஒடுக்கத்து புதனன்றுதான் இறங்குகின்றன என்றும், அதற்குப் பரிகாரமாக குர்ஆனில் குறிப்பிட்ட சில வசனங்களை ஒரு தட்டையில் எழுதி கரைத்துக் குடித்து விட்டால் அவை நம்மை வந்தணுகாது என்கிறார்கள்.
வேறு சிலரோ, அல்லாஹ் “ஆது” கூட்டத்தாரை புதன்கிழமை அன்று தான் பலமான காற்றை விட்டு அழித்து நாசப்படுத்தினான். அல்லாஹ் அதுபற்றி “அய்யாமின்னஹிஸாத்தின்” (பீடை நாட்களில்….) என்று குர்ஆனில் கூறியிருக்கிறான் என்றும், அதன் காரணமாகவே நாங்கள் இதைப் பீடை நாள் என்று கூறுகிறோம் என்கிறார்கள். வேறு சிலரோ, நமது நபி(ஸல்) அவர்களுக்கு இம்மாதத்தில் தான் சுகக்குறைவு ஏற்பட்டிருக்கிறது, அதனால்தான் இதைப் பீடை மாதமென்று கூறுகிறோம் என்று அனைவரும் மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார்கள்.
வல்ல அல்லாஹ் ஆது கூட்டத்தாரை ஷவ்வால் மாதத்தின் இறுதி வாரத்தின் புதன்கிழமை காலையிலிருந்து அடுத்த புதன் மாலை முடிய ஏழிரவும், எட்டுப் பகலும் தொடர்ந்து பலமான காற்றை அனுப்பி, அவர்கள் செய்த அநியாயம் அக்கிரமத்திற்குத் தண்டனையாக அழித்து, நாசமாக்கினான். ஆனால் அக்கூட்டத்தாரின் நபியாகிய “ஹுது”(அலை) அவர்களையும், அவர்களைப் பின்பற்றிய நன்மக்களையும் காப்பாற்றினான்.
அல்லாஹ் அவர்களை ஷவ்வால் மாதத்தின் இறுதிப் புதனில் அழித்து நாசமாக்கியதற்கும், அதன் பெயரால் இவர்கள் ஸஃபர் மாதத்தின் இறுதி புதன்கிழமையில் இஸ்லாத்தைப் போட்டு நாசமாக்குவதற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது?
அவ்வாறே நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு மாதத்தில் சுகக்குறைவு ஏற்பட்டதினால், அம்மாதம் பீடைமாதமென்று கூற முற்பட்டால், நபி(ஸல்) அவர்களுக்கு ஸஃபர் மாதத்தில் மாத்திரம் தானா சுகக்குறைவு ஏற்பட்டிருக்கிறது? அது அல்லாத எத்தனையோ மாதங்களிலும் சுகக்குறைவு ஏற்படத்தானே செய்திருக்கிறது? அதனால் வேறு பல மாதங்களையும் பீடை மாதங்கள் என சொல்ல வேண்டியதாகி விடுமே!
குறிப்பாக நபி(ஸல்) அவர்கள் பிறந்த ரபீஉல் அவ்வல் மாதத்தையே பீடை பிடித்த மாதம் எனக் கூறும் நிலை ஏற்பட்டுவிடும். ஏனெனில் அம்மாதத்தில் தானே நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகியுமிருக்கிறார்கள். எனவே காலம் பொதுவானது. அது நல்லது, தீயது என அவரவர் செயல்களைப் பொறுத்தே அமைகிறதே அன்றி, வெறுமனே ஒரு மாதம் ஒரு நாள் அனைவருக்கும் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ அமைவது கிடையாது.
இதோ, இம்மாதம் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறியதொரு ஹதீஸைக் காண்போம். அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் தொற்று நோய் என்று ஏதுவுமில்லை என்றும் அவ்வாறே ஆந்தையின் சப்தத்தால் ஆவப்போவதொன்றுமில்லை. எனவே (மற்றொரு அறிவிப்பில் பறவை, மான், பூனை முதலியவை வலமிருந்து இடம், இடமிருந்து வலம் குறுக்கே செல்வதால் நலமோ, இடரோ விளைவதில்லை) என்றும்,
அதுபோன்ற ஸஃபர் மாதத்தாலும் நடக்கப் போவதொன்றுமில்லை என்றும் கூறினார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த கிராமவாசி ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! மானைப் போன்று (ஒரு வியாதி கூட ஏற்பட்டிருக்காத) ஓர் ஒட்டகை சொரி பிடித்த வேறொரு ஒட்டகையுடன் சிறிது காலம் சேர்ந்து பழகி விட்டால் அச்சொரி இதனையும் பற்றிக் கொள்கிறதே என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (விஷயம் அவ்வாறென்றால்) முதன் முதலாகச் சொரி ஏற்பட்ட அந்த ஒட்டகைக்குச் சொரியை ஒட்டி விட்டவர் யார்? என்று கேட்டார்கள் (புகாரி)
மேற்காணும் ஹதீஸில் , நபி(ஸல்) அவர்கள், அக்கால மக்களிடையே ஆழமாய்ப் பதிந்து கிடந்த மூன்று மூடநம்பிக்கைகளைக் களைந்துள்ளார்கள்; அவையாவன:
1) குறிப்பிட்ட சில வியாதிகளுக்குப் பிறரைத் தொற்றிக் கொள்ளும் சக்தியுண்டு.
2) ஒரு வீட்டில் ஆந்தை கத்தினால், அவ்வீட்டில் எவருக்கேனும் மரணம் சம்பவிக்கும்.
3) ஷஃபர் மாதம் வந்துவிட்டால் அதன் வருகையால் பொதுவாக மக்கள் அனைவருக்கும் கஷ்டம் ஏற்படும்.
ஆகவே நபி(ஸல்) அவர்கள், அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் வல்ல அல்லாஹ்விடம், அனைத்து ஆதிக்கமும் இருக்கும் பொழுது, சுயமே அவனது நாட்டமின்றி, கேவலம் ஒரு மாதத்தின் வருகையோ, ஓர் ஆந்தையின் சப்தமோ, அடுத்தவனிடமுள்ள ஒரு நோயோ பிறரை எதுவும் செய்து விட முடியாது என்ற உண்மை நிலையை எடுத்துணர்த்தியுள்ளார்கள்.
பொதுவாக அல்லாஹ்வை அன்றி மற்றெவராலும், அவர்கள் மலக்குகளாகட்டும், நபிமார்களாகட்டும், வேறு இறைநேசச் செல்வர்களாகட்டும், இவ்வுலகத்தில் ஒரு துரும்பையேனும் ஆட்டவோ அல்லது ஆடும் ஒன்றை அமைதிப்படுத்தவோ, அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் முடியவே முடியாது. காரணத்தை இதோ திருமறை கூறுகிறது: “பியதிஹீ-மலக்கூத்து - குல்லி - ஸைஃ” அவனது கரத்திலேயே அனைத்துப் பொருட்களின் ஆதிக்கமுமிருக்கிறது.
ஆதிக்கமனைத்தும் இருக்க வேண்டியவனிடத்தில் ஒட்டுமொத்தமாக அமைந்திருக்கும் பொழுது, யாராலும், எதுவாலும், எதுவும் நடக்காது.
உண்மைநிலை இவ்வாறிருக்க, இவர்களாகவே ஒடுக்கத்து புதன் என்று ஒன்றை உண்டுபண்ணிக் கொண்டு, அதில் பலாமுஸீபத்துகள் இறங்குவதாக குர்ஆன், ஹதீஸ் ஆதாரமின்றி இவர்களாவே கற்பனை செய்துகொண்டு, அவை தம்மை வந்தணுகாமலிருப்பதாக, நபருக்கிரண்டு மா இலைகளாம்! ஆயத்துகள் எழுதப்பட்டவைகளாம்! ருபாய்க்கு இரண்டாம், தலைக்கும் உடம்பிற்கும் தேய்த்துக் குளிக்க ஒன்றாம்! குளித்து விட்டு, கரைத்துக் குடிக்க ஒன்றாம்! அவ்வாறு செய்து விட்டால் அன்றைக்கிறங்கும் அனைத்து முஸீபத்துகளும் அடியோடு போய்விடுமாம்! இப்படி கதையளக்கிறார்கள்.
அவர்களின் கூற்றுப்படி, அந்த பலாமுஸீபத்துகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உண்மையில் இறக்கி வைக்கப்படுமானால், இவ்வாறெல்லாம் மா இலைகளில் எழுதிக் கரைத்துக் குடிப்பதன் மூலம் அவை எதுவும் போய் விடாது, அப்படி மீறி அதனால் ஏதேனும் போவதென்று ஒன்றிருக்குமானால், மா இலைகளில் அவர்கள் எழுதும் அந்த மையானது, அரிசியை அடுப்பலிட்டுக் கரித்துத் தயார் செய்யப்படுவதால், இரண்டொரு விடுத்தம் கழிப்பறைக்குப் போவது ஒன்று தானிருக்குமே தவிர, மற்றபடி அதனால் போவது என்று வேறெதுவும் இருக்க முடியாது.
இவை அனைத்தும் வெறும் வயிற்றுப் பிழைப்பிற்காக, சுய நலமிகளால், சமுதாயப் புல்லுருவிகளால் தோற்றுவிக்கப்பட்டவையே அன்றி, உண்மையில் குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் அவ்வாறெல்லாம் எதுவுமேயில்லை என்பதை உணர வேண்டும். இன்றைக்கு இவை போன்றவை அனைத்தும் மூடப்பழக்கங்கள் என்பதை அநேகர் உணர்ந்து கொண்டு, குர்ஆன் ஹதீஸ்களுக்குப் புறம்பாக கப்ஸா விடுவோர், கதைளயப்போரின் பக்கம், கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்து விட்டதால், மேற்கூறிய மூடப்பழக்க வழக்கமெல்லாம் புறமுதுகு காட்டி ஓடிக் கொண்டிருக்கின்றன.
அநேக ஊர்களில் மா இலைகளில் எழுதிக் கரைத்துக் குடிக்கும் பழக்கம் அடியோடு நின்று போய் விட்டது. எத்தனை காலம் தான் இந்த ஏமாற்று வித்தைக்காரர்களுக்கு மக்கள் பலியாகிக் கொண்டிருப்பார்கள். ஏமாறுவோர் இருந்தால் தானே ஏமாற்றுவோர் இருக்க முடியும்? இன்றைக்கு ஓரளவேனும் குர்ஆன் ஹதீஸ்களை மக்கள் சிந்திக்கத் துவங்கியதன் பயனாக மூட நம்பிக்கை, தீய பழக்க வழக்கங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அல்லாஹ்வின் பேரருளால் இந்நிலை நீடிக்கும் பொழுது, இம்மூட நம்பிக்கைகள் எல்லாம் ஓடி மறைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை.
இத்தகைய மூடப் பழக்கங்கள் அனைத்தும் நமது சமுதாயத்தை விட்டும் அடியோடு ஒழிய, வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.
ஹதீதுகளின் பாகுபாடுகள்
இன்று இஸ்லாத்தின் பேரால் முஸ்லிம்களிடையே நீண்ட காலமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பல ஹதீதுகள் பலவீனமானவை, இட்டுக் காட்டப்பட்டவை என்ற உண்மையை நாம் பலவீனமானவை, இட்டுக்கட்டபட்டவை என்ற உண்மையை நாம் வெளிப்படுத்தும்போது, நாங்களாக இன்று கற்பனை செய்து அவற்றை பலவீனமானவை, இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறுவதாக மக்களுக்கு மத்தியில் அவதூறு பரப்பப்பட்டு வருகின்றது. ஆகவே, அவற்றைப்பற்றிய விவரங்களை மக்களுக்கு விளக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
"நான் சொல்லாததை நான் சொன்னதாகச் சொல்பவர், தன்னுடைய இடத்தை நரகில் ஆக்கிக் கொள்ளட்டும்" என்ற நபி(ஸல்) அவர்களின் அமுதவாக்கு, பொய்யான ஹதீதுகள் இட்டுக்கட்டப்படும் என்ற முன்னறிவிப்பைத் தருகின்றது. ஆகவே, ஹதீது என்று சொன்னவுடன் அதன் தரத்தைப் பற்றி ஆராய நாம் கடமைப்பட்டுள்ளோம். பொய்யான ஹதீதுகள், மறுமையை மறந்து, இவ்வுலக சுகபோகங்களை விரும்பியவர்களால், இட்டுக்கட்டப்பட்டவை என்பது தெளிவான ஒரு விஷயம்.
நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு சில முனாபிக்கீன்கள் இஸ்லாத்தை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், நல்லாட்சி நடத்திய 4 கலீபாக்களுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்கும் பேராசையோடும் பொய்யான ஹதீதுகள் புனையப்பட்டு மக்களுக்கு மத்தியில் பரப்பப்பட்டன. அது உருமாறி, மார்க்கத்தை அற்ப உலக ஆதாயத்திற்காகப் பயன்படுத்தியவர்களால், பொய்யான ஹதீதுகள் புதுப்பொலிவைப் பெற்று மக்களிடையே சகஜமாக உலாவர ஆரம்பித்தன.
ஹிஜ்ரி 80 லிருந்து 241 வரை, 4 இமாம்களது கால கட்டத்தில் பொய்யான ஹதீதுகள் நடைமுறையில் இருந்து வந்தாலும், அவற்றின் விபரீதப்போக்கு உச்சத்தை அடையவில்லை. ஆகவே, இந்தக் காலகட்டத்தில் ஹதீதுகளைத் தரம் பிரிக்கும் முயற்சி நடைபெறவில்லை, அதற்கடுத்த காலகட்டத்தில் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகள் தங்கள் சுய ரூபத்தைக் காட்ட ஆரம்பித்தன. பலர் சுய வேட்கையோடு அவற்றை நெய்வார்த்து வளர்த்து வந்தனர். ஆகவே, ஹதீதுகளைத் தரம்பிரிக்கும் அவசியம் அக்காலக்கட்டத்தில் ஏற்பட்டது. இந்தக் கலைக்கு வித்திட்டவர் இமாம்களுள் ஒருவரான ஹிஜ்ரி 241 ல் மரணமடைந்த இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் என்று சொல்லலாம். அவரது மாணவரான இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் அது விஷயத்தில் முழுக் கவனம் செலுத்தி, அவர்கள் திரட்டிய பல இலட்சக்கணக்கான ஹதீதுகளை இரவு பகலென்று பாராமல் அலசி ஆராய்ந்து 7275 ஹதீஸ்களை மட்டுமே பதிவு செய்தனர். அதே போல் இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்களும், தாங்கள் திரட்டிய லட்சக்கணக்கான ஹதீஸ்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து, உண்மையான ஹதீஸ்கள் என்று கண்ட சில ஆயிரக்கணக்கான ஹதீஸ்கள் மட்டும் பதிவு செய்தனர்.
இதற்குப் பின் தோன்றிய சில ஹதீஸ்களை வல்லுனர்கள் தங்களுக்குக் கிடைத்த ஹதீஸ்களையும் பதிவு செய்து, அந்த ஹதீஸ்கள் விஷயமாக, ராவிகள் விஷயமாக, இஸ்நாது விஷயமாகத் தங்களுக்குக் கிடைத்த விவரஙகளையும் தங்களது நூல்களிலேயே பதிவு செய்து வைத்தனர். அதன் பின் தோன்றிய சில ஹதீஸ்கலை வல்லுனர்கள் தங்களுக்குக் கிடைத்த ஹதீஸ்களை எல்லாம் அறிவிப்போடு பதிவு செய்தனரே அல்லாமல், அவர்களின் குறை நிறைகளைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அவ்வாறு அவர்கள் குறிப்பிடாததற்கு "அஸ்மாவுர் - ரிஜால்" கலை வளர்ந்து ஹதீஸ்களின் அறிவிப்பாளர்களின் வரிசையில் வரக்கூடிய நபர்கள் அனைவரது சரித்திரங்களும் பெரும்பாலும் திரட்டப்பட்டு சேகரிக்கப்பட்டிருந்தன.
ஒரு ஹதீஸைப்பற்றிய ஐயம் ஏற்பட்டால், உடனடியாக அறிவிப்பாளர்களின் வரிசையையும், அவர்களின் குணாதிசயங்களையும் ஆராய்ந்து அந்த ஹதீஸின் தரத்தை நிர்ணயிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருந்தன.
மர்ஃபூஃ, முஸ்னது, முத்தஸில் போன்ற பிரிவு வாரியான அடிப்படையில் ஸஹீஹான ஹதீதுகளையும், முதல்லஸ், முர்ஸல், முன்கத்தஃ, மவ்கூஃப் போன்ற பிரிவுகளின் அடிப்படையில் லயீஃபான ஹதீதுகளையும், முன்கர் போன்ற அடிப்படையில் மவ்லூவான ஹதீதுகளையும் தரம்பிரித்து பாகுபடுத்தி நிர்ணயம் செய்து காட்டப்படுகின்றன.
ஆக, ஐந்தாம் நூற்றாண்டிலேயே, குர்ஆன் - ஹதீஸ்களுக்கு முரண்பட்ட தக்லீத், தஸவ்வுஃப் தத்துவங்கள் இஸ்லாத்தின் பேரால் நுழைக்கப்படுவதற்கு முன்பே, ஹதீஸ்கலை வல்லுனர்களாலும், 'அஸ்மாவுர் ரிஜால்' கலை வல்லுனர்களாலும் ஹதீஸ்கள் அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டு தெள்ளத் தெளிவாக மேற்கூறியபடி அறிவிக்கப்பட்டுள்ளன.
மரியாதைக்குரிய 4 இமாம்களுக்கும் சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு, அவாகளின் வழிகாட்டுதலுக்கு விரோதமாக சில சுய நலமிகளால் மத்ஹபுகள், தரீகாக்கள் தோற்றுவிக்கப்படுவதற்கு முன் வாழ்ந்த இஸ்லாமியப் பெரியோர்களால், தெளிவாக ஆராயப்பட்டு, அவர்களது கிதாபுகளில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில்தான் நாங்கள் ஸஹீஹ், லயீஃப், மவ்லூஃ என்று சொல்லுகிறோமெயல்லாமல், எங்கள் இஷ்டத்திற்கு நாங்களாக கூட்டி குறைத்து எதையும் சொல்லவில்லை என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக ஆராயப்பட்டு, வடித்தெடுக்கப்பட்டு லயீஃப் என்றும் மவ்லூஃ என்றும் சந்தேகத்திற்கு இடமின்றி பிரித்திறிவிக்கப்பட்டு அன்றைய கிதாபுகளில் பதிவு செய்யப்பட்டிருந்தும், மீண்டும் எப்படி இந்த லயீஃபான, மவ்லூஃஆன ஹதீஸ்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் நுழைந்து ஆழவேருன்றிக் கொண்டன?
அதற்கு முன்னால் "பலவீனமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஏன் செயல்படக்கூடாது?" என்று பலர் ஐயங்களைப் கிளப்புவதால் அது பற்றிய காரணத்தை முதலில் பார்ப்போம்.
அறிவிப்பாளர்களில் எவரேனும் நன்னடத்தை அற்றவராகவோ, நினைவாற்றல் குறைந்தவராகவோ இரண்டு அறிவிப்பாளர்களுக்கிடையில் சந்திப்பு இல்லாமலிருந்தாலோ அத்தகைய ஹதீஸ்களை பலவீனமான ஹதீஸ்கள் என்று ஹதீஸ்கலை வல்லுனர்கள் நிர்ணயித்துள்ளனர்.
அதாவது அந்த ஹதீஸில் குறிப்பிட்ட விஷயத்தை நபி(ஸல்) சொன்னதாக திட்டவட்டமாகத் தெரியும் போது அவசியம் அதற்குக் கட்டுப்பட வேண்டும்" என்பதில் எவருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் நபி(ஸல்) அவர்கள் சொல்லி இருப்பார்களா? என்ற சந்தேகம் தோன்றும்போது என்ன செய்வது? நாம் எப்படி நடந்து கொள்வது? அதற்கு திருக்குர்ஆன் நமக்குத் தெளிவான விளக்கத்தைத் தருகின்றது.
"உமக்குத் திட்டவட்டமான அறிவு இல்லாத விஷயங்களை நீர் பின்பற்றக் கூடாது." (அல்குர்ஆன் 17:36)
திட்டவட்டமாக நமக்கு ஒன்றைப் பற்றித் தெரியாதபோது அதனைப் பின்பற்றுவது கூடாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அல்லாஹ் கூறிவிடுகிறான். அவ்வாறு பின்பற்றுவதை தடை செய்கிறான். பலவீனமான ஹதீஸ்களைப் பொருத்தவரை திட்டவட்டமாக நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சொல்ல முடியாத நிலை, அதனால் பலவீனமான ஹதீஸ்கள் அடிப்படையில் செயல்படுவது கூடாது என்று தெரிகின்றோம்.
நபி(ஸல்) அவர்களும் இதுபற்றிக் குறிப்பிடும்போது "உனக்கு சந்தேகம் தருபவற்றை நீ விட்டுவிடு! சந்தேகமற்ற (உறுதியான) விஷயங்களின் பால் நீ சென்றுவிடு!" என்று கூறியுள்ளார்கள். இதனை இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் தனது புகாரி நூலில் "வியாபாரங்கள்" என்ற பாடத்திலும் இமாம் திர்மிதி(ரஹ்) அவர்கள் "கியாமத்" என்ற பாடத்திலும், இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்) தனது முஸ்னத்திலும் அறிவிக்கின்றனர்.
இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸும், சந்தேகத்திற்குரியவைகளைப் பின்பற்றுவதை தடைசெய்து விடுகின்றது. இந்தக் கருத்தைச் சொல்லக் கூடிய இன்னும் பல ஹதீஸ்களும் வந்துள்ளன.
எனவே எந்த ஒரு ஸஹீஹான ஹதீஸின் கருத்துடன் மோதாவிட்டாலும் அதில் சந்தேகம் இருக்கின்ற ஒரு காரணத்தினாலேயே அதனைப் பின்பற்றக்கூடாது என்பது தெளிவு.
அவ்வாறிருக்க பலவீனமான சில ஹதீஸ்களை திர்மிதி போன்ற இமாம்கள் ஏன் தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளனர்? என்ற ஒரு கேள்வியும் சிலரால் கிளப்பப்படுகிறது. அன்றைய காலத்தில் "பலவீனமான ஹதீஸ்கள்" ஆதாரப்பூர்வமானவை என்ற முத்திரையுடன் உலாவந்தன. அதனை அடையாளம் காட்டி அதன் உண்மை நிலையை உணாத்திடவே அந்த இமாம்கள் தங்கள் நூல்களில் பதிவு செய்து அடையாளம் காட்டுகின்றனர்.
உதாரணமாக "நஜாத்" தனது இதழ்களில் கதைகளின் பின்னணியில் என்று எழுதுகின்றது. அந்தக் கதைகள் ஏதோ ஆதாரமற்றவைபோல் மக்கள் மத்தியில் சித்தரிக்கப்படுகின்றன. அது சரியானாதல்ல என்று அடையாளம் காட்டுவதற்காக அந்தக் கதைகளை எழுதி நாம் விமர்ச்சிக்கவில்லையா? அது போல்தான் சில ஹதீஸ்களை இமாம்கள் பலவீனமானது என்று அடையாளம் காட்டுவதற்காக குறிப்பிடுகின்றனர்.
முன்கரான ஹதீதுகள்:-
அடுத்து முன்கரான, இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகளைக் கொண்டு அமல் செய்வது குறித்து ஆராய்வோம்.
குர்ஆன் வசனங்களுக்கோ, உண்மையான ஹதீதுகளுக்கோ முரண்படுகின்ற ஹதீதுகள் "முன்கரான" - இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகள் என்று கணிக்கப்படுகின்றன. இந்த முன்கரான, மவ்லூஃஆன ஹதீதுகளை வைத்துச் செயல்படும் போது, குர்ஆன் வசனங்களையோ, உண்மை ஹதீதுகளையோ புறக்கணிக்கும் நிலை ஏற்படுகின்றது. இது அறிவுடையோர் செய்யும் செயல் அன்று.
உதாரணமாக, "ரமழான் இரவில் நபி(ஸல்) அவர்கள் 11 ரகஅத்துகளுக்கு மேல் தொழுததே இல்லை" என்ற, ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு உண்மை ஹதீது, 'ஸிஹாஹ்ஸித்தா' முதல் 15 ஹதீது கிதாபுகளில் "ரமழான் இரவுத் தொழுக" பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜாபிர்(ரழி) அவர்களால் அறிவிக்கப்படும் இன்னொரு ஹதீது, நபி(ஸல்) ரமழான் இரவில் 11 ரக அத்துகள் தொழ வைத்தார்கள்", என்று ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்த ஹதீதை ஊர்ஜிதம் செய்கின்றது. மேலும் உபை இப்னு கஃபு(ரழி) ரமழான் இரவில் பெண்களுக்கு 11 ரகஅத்துகள் தொழ வைத்து விட்டு, நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அந்த சம்பவத்தை எடுத்துச் சொன்ன போது நபி(ஸல்) அவர்கள் அதை மெளனமாக அங்கீகரித்த இன்னொரு ஹதீது, ஆயிஷா(ரழி) அவர்களின் 11 ரகஅத் அறிவிப்புக்கு இன்னும் அதிக வலுவைத் தருகின்றது. ஆக இந்த மூன்று உண்மை ஹதீதுகளும், நபி(ஸல்) அவர்களின் ரமலான் இரவுத் தொழுகை 11 ரக்அத்துகள் மட்டுமே என்பதைத் தெளிவாகச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன.
இந்த நிலையில் பைஹகி, தப்ரானி போன்ற நூல்களில் காணப்படும், இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படும் ஒரு ஹதீதில் நபி(ஸல்) ரமழான் இரவில் 23 ரகஅத்துகள் தொழுததாகக் காணப்படுகின்றது. ஆக முன்னால் நாம் பார்த்த மூன்று ஹதீதுகளுக்கும் முரணாக இந்த ஹதீது காணப்படுகின்றது. அதனால் இந்த ஹதீதை ஆராயக் கடமைப்பட்டுள்ளோம். அப்படி ஆராயும்போது 'அஸ்மாவுர் ரிஜால்' கலை வல்லுனர்கள், இந்த ஹதீதை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் வரிசையில் வரும், அபூஷைபா இப்றாஹிம் இப்னு உதுமான், **ஹனம் இப்னு உதைபா கூபி** ஆகிய இருவரும் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர். பொய்யர்கள் என்று அறிவித்திருப்பது தெரிய வருகின்றது. அதனால் ஹதீதுக் கலை வல்லுனர்கள் இந்த ஹதீதை "முன்கரான ஹதீது' என்று அறிவிக்கின்றனர்.
ஆக சுமார் 10 நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஆயிஷா(ரழி) அவர்களின் 11 ரகஅத் ஹதீதுக்கு எதிராக இந்த 23 ரகஅத் என்ற ஹதீது இருப்பதால், இந்த 23 ரகஅத் ஹதீதை ஹதீதுக் கலை வல்லுனர்கள் தங்களது ஆதாரப்பூர்வமானன நூல்களில் நிராகரித்துள்ளனர்.
முரண்பட்ட கருத்துக்கள்:-
அடுத்து உமர்(ரழி) அவர்கள் உபை இப்னு கஃபு(ரழி) தமீமுந்தாரி(ரழி) ஆகிய இருவருக்கும், மக்களுக்கு 11 ரகஅத்துகள் தொழ வைக்கக் கட்டளையிட்ட, ஸாயிப் இப்னு யஸீதால்(ரழி) அறிவிக்கப்படும் ஒரு சம்பவம் முஅத்தா இமாம் மாலிக்கில் காணப்படுகின்றது. அதற்கு அடுத்து அதே முஅத்தா இமாம் மாலிக்கில், "உமர்(ரழி) அவர்கள் காலத்தில் மக்கள் 23 ரகஅத்துகள் தொழுது வந்தார்கள்" என்ற சம்பவம் யஸீதுப்னு ரூமானால் அறிவிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. உமர்(ரழி) அவர்கள் 23 ரகஅத்துகள் தொழ வைக்கும்படி கட்டளையிட்டதாகவும், தொழுததாகவும் ஒரு சில கிதாபுகளில் பதிவாகி உள்ளன. ஆக உமர்(ரழி) அவர்களைத் தொட்டும் முரண்பட்ட இரு கருத்துக்கள் (11 ரகஅத், 23 ரகஅத்) காணப்படுகின்றன.
இவர்களை நிராகரித்தவர்கள்
* அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) யஹி இப்னு முயின் அபூஜர்ஆ, அபூ ஹாதம் ராஸி, தகபி.
** இப்னு ஜெளசி, அபூ ஹாதம் ராஸி, தகபி.
இப்போது இந்த முரண்பட்ட இரு கருத்துக்களை ஆராய்வோம். உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடப்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயத். நபி(ஸல்) 11 ரகஅத் தொழுதிருக்க, அதற்கு மாற்றமாக உமர்(ரழி) அவர்கள் மீது நாம் நல்லெண்ணமே கொள்ள முடியும். நபி(ஸல்) அவர்களுக்கு மாறு செய்யும் எண்ணத்தை உமர்(ரழி) அவர்கள் கொண்டிருந்தார்கள் என்று கனவில் கூட நாம் நினைக்க முடியாது. 23 ரகஅத் சம்பவத்தை ஆராயும் போது அறிவிப்பாளர்களில் பல பலவீனங்களைப் பாாக்க முடிகின்றது. உதாரணமாக, "உமர்(ரழி) அவர்கள் காலத்தில் மக்கள் 23 ரகஅத் தொழுதார்கள்" என்று அறிவிக்கும் யஜீதுப்னு ரூமான், உமர்(ரழி) அவர்களின் காலத்தில் பிறக்கவே இல்லை. பஸீதுப்னு ரூமானின் இறப்பு ஹிஜ்ரி 130 என்று அஸ்மாவுர்ரிஜால் கலை வல்லுனர் இப்னுஹஜர் அஸ்கலானி(ரஹ்) அவர்கள் பதிவு செய்துள்ளனர்.
உமர்(ரழி) அவர்களின் மரணம் ஹிஜ்ரி 24. யஸீதுப்னு ரூமான் ஒரு நூற்றாண்டு வாழ்ந்திருந்தாலும், உமர்(ரழி) காலத்தில் பிறந்திருக்கவே முடியாது. ஆக தொடர்பு இல்லை. இப்படி உமர்(ரழி) 23 ரகஅத் தொழுதார்கள், தொழ வைக்கும்படி கட்டளையிட்டார்கள், உமர்(ரழி) காலத்தில் 23 ரகஅத் தொழப்பட்டது ஆகிய அனைத்து அறிவிப்புகளும் உண்மைச் சம்பவத்திற்கும், நபி(ஸல்) அவர்களின் சுன்னத்திற்கும் மாற்றமாக அமைந்துள்ளன.
அப்படியே, ஒரு வாதத்திற்காக உமர்(ரழி) காலத்தில் மக்கள் 23 ரகஅத் தொழுதார்கள் என்று நாம் ஏற்றுக் கொண்டாலும், அதை நாம் மார்க்கமாகக் கொள்ள முடியாது. காரணம் உமர்(ரழி) காலத்தில் மக்கள் பல தவறான மார்க்க முரணான காரியங்களிலும் ஈடுபட்டிருந்திருப்பர், ஈடுபட்டிருந்திருக்கலாம். இதையெல்லாம் மார்க்கத்திற்குரிய ஆதாரங்கள் என்று எந்த அறிவாளியும் ஏற்றுக் கொள்ள மாட்டான். ஆனால் மக்கள் 23 ரக்அத் நபி(ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு மாற்றமாகத் தொழுது வந்ததை மாற்றி, உமர்(ரழி) அவர்கள் உபை இப்னு கஃபு(ரழி), தமீமுந்தாரி(ரழி) ஆகிய இருவருக்கும், மக்களுக்கு நபி(ஸல்) அவர்களின் சுன்னத்துப்படி 11 ரகஅத் தொழ வைக்கும்படி கட்டளையிட்டிருப்பார்கள், என்று நினைக்கப் போதிய ஆதாரம் இருக்கிறது. உமர்(ரழி) நபி(ஸல்) அவர்களின் சுன்னத்துப்படி நடந்தார்கள் என்று நல்லெண்ணம் கொள்ள வேண்டுமேயல்லாது, நபி(ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு விரோதமாக 23 ரக்அத் தொழத் துணை போனார்கள் என்று நாம் ஒரு போதும் எண்ண முடியாது.
நாம் செய்ய வேண்டியது என்ன?
இன்னும் ஒரு வாதத்திற்கு உமர்(ரழி) அவர்களே 23 ரகஅத்துகள் தொழுதார்கள் என்று வைத்துக் கொள்வோம். நாம் என்ன செய்ய வேண்டும்?
நபி(ஸல்) அவர்கள் ரமழானில் 11 ரகஅத் தொழுதார்கள் என்று ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 23 ரகஅத் பற்றிய அறிவிப்பு அதற்கு முரணாகக் காணப்படுகின்றது. 23 ரகஅத்தை விட்டு 11 ரகஅத்தை எடுத்துக் கொள்பவர்கள் உமர்(ரழி) அவர்களை அவமதிப்பதாகக் குற்றம் சாட்டுபவர்கள், அதே அடிப்படையில் 11 ரகஅத்தை விட்டு 23 ரகஅத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் நபி(ஸல்) அவர்களையே அவமதிக்கிறார்களே? இது நியாயம் தானா? நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவதற்கே முதலில் நாம் கடமைப்பட்டுள்ளோம். நமது கலிமா "லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்" என்பதே அல்லாமல் "லாயிலாஹ இல்லல்லாஹ், உமர் ரஸுலுல்லாஹ்" அன்று. நிச்சயமாக உமர்(ரழி) அல்லாஹ்வின் ரஸுல் அல்லர். நபி(ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தில் இப்படித்தான் நடந்தார்கள் என்பது தெளிவாக இருந்தால், அதை விட்டுவிட்டு நாம் வேறு யாரையும் பின்பற்ற மார்க்கம் நமக்கு அனுமதி தரவில்லை. நபி(ஸல்) அவர்கள் "எனது சுன்னத்தையும், எனது குலாபாயே ராஷித்தீன்களின் சுன்னத்தையும் பின்பற்றி நடங்கள்" என்று சொல்லியிருக்கிறார்களே, என்று யாராவது கேட்டால் அதற்குரிய பதிலாவது,
நபி(ஸல்) அவர்கள்"எனது சுன்னத்தையும், எனது குலாபாயே ராஷிதீன்களின் சுன்னத்தையும் பின்பற்றி நடங்கள்" என்று தனது சுன்னத்திற்கு முன்னுரிமை கொடுத்துச் சொல்லி இருக்கிறார்களே அல்லாமல், "எனது சுன்னத்தை விட்டுவிட்டு, எனது குலபாயே ராஸிதீன்களின் சுன்னத்தைப் பின்பற்றுங்கள்" என்றோ, "எனது சுன்னத்திற்கு மாற்றமாக எனது குலபாயே ராஷிதீன்களின் சுன்னத்தைப் பின்பற்றுங்கள்," என்றோ சொல்லவில்லை. இப்படிச் சொல்லி இருந்தால் நபி(ஸல்) அவர்களின் 11 ரகஅத்தை விட்டு விட்டு உமர்(ரழி) அவர்களின் சுன்னத் (அப்படிச் சொல்லப்படுகிறது, உண்மை அல்ல) 23 ரகஅத்தை எடுத்துக் கொள்ளலாம்.
அப்படி நபி(ஸல்) அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் சொல்லியுள்ளபடி நடப்பதாக இருந்தால் நபி(ஸல்) அவர்கள் ரமழானில் எத்தனை ரகஅத்துகள் தொழுதார்கள் என்பது தெளிவில்லாமல் இருந்தால் மட்டுமே, உமர்(ரழி) அவர்களின் சொல்லை ஆதாரமாகக் கொள்ள முடியும். அதாவது ஒரு விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் எப்படிச் செய்தார்கள் என்ற விபரம் தெரியாமல் இருந்தால் மட்டுமே, குலபாயே ராஷிதீன்கள் சுன்னத்தை எடுத்துக் கொள்ள முடியும். ஒரு விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் இப்படித்தான் செய்தார்கள் என்பது தெளிவாக இருக்கும் போது, அந்த விஷயத்தில் குலபாயே ராஷித்தீன்களின் சுன்னத்திற்கு இடமே இல்லை. அதுவும் குலபாயே ராஷிதீன்களின் சுன்னத்து என்று சொல்வதிலிருந்து ஆட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களிலும், நிறைவு செய்யப்பட்ட மார்க்கத்தை அமுல்படுத்துவதில் காலத்திற்குக் காலம் ஏற்படும் சில சிக்கல்களைத் தீர்க்கும் விஷயங்களிலும், இது சாத்தியமே அல்லாமல், வணக்க வழிபாடு அடிப்படையில் அல்ல என்பது தெளிவாகும். காரணம் வணக்க வழிபாடுகளை விதிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம். நபி(ஸல்) அவர்களுக்கும் இதில் அதிகாரம் இருந்திருக்கவில்லை. அல்லாஹ்வின் உத்தரவுப்படியே நபி(ஸல்) மார்க்க உத்தரவுகளைப் பிறப்பித்தார்கள் என்னும் உண்மையை, குர்ஆனின் பல வசனங்கள் தெளிவு படுத்துகின்றன. (3:20, 5:92, 5:99, 16:35, 16:82, 24:54, 29:18, 6:17, 69:44) நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வோடு வஹியின் தொடர்போடு இருந்ததனால் இது சாத்தியமாயிற்று.
குலபாயே ராஷிதீன்கள் வஹியின் தொடர்புடையவர்கள் அல்லர். ஆகவே குலபாயே ராஷிதீன்கள் எடுத்த முடிவுகள் அனைத்தும் குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் உட்பட்டே இருந்திருக்க வேண்டும். குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் மாற்றமான முடிவுகளை ஓரிரு சந்தர்ப்பங்களில் அவர்கள் செய்ய நேரிட்ட போது குர்ஆனைக் கொண்டும் ஹதீதைக் கொண்டும் அவர்கள் திருத்தப்பட்டிருக்கிறார்கள். உதாரணமாக, நபி(ஸல்) அவர்கள் வபாத்தானபோது, அதை மறுத்த உமர்(ரழி) அவர்களின் கூற்று குர்ஆனின் வசனங்களைக் கொண்டு நிராகரிக்கப்பட்டது. உமர்(ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மஹர் தொகையை மட்டுப்படுத்தி ஆணை பிறப்பித்த போது, ஒரு சாதாரண பெண்மணியால் குர்ஆன் வசனத்தைக் கொண்டு நிராகரிக்கப்பட்டது. இதுபோல் அவர்கள் செய்த தீர்ப்புக்களில் சில, உண்மையான ஹதீதுகள் கொண்டு நிராகரிக்கப்பட்டன. உதுமான்(ரழி), அலி(ரழி) இவர்களின் ஆட்சிக் காலத்திலும் இப்படிச்சில சம்பவங்கள் நடைபெற்று குர்ஆன், ஹதீதைக் கொண்டு நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. விரிவஞ்சி அவற்றின் விபரம் இங்கே தரப்படவில்லை.
தவறுவது மனித இயல்பு
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் குலபாயே ராஷிதீன்களோ, ஸஹாபாக்களோ, இமாம்களோ, மற்றும் பெரியார்களோ, குர்ஆன் ஹதீதுக்கு மாற்றமாக மார்க்கத்தில் கூட்டவோ குறைக்கவோ முடியாது என்ற மாபெரும் உண்மையை நமக்குத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. இப்படி நாம் எழுதிய மாத்திரத்தில், முன் சென்ற பெரியார்களை நாம் அவமதிப்பதாகவும், எம்மீது குற்றஞ்சாட்டுகின்றனர். இமாம்களெல்லாம் தவறு செய்திருப்பார்களா? என்று ஆச்சரியத்தோடு கேட்கின்றனர். அப்படியானால் இமாம்களெல்லாம் தவறே செய்யாதவர்கள் என்று அவர்கள் நம்புகின்றனரா? இந்த நம்பிக்கை எவ்வளவு பெரிய குற்றம் என்று அவர்கள் சிந்திப்பதில்லை. தவறே செய்யாத தனித்தன்மையை அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம். அவனுக்குச் சொந்தமான தனித் தன்மையை இமாம்களுக்குக் கொடுப்பதன் மூலம், இமாம்களை அல்லாஹ்வாக்குகின்றனர். மரணிக்காதவன் என்ற, அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான தனித்தன்மையை உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்குச் சொந்தமாக்கியபோது, அபூபக்கர்(ரழி) அவர்கள் "யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ, அவர்கள் அறிந்து கொள்ளட்டும், அந்த முஹம்மது இறந்து விட்டார்" என்று அறிவித்ததன் மூலம், அல்லாஹ்வுக்குச் சொந்தமான தனித்தன்மையை மனிதர்களுக்குக் கொடுப்பதை வணக்கம் என்றே குற்றம் சாட்டுகிறார்கள். இந்த அடிப்படையில், இமாம்கள் தவறே செய்யதவர்கள் என்று நம்புகிறவர்கள் இமாம்களை வணங்குகிறார்கள் என்றே பொருள். காரணம் தவறே செய்யாத தனித் தன்மையை அல்லாஹ் நபிமார்களுக்கும் கொடுக்கவில்லை. அவர்களிலும் சில அசம்பாவிதங்களை இடம் பெறச் செய்து அவற்றை வஹி மூலம் திருத்துவது கொண்டு மக்களுக்கு நேர்வழி காட்டியதோடு, அந்தத் தவறே செய்யாத தனித்தன்மை தனக்கு மட்டுமே சொந்தம் என்பதை நிலை நாட்டியிருக்கிறான். நபி(ஸல்) அவர்களின் வாழ்விலும் அப்படிச் சில சம்பவங்கள் இடம் பெற்று, அல்லாஹ் திருத்தியுள்ள வசனங்களை இன்று நாம் ஓதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதிலிருந்து நாம் படிப்பினை பெறுவதில்லை. "ஆதம்(அலை) தவறு செய்தார். ஆதமுடைய மக்களும் தவறு செய்பவர்களே. தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் தெளபா செய்பவர்கள்" என்ற நபி(ஸல்) அவர்களின் வாக்கும் இதைத் தெளிவுபடுத்துகின்றது. நபிமார்களுக்கே சொந்தப் படுத்தப்படாத, அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான அந்தத் தனித்தன்மையை குலபாயே ராஷிதீன்களுக்கோ, ஸஹாபாக்களுக்கோ, இமாம்களுக்கோ, நாம் சொந்தப்படுத்த முடியுமா என்பதைத் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்! ஒரு போதும் முடியாது. ஆகவே குர்ஆனுக்கோ, ஹதீதுகளுக்கோ மாற்றமாக யாருடைய சொல் இருந்தாலும், அதைவிட்டுவிட்டு குர்ஆன் ஹதீதைப் பின்பற்றுவதே நேர்வழி நடப்பதாகும். குர்ஆன் ஹதீதுக்கு மாற்றமாக நேர்வழி நடந்த யாரும் சொல்லி இருக்கமாட்டார்கள் என்றே நம்ப வேண்டும்.
இந்த அடிப்படையில், 23 ரகஅத் ரமலான் தொழுகை உமர்(ரழி) அவர்கள் தொழுதிருக்க மாட்டார்கள். தொழ வைக்கக் கட்டளையிட்டிருக்கமாட்டார்கள். அப்படியே உமர்(ரழி) செய்திருந்தால், நபி(ஸல்) அவர்களுக்கு மாற்றமாகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்திருக்க மாட்டார்கள். மனித இயல்பின் காரணமாக நடந்த அசம்பாவிதமாக இருக்கும் என்று அவர்கள் மீது நல்லெண்ணம் கொண்டு அதை விட்டு விட்டு நபி(ஸல்) அவர்களையே பின்பற்றி 11 ரகஅத் தொழுவதே சிறப்பாகும். - வளரும்.
பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் 1000 வருடங்களுக்கு முன்பே தெளிவாக அடையாளம் காட்டப்பட்டிருந்தும், இன்றளவும் அவை மக்களால் நிராகரிக்கப்படாமல் போனதற்கு காரணம் என்ன? முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் பெரும்பாலோர் அவைகளை மாாக்கமாக அங்கீகரிக்க என்ன காரணம்? மக்கள் மனங்களில் அவை ஆழமாக வேரூன்றியது எதனால் என்பதை இந்த இதழில் காண்போம்.
பழமையை, நீண்ட காலமாக நடைமுறையில் இருப்பதை விரும்பக் கூடியதாகவே மக்களின் மனப்பான்மை அமைந்தள்ளது. ஷைத்தான், உண்மைக்கு முரணாணதை மக்கள் மனங்களில் விதைத்துவிடுகிறான். மக்களும் அவற்றில் முழ்கிவிடுகிறார்கள். காலங்கள் சில கடந்தபின் "அவர்கள் செய்யும் காரியங்கள் எவ்வளவு தவறானவை" என்று எவ்வளவு ஆதாரங்களுடன் தெளிவாக எடுத்துக் காட்டினாலும், அந்தத் தவறான வழியிலிருந்து விடுபட்டு நல்வழியை நாட அவர்கள் விரும்புவதேயில்லை. தாங்கள் இவ்வளவு காலம் செய்ததே நேர் வழி என்று எண்ணி அதனைத் தொடர்ந்து செய்யவே விரும்புகின்றனர்.
கடந்த காலங்களில் இறைவனின் செய்தியை மக்களுக்கு அறிவித்த நபிமார்களைப் புறக்கணித்ததற்கும் இந்த மனப்பான்மையே காரணமாக அமைந்திருந்தது. இன்றும் குர்ஆன் ஹதீதுகளை எடுத்துச் சொல்லும்போது அதே மனப்பான்மைதான் அவர்களை, குர்ஆன் ஹதீஸ்களைப் புறக்கணிக்கச் செய்து கொண்டிருக்கின்றது. தங்கள் தவறிலேயே அவர்களை நிலைத்திருக்கச் செய்து விடுகின்றது.
உதாரணமாக "பராஅத்" இரவின் விசேஷ அமல்கள் பற்றிய ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டதும், பலவீனமானதுமாகும்" என்று அன்றே ஹதீஸ் கலை வல்லுனர்கள் அடையாளம் காட்டி இருந்தும் அதனை அவர்கள் விடுவதற்குத் தயாராக இல்லை. தங்கள் செயலை எப்படியும் நியாயப்படுத்தியே தீருவது என்ற எண்ணத்தை அவர்கள் பெற்றிருப்பதை நாம் காண முடிகின்றது. இந்த மனப்பான்மை மக்கள் மனங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளதால், "பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் அடையாளம் காட்டப்பட்டிருந்தும் அவர்கள் இன்றளவும் அவற்றை நிராகரிக்க முன்வருவதில்லை.
மக்களின் இந்த மனப்பான்மையைப் புரிந்து கொண்ட மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாக் கொண்ட போலி அறிஞர்கள் அந்த, மனப்பான்மையை மேலும் வளாத்தனர். 'கோயபல்ஸ்' தத்துவப்படி அந்தப் பொய்களையே மக்கள் மத்தியில் திரும்பத் திரும்ப சொல்லி அதை உண்மை என்று நம்ப வைத்தனர். வணக்கம் என்ற பெயரால் நன்மை தானே என்ற பெயரால், மறுமையில் நன்மையை மிக அதிகமாக அடைந்து கொள்ளலாம் என்ற தவறான எண்ணத்தின் அடிப்படையில், பாமர மக்களிடையே இந்த பலவீனமான, இட்டக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் முக்கிய இடத்தைப் பெற்றன. இஸ்லாத்திற்கு, குர்ஆன், ஹதீஸுக்கு முற்றிலும் முரணான சூபிஸ கொள்கையை, இஸ்லாத்தின் பெயரால் மக்கள் மத்தியில் நுழைத்ததால் பலவீனமான இட்டக் கட்டப்பட்ட ஹதீஸ்கள் நன்றாக மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்திட, இதுவும் ஒரு காரணமாகிறது.
ஒருபுறம் அல்லாஹ்வுக்கு அஞ்சிய அறிஞர்கள் போலி ஹதீஸ்களை அடையாளம் காட்டிக் கொண்டிருக்க, மறுபுறம் இந்த போலி அறிஞர்கள் அவைகளை மக்கள் மத்தியில் பரவச் செய்து கொண்டிருந்தனர். மக்கள் விருப்பத்தை நிறைவு செய்யும் விதமாக இந்தப் போலிகளின் போலி ஹதீஸ்கள் அமைந்திருந்ததால், உண்மை அறிஞர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இவர்கள் தான் மக்கள் மத்தியில் மதிப்பைப் பெற முடிந்தது. அன்றும், இன்றும் இதே நிலை தான்.
மக்கள் மனோ இச்சைப்படி நடந்தால் தான் அவர்களால் தங்கள் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்று எண்ணிய முஸ்லிம்(?) மன்னர்களும் இதற்கு ஒரு வகையில் காரணமானார்கள். மார்க்கத்தின் பெயரால் எவ்வளவு அனாச்சாரங்கள் நடந்தாலும், நபி(ஸல்) அவர்கள் பெயரால் எவ்வளவு பொய்கள் கூறப்பட்டாலும், அதனை அவர்கள் கண்டு கொள்ளாமலிருந்தனர். அதற்கு எதிரான முயற்சியை மேற்கொண்டால் மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்த போலி அறிஞர்களின் எதிர்ப்பையும், பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பையும் சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாக இதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதிருந்தனர். உலக ஆதாயத்தையே நோக்கமாகக் கொண்ட போலி அறிஞர்களுக்கு உதவி, அதிகாரங்களை வழங்கினர். அந்த அதிகாரத்தின் துணைகொண்டு இந்தப் போலி அறிஞர்கள் நன்றாகவே இட்டுக்கட்டபட்டவைகளை மக்கள் மனங்களில் ஆழமாகப் பதியச் செய்தனர். தீமைகளில் ஒருவருக்கொருவர் துணை போனார்கள். இவையே பொய்கள் மக்கள் மனங்களில் மெய்யென தோன்றியதற்கான காரணங்களாகும்.
நல்லாட்சி நடத்திய நாற்பெரும் கலிபாக்களின் காலத்தில் இது போன்ற பொய்கள் காணப்பட்டபோது உடனுக்குடன் அவற்றுக்கு எதிரான நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர். அனாச்சாரங்கள் தலை தூக்க அவர்கள் இடம் தரவே இல்லை.
நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் ஒரு மரத்தடியில் உறுதி மொழி வாங்கினார்கள். உமர்(ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் அந்த மரம் புனிதமாகக் கருதப்பட்டு சடங்குகள் பல அங்கே நடப்பது உமர்(ரழி) அவர்களுக்குத் தெரிய வந்தபோது ஊடனே அந்த மரத்தை வெட்டி வீழ்த்த உத்தரவிட்டார்கள். அந்தத் தவறுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
அலி(ரழி) அவர்கள் காலத்தில் அலி(ரழி) பற்றி ஏராளமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் நுழைக்கப்பட்டபோது , உடனே அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்ததோடு, அவை அத்தனையும் பொய் என்று தெளிவு படுத்தினார்கள்.
குர்ஆனையும், உண்மையான ஹதீஸ்களையும் நிலை நாட்டப் பாடுபட்டார்கள். அநாச்சாரங்கள்,பொய்கள் தலைதூக்கவிடாமல் காத்தார்கள். தங்களிடமே ஒரு தவறு நிகழ்ந்து, சாதாரண குடிமகன் சுட்டிக் காட்டினாலும், உடனே தங்களைத் திருத்திக் கொண்டார்கள்.
இந்த நேர்மை மனப்பான்மை பிற்காலத்தில் ஆட்சி நடத்திய மன்னர்களிடம் காணப்படாததால், பொய்யான ஹதீஸ்கள் தனது ஆட்சியை நடத்தின. இன்றும் நடத்திக் கொண்டு இருக்கின்றன.
மக்கள் மனப்பான்மை, உலமாக்கள், சிலரின் சுயநலப் போக்கு மன்னர்களின் பதவி ஆசை, இவை தான் போலி ஹதீஸ்கள் இன்றளவும் மக்கள் மனங்களில் மகத்தான இடத்தைப் பெற்றிருப்பதற்கு காரணங்களாகும்.
பலவீனமான (லயீஃப்) இட்டுக் கட்டப்பட்ட (மவ்லுஃ) ஹதீதுகள் பற்றிய விளக்கங்கள், அவற்றைக் கொண்டு அமல்கள் செய்வதால் ஏற்படும் விபரீதங்கள், அவை தெளிவாக அடையாளம் காட்டப்பட்டுப் பதிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தும், அவை இஸ்லாமிய சமுதாயத்தில் ஆழ வேரூன்றிய காரணங்கள், இவை அனைத்தையும் ஆராய்ந்தோம்.
ஹதீதுகளை நாங்களாக எங்கள் இஷ்டத்திற்கு லயீஃப் என்றும் கூறி வருகிறோம் என்று பரவலாக எங்கள் மீது அவதூறு பரப்பப்பட்டு வந்தது. ஆகவே லயீஃப் மவ்லுஃ ஹதீதுகளின் நிலையையும் எங்களது உண்மையான நிலையையும் பொது மக்களுக்கு தெளிவு படுத்தவே இத்தொடரை ஆரம்பித்தோம்.
ஹதீதுகள் சம்பந்நதப்பட்ட முழு விவரங்களையும் தெளிவாக அறியத் தருமாறு வாசகர்கள் நேரிலும் கடிதங்கள் மூலமும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அடுத்த இதழில் 'நபிமொழி வரலாறு' என்ற தொடரில் மெளலவி S. கமாலுத்தீன் மதனி அவர்கள் அவற்றின் விவரங்களைத் தர இருக்கிறார்கள். ஆனவே நாம் இது வரை எழுதி வந்ததை மீண்டும் ஒருமுறை நினைவுக்குள் கொண்டு வந்து இந்தத் தொடரை முற்றுப் பெறச் செய்கிறோம்.
மீண்டும் பார்ப்போம்
1) பலவீனமான (லயீஃப்) இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகள் நிறைய இருக்கின்றன. அவையே சமுதாயத்தில் அதிகம் உலா வருகின்றன.
2) ஆயினும் அவை அறிஞர்களால் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டு, 1000 வருடங்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டு இனம் காட்டப்பட்டுள்ளன.
3) அவற்றைத் தெளிவாக அடையாளம் காட்டுவதற்காக அறிஞர்கள் அந்த பலவீனமான (லயீஃப்) இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகளைத் தங்கள் நூல்களில் இடம் பெறச் செய்தனர். ஆனால் உலக ஆதாயம் தேடுவோர் அவை தவறானவை என்பதை தெரிந்திருந்தும் வேண்டுமென்றே மக்களிடையே பரப்பி வந்தார்கள்.
4) பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகளை வைத்துக் கண்டிப்பாக அமல்கள் செய்யக்கூடாது.
5) மார்க்கத்தில் கூட்டிக் குறைக்க உள்ள அதிகாரம், அல்லாஹ்(ஜல்)வுக்கு மட்டுமே சொந்தமான தனி அதிகாரம் ஆகும். நபிமார்களுக்கும் அதில் பங்கு கொடுக்கப்படவில்லை என்பதைக் குர்ஆனின் பல வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன என்பதை எடுத்துக் காட்டி இருந்தோம்.
6) நாங்கள் பலவீனமான (லயீஃப்) இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகள் என்று எடுத்துக் காட்டுபவை அனைத்தும் 1000 வருடங்களுக்கு முன்பே அறிஞர் பெருமக்களால் தெளிவான ஆதாரங்களுடன் அடையாளம் காட்டப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடுநிலைக் கண்ணோட்டத்தோடு பாாப்பவர்கள் அந்தக் கிதாபுகளை புரட்டிப் பார்த்து உண்மையை உணாந்து கொள்ளலாம். எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்(ஜல்) அவனால் வஹி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதையும் அதாவது அல்குர்ஆனையும், அவனால் அங்கீகரிக்கப்பட்டவைகளையும் (இது வஹியின் காலத்தில் மட்டுமே சாத்தியமாகும்), அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இம்மூன்றாலும் நிலைநாட்டப்பட்டவற்றையும் மட்டுமே மார்க்கமாக ஏற்றுக் செயல்படும் வெற்றி பெறும் கூட்டத்தில் நம்ைம சேர்த்து வைப்பானாக. ஆமீன். முற்றும்
அந்நஜாத் 1986
நல் அமல்கள் நஷ்டமடையுமா?
அல்லாஹ்வின் விதிவிலக்குகளை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்ற வேண்டும் என்று முதலில் எனக்கும், பின்பு உங்களுக்கும் உபதேசம் செய்கிறேன்.
ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன்முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்;. அல்லஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்;. இன்னும் அல்லஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 3:30
நாம் செய்த அமல்கள் எல்லாம் எந்த தரத்தில் உள்ளன. நம் அமல்கள் நம் மோசமான செயல்களினால் நஷ்டமடையுமா? தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளினால் நல் அமல்கள் எல்லாம் பாதிக்கப்படுமா? ஏனென்றால் நம் தவறான செயல்களினால் அல்லஹ்வின் முன் நிற்கும்போது, கைசேதப்பட்டு விடக்கூடாதே; அல்லாஹ் நம்மை இழிவுபடுத்தி விடக்கூடாதே; தோல்வியைத் தழுவிடக்கூடாதே என்பதற்காகத்தான்.
ஒரு வியாபாரம் செய்கிறோம் என்றால், வார முடிவிலோ மாத முடிவிலோ கணக்குப் பார்ப்போம். இலாபமா? நஷ்டமா? என்பது தெரிந்துவிடும். இலாபம் என்றால் இன்னும் அதிகம் இலாபம் சம்பாதிக்க முயற்சி செய்வோம். நஷ்டம் என்றால் இலாபம் அடைய முயற்சி செய்து பார்ப்போம். இன்னும் நஷ்டம்தான் என்றால் அந்த வியாபாரத்தை விட்டுவிடுவோம். ஆனால் நம்முடைய அமல்களை கணக்கு பார்ப்பதில்லை. இலாபமா? நஷ்டமா? என்று சிந்தித்து பார்ப்பதுமில்லை. நஷ்டம் என்றால் (நவூதுபில்லாஹ்) இன்னும் என்ன செய்யவேண்டும்? வியாபாரத்தில் நஷ்டம் என்றால் அந்த நஷ்டத்தை வாழ்நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே இருப்போம். ஆனால் நம்முடைய அமல்களில் கோட்டை விட்ட பின்பும் சுதாரிக்கவில்லை என்றால் மறுமை நாளில் தோல்வியை சந்திக்க நேரிடும்.
எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள். ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள். அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும். ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும். இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும். அல்குர்ஆன் 75:20-25
வேலை நேரங்களிலும் ஓய்வு கிடைக்கும் நேரங்களிலும் தேவையில்லாத சர்ச்சைகளிலும் வீண் விவாதங்களிலும், அவதூறுகளிலும், புறம் பேசுவதிலும் ஈடுபடுகிறோம். நம்மை படைத்த இறைவனை சந்திக்கும்போது, இந்த செயல்கள் நம்மை பஞ்சை பராரியாக ஆக்கிவிடக்கூடாதே, (நவூதுபில்லஹ்) பஞ்சை பராரி யார் என்றால் நல்அமல்கள் செய்தும் அல்லஹ்வின் முன்னிலையில் ஏழையாக நிற்பது.
வறியவன் (பஞ்சை பராரி) என்பவன் யார்? என்று நபி அவர்கள் வினவினார்கள். மக்கள் கூறினர்: எவரிடம் திர்ஹமோ, வேறு எந்த பொருளோ இல்லையோ அவரே எங்களில் வறியவர் ஆவர் என்று கூறினர். நபி அவர்கள் பதிலளித்தார்கள். ஒருவன் மறுமை நாளில் தொழுகையுடனும், நோன்புடனும், ஜகாத்துடனும் அல்லஹ்விடம் ஆஜராவான். அவற்றுடன் அவன் உலகில் எவரையேனும் திட்டியிருப்பான், எவர்மீதாவது இட்டுக்கட்டி அவதூறு கூறியிருப்பான்; எவரேனும் ஒருவரின் செல்வத்தைப் பறித்துப் தின்றிருப்பான்; எவரேயேனும் கொன்றிருப்பான்; எவரேயேனும் நியாமின்றி அடித்திருப்பான். எனவே அந்த அநீதிக்குள்ளானவர்கள் அனைவரிடையேயும் அவனது நன்மைகள் பங்கிடப்படும். பிறகு அவனது நன்மைகள் தீர்ந்துபோய், அநீதிக்கு உள்ளானவர்களின் உரிமைகள் இன்னும் எஞ்சியிருந்தால் அவர்களின் பாவங்கள் அவனது கணக்கில் எழுதப்பட்டு விடும். பிறகு அவன் நரகத்தில் வீசி எறியப்படுவான். அத்தகையோரே உண்மையில் வறியவன் ஆவார். அறிவிப்பவர்: அபூ†ுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்
இன்னும் சிலர் அல்லஹ்வும் அவன் தூதரும் காட்டித்தராத முறையில் உழைக்கின்றார்கள். தங்கள் எண்ணத்தில் பெரும் இலாபம் அடைவதாக எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் பெரும் நஷ்டமடைந்தவர்களாக இருக்கின்றனர்.
அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். அல்குர்ஆன் 88:2,3
'(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். அல்குர்ஆன் 18:103,104
பாவத்திற்குமேல் பாவம் செய்து கறைகளின் மேல் கறைகள் படிந்து நாம் வாழ்வில் முன்னேறிச் செல்கிறோம். நாம் நம்மில் இருக்கும் கறைகளை மாற்ற முயற்சி செய்ய மாட்டோமா? இதே ரீதியில் சென்றால் நம்முடைய இறுதி முடிவு எப்படி இருக்கும்? நம்மை படைத்த இறைவனை சந்திக்கும்போது பாவங்களுக்காக வெருண்டு ஓடுவோமா? இல்லை வெற்றி பெறுவோமா? எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னித்து விடு அல்லாஹ் உன்னை தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்?
எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ- அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார். ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ- (அவர் பெரும் நஷ்டவாளியாவார்) அல்குர்ஆன் 101:6-8
அல்லாஹ் நம் அனைவரையும் நன்மைகள் அதிகம் செய்து வெற்றிபெறும் சிறிய கூட்டத்தினரோடு சேர்த்து வைப்பானாக.
இறை நம்பிக்கை
படைத்தவன் மீது நம்பிக்கை வைப்பதை விடுத்து பணத்தின் மீதும், பதவியின் மீதும், கல்வியின் மீதும், தம் அறிவின் மீதும், தாங்கள் செய்யும் வியாபாரத்தின் மீதும், சொத்துகளின் மீதும் நம்பிக்கை வைக்கிறான் மனிதன். தன் பிடரி நரம்பினும் அண்மையிலுள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வை மறந்தவனாக நன்றி கெட்டவனாக மனிதன் வாழ்வதில் இன்பம் காணுகிறான்.
தன்கையில் இலட்ச இலட்சமாக பணம் உள்ளவன் தன்னால் தான் விரும்பியதை செய்ய இயலும் என இறுமாப்புக் கொள்கிறான். மேலும் பணமில்லாத தன் உடன் பிறந்தவர்களையே ஏளனமாக நோக்குகிறான். அவனுடைய ஏழ்மையின் காரணமாக அவன் வாழும் நெறியான வாழ்க்கை மீதே வீண் பழி சுமத்தவும் அஞ்சுவதில்லை. காரணம் தன்னிடம் உள்ள பணம் தன்னைக் காப்பாற்றும் மிகப்பெரிய சக்தியாக அவன் எண்ணுவதுதான்.
அடுத்து பதவியின் மீது தான் கொண்ட அபரிமிதமான நம்பிக்கை தன்னுடைய பதவியை எதனையும் சாதிக்கக்கூடிய, நினைத்ததை முடிக்கக்கூடிய அதிகாரம் படைத்ததாகக் கருதி செயல்படுகிறான். மேலும் கல்வியின் மீது கொண்ட நம்பிக்கையானது கல்வி கற்காதவர்களையும் அறிவற்றவர்களாக தகுதியில்லாதவர்களாக எண்ணும் அளவுக்கு 'அறிவின் ஆணவம்' போய்க் கொண்டிருக்கிறது. இவ்வாறாக வியாபரத்தின் மீது கொண்ட நம்பிக்கையும் மனிதனை இறை நம்பிக்கையற்றவனாக ஆக்குகின்றது. தன் வியாபாரம் எக்காலத்துக்கும் கைகொடுக்கும், மங்காத மறையாத செல்வம் அதன் மூலம் தொடர்ந்து கிடைக்கும் என்று மனப்பால் குடிக்கின்றான்.
சொத்துக்களின் மீதும் மனிதன் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தவனாக இருக்கின்றான். தம்முடைய இந்தச் சொத்து ஐந்தாறு தலைமுறைகளுக்குத் தேறும், எவரும் தன்னை அசைக்கக் கூட இயலாது என எண்ணுகிறான். இஸ்லாம் மனிதனுக்குள்ள பணத்தேவையையும், அதை ஈட்டுவதின் வழி முறைகளையும், கல்வியின் அவசியத்தையும், அறிவின் மூலம் ஏற்படுகின்ற சிந்தனை ஊற்றையும் கொடுக்கல் வாங்கல் முதலான வியாபரங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும், சொத்துக்களின் பங்கீடு முறை பற்றியும் தெளிவாக எடுத்து கூறுகின்றது.
இல்லறத்தின் மூலம் நல்லறங்களைச் செய்யவே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. காவி உடை தரித்து கமண்டலம் ஏந்தி காட்டுக்குச் சென்று தவம் செய்து ஞானி எனப்பெயர் பெறுவதே சிறந்ததது என்று இஸ்லாம் ஒரு போதும் சொன்னதில்லை. எந்த காரியத்திலும், எந்தச் செயலிலும் இறை நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதையே இஸ்லாம் மானிட இனத்துக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. அல்லாஹ் தன் திருமறையில்
நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன். (8:64)
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான். (100:6-8)
காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (103:1-3)
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். (104:1-9)
செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது - நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. (102:1-2)
அல்லாஹ்வின் நல்லடியார்களே! நீங்கள் பொருளைத் தேடுங்கள்; செலவழியுங்கள்; நெறி பிறழாமல் இன்பம் காணுங்கள்! ஆனால் இறை நம்பிக்கையுடன் செயல்படுங்கள்! கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள். மேலும் மேலும் உங்கள் அறிவினை விரிவாக்கக் கூடிய கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், அப்போதும் இறை நம்பிக்கையுடன் அறிவைப் பெற முயலுங்கள்.
வியாபாரம் செய்யுங்கள். மாட மாளிகைகள் கட்டிக் கொள்ளுங்கள். ஆனால், அப்போதும் எப்போதும் இறை நம்பிக்கையுள்ளவர்களாகத் திகழ்ந்து வாருங்கள். அல்லாஹ் நம்மனைவோர்க்கும் தனது பரந்து பட்ட அருளை இடைவிடாது அளிப்பானாக! (ஆமீன்)
முபாஹலா"
முபாஹலா என்றால் என்ன? முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் "முபாஹலா" செய்யலாமா? முபாஹலா,வை நியாயப்படுத்துகிறவர்கள் அல்குர்ஆன் 3:61 இறைவாக்கை ஆதாரமாகத் தருகின்றனர். அந்த இறைவாக்கு வருமாறு:
(நபியே!) இது பற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும், எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால், வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று கூடி) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று சாபமிட்டுக் கொள்வோம், என நீர் கூறும். (3:61)
இந்த வசனம் இறங்கிய வரலாற்றைப் பற்றி வரலாற்று நூல்களில் எழுதப்பட்டுள்ள விபரம் வருமாறு:
நஜ்ரானிலிருந்து சில பாதிரிகள் மதீனா வந்து மஸ்ஜிதுல் நபவியில் தங்கி, அவர்களது தவறான முக்கடவுள் கொள்கையை நிலைநாட்ட விவாதித்து வந்தனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட 3:55-60 வசனங்களைக் கொண்டு அழகிய முறையில் விவாதித்து உண்மையை எடுத்துரைத்தனர். இது சில நாட்கள் நீடித்தன. அக்கால கட்டத்தில் அப்பாதிரிகள் அவர்களின் முறைப்படி வணக்க வழிபாடுகளில் ஈடுபட மஸ்ஜிதிலேயே அனுமதியும் கொடுத்தனர். இவ்வளவு இதமாகவும் நளினமாகவும் நபி(ஸல்) சத்தியத்தை எடுத்து வைத்தும், அந்த பாதிரிகள், இந்த இறுதி வழிகாட்டல் நூலின் தெளிவான நேரடியான வசனங்களை மறுத்து விதண்டாவாதம் செய்து, தங்களின் அசத்தியக் கொள்கையான முக்கடவுள் கொள்கையை வம்பாக நிலைநாட்டத் துடித்தனர்.
அல்குர்ஆனின் தெளிவான நேரடியான ஆதாரங்கள் கிறிஸ்தவ பாதிரிகளிடம் எடுபடாமல் போகவே இறுதியாக வேறு வழி இன்றி, எல்லாம் வல்ல அல்லாஹ் 3:61 வசனத்தை இறக்கி, அந்த பாதிரிகளை அவர்களது குடும்பத்தோடு முபாஹலாவுக்கு வரும்படி அழைப்பு விடும்படி கட்டளையிட்டான்.
இவ்வாறு அழைப்பு விடுத்ததும் அந்தப் பாதிரிகளின் உள்ளத்தில் கொஞ்சத்திற்கு கொஞ்சமாவது இறைவனைப் பற்றிய அச்சம் இருந்த காரணத்தால், அந்த முபாஹலா அழைப்பை ஏற்காமல், சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டனர். அதன் பின்னர் நபி(ஸல்) அவர்களுக்கு முனாஃபிக்களாலும் முஷ்ரிக்களாலும், காஃபிர்களாலும், யூத, கிறிஸ்தவர்களாலும் எத்தனையோ அவதூறுகள் ஏற்பட்டன. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நபி(ஸல்) அவர்கள் யாரையும் முபாஹலாவுக்கு அழைத்ததாக ஆதாரம் இல்லை.
ஆயிஷா(ரழி)மீது படு அவதூறு ஏற்பட்டு நபி(ஸல்) பல நாட்கள் துடித்தபோதும், அவதூறு பரப்பியவர்களை முபாஹலாவுக்கு நபி(ஸல்) அவர்களோ, ஆயிஷா(ரழி) அவர்களோ அழைக்கவில்லை. நபிமார்களுக்கு வஹீ மூலம் சத்தியத்தை - நேர்வழியை அறிவித்ததோடு, அதை நிலைநாட்ட சில சமயங்களில் முஃஜிஸாத் என்ற அற்புத நிகழ்வுகளையும் அல்லாஹ் வழங்கியுள்ளான். ஆனால் இந்த முஃஜிஸாத்தை எந்த நபியும் தமது விருப்பத்திற்கு நிகழ்த்திக் காட்ட முடியாது. அல்லாஹ் அனுமதித்தால் மட்டுமே அவர்களால் முஃஜிஸாத் என்ற அற்புத நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்ட முடியும். அதே போல் இந்த முபாஹலாவும் அல்லாஹ்வின் அனுமதியின் பேரில் அழைக்க முடியுமே அல்லாமல், தங்கள் இஷ்டத்திற்கு யாரையும் முபாஹலாவுக்கு அழைக்கும் அனுமதி பெற்றிருக்கவில்லை என்பதை விளங்கமுடியும்.
மேலும் நபிமார்கள் வஹீயின் தொடர்புடன் இருந்ததால், அப்படி ஒரு முபாஹலா நடந்திருந்தால், அதன் இறுதி முடிவும் அல்லாஹ்வால் அறிவிக்கப்பட்டு, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டிருக்கும். எனவே வஹீயின் தொடர்பு இல்லாத நிலையில் ஒரு முஸ்லிம் மற்றவர்களை முபாஹலாவுக்கு அழைப்பது மார்க்கத்தைக் கேலிக் கூத்தாக்கும் ஒரு தீய செயலாகும். மனிதனும் முயற்சிகள் செய்து இறைவனுடன் இரண்டறக் கலக்கலாம் என்னும் இறைவனுக்கு இணை வைக்கும் ஷிர்க் எனும் கொடிய செயலில் ஈடுபட வைக்கும் அத்துவைதம் எனும் பாவச்செயலை நியாயப்படுத்தும் சூஃபிகள், நபிமார்களுக்கு முஃஜிஸாத் இருந்தது போல் எங்களுக்கும் கராமத் எனும் அற்புத செயல்கள் உண்டு என, சில கண்கட்டி வித்தைகளை செய்து காட்டி மக்களை மயக்கி தங்கள் பக்கம் ஈர்ப்பது போல், இந்த முபாஹலா எனும் பூச்சாண்டியைக் காட்டி மக்களை மயக்கி தங்கள் பக்கம் ஈர்க்கும் கெட்ட எண்ணமுள்ள போலிகளே இந்த முபாஹலா வழிகேட்டில் ஈடுபட முடியும்.
மற்றபடி, நபிமார்களுக்கு மேலதிகமாகக் கொடுக்கப்பட்டிருந்த முஃஜிஸாத், முபாஹலா அதிகாரங்கள் மற்றவர்களுக்கு இல்லை என்பதே உண்மையாகும். அதிலும் குறிப்பாக நேர்வழி நடக்கும் முஸ்லிம்களுக்கு இல்லவே இல்லை. அவர்களுக்கு சத்தியத்தை நிலைநாட்ட அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் தாராளமாகப் போதும். அதைத்தான் நபி(ஸல்) அவர்கள்.
நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள், ஒன்று இறைவனின் நேர்வழிகாட்டல் நூல் அல்குர்ஆன், மற்றது என நடைமுறை என்றும் நான் உங்களை வெள்ளை வெளேர் என்ற நிலையில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது. அழிந்து நாசமாகிறவனைத் தவிர வேறு எவரும் அதில் வழி கெட்டுச் செல்லமாட்டார் என்றும் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் கூறி இருக்கிறார்கள்.
மார்க்க விவகாரம் எதுவாக இருந்தாலும், அதன் உண்மை நிலையை குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் கொண்டு நிலைநாட்டி விட முடியும். குர்ஆன், ஹதீஸ் நேரடியாகச் சொல்லும் கருத்துக்கு முரண்பட்ட எவருடைய சுய விளக்கமும் தேவையே இல்லை. எனவே மார்க்கத்தை-சத்தியத்தை-நேர்வழியை நிலைநாட்ட முபாஹலா தேவையே இல்லை; முபாஹலாவை நாடிச் செல்கிறவன் வழி கேட்டைத் தேடிச் செல்கிறான் என்பதே உண்மையாகும்.
இறுதித் தூதரையும், அவருக்கு அருளப்பட்ட இறுதி வழிகாட்டல் நூலையும் ஏற்றுக்கொள்ள மறுத்த பாதிரிகளை நோக்கித்தான் முபாஹலாவுக்கு அழைப்பு விடும்படி அல்லாஹ் கட்டளையிட்டான். அப்படியானால் இறுதி நபியையும், அல்குர்ஆனையும் மறுப்பவர்கள்தான் முபாஹலாவின் தயவை நாடிச் செல்ல முடியும். இறுதித் தூதரையும், அல்குர்ஆனையும் மனப்பூர்வமாக ஏற்றிருப்பவர்கள், ஒருபோதும் முபாஹலாவின் துணையை நாடிச் செல்லமாட்டார்கள். அதிலும் குறிப்பாக இறுதித் தூதரையும், அல்குர்ஆனையும் ஒப்புக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயமாக முபாஹலா தேவையே இல்லை என்பதே குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் இரவும் பகலைப் போல் தெரியும் உண்மையாகும்-சத்தியமாகும். அதற்கு மாறாக முபாஹலாவில் ஈடுபடுகிறவர்கள் மக்களிடையே வழிகேட்டையே வளர்க்கிறார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.
மார்க்கத்தை-சத்தியத்தை-நேர்வழியை நிலைநாட்ட முபாஹலா அவசியமே இல்லை. அடுத்து இவ்வுலக விவகாரங்களில் முடிவு செய்ய முபாஹலா கூடுமா? என்பதை விரிவாகப் பார்ப்போம். உலகியல் காரியங்களில் எந்த விஷயமாக இருந்தாலும் ஆதாரங்களைக் கொண்டும், சாட்சிகளைக் கொண்டும், குற்றத்தை நிரூபித்து சத்தியத்தை நிலைநாட்டி விட முடியும். கொலைக்குற்றம், திருட்டுக்குற்றம், விபச்சாரக் குற்றம் போன்ற கொடூரக் குற்றங்களைக் கூட சாட்சிகள் கொண்டு நிரூபித்துவிட முடியும். ஒருவன் கொலை செய்துவிட்டு கொலை செய்யவேயில்லை என மறுக்கிறான். அவன் கொலை செய்ததைக் கண்ணால் பார்த்த இருவர் நீதி மன்றத்தில் சாட்சி சொன்னால் போதும்; குற்றவாளி ஆயிரம் சத்தியம் செய்து தான் கொலை செய்யவில்லை என்று கதறினாலும், நீதிமன்றம் அவன் குற்றவாளி என்றே தீர்ப்பளிக்கும். ஆக கொலைக் குற்றத்திற்கு, திருட்டுக் குற்றத்திற்கு இரண்டு நேரடி சாட்சிகள் இருந்தால் போதும்; குற்றம் நிரூபிக்கப்பட்டு விடும். குற்றவாளி தப்ப முடியாது.
ஆனால் விபச்சாரக் குற்றத்திற்கு நான்கு சாட்சிகள் வேண்டும்; அவ்வளவுதான். நான்கு சாட்சிகள் சம்பவத்தை நேரடியாகப் பார்த்ததாகச் சாட்சி சொன்னால் போதும்; இஸ்லாமிய ஆட்சியில் அப்பெண்ணுக்கு தண்டணை வழங்கப்பட்டு விடும். நான்கு சாட்சிகள் இல்லை. ஆனால் பெண்ணின் கணவன் மட்டும் அக்கோரக்காட்சியை தன் கண்களால் கண்டுவிட்டான். அவனால் தன் மனைவிக்குத் தண்டனையைப் பெற்றுத்தர முடியுமா? முடியாது. இந்த நிலையில் அக்கணவன் நெறிகெட்ட அப்பெண்ணுடன் தொடர்ந்து கணவன்-மனைவி என்ற நிலையில் வாழ அவன் மனம் இடம் கொடுக்குமா? மனம் இடம் தராது. அவன் தனது வாழ்வில் நிம்மதி பெற மார்க்கம் அவனுக்கு அளித்திருக்கும் வாய்ப்பே முபாஹலா போன்ற லிஆன் என்ற ஆயுதம். அதாவது நான் என் மனைவி இன்னொரு ஆணுடன் விபச்சாரம் செய்ததை என் கண்களால் கண்டேன். இது உண்மை. இது பொய்யாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் என்மீது ஏற்படுமாக என்று அவன் தனக்கே சாபமிட்டுக் கொள்ள வேண்டும். அதை மறுப்பதாக இருந்தால் அப்பெண் என் கணவர் என்மீது பழி சுமத்துகிறார். நான் அவர் கூறும் விபச்சாரத்தில் ஈடுபடவில்லை. இது உண்மை. இது பொய்யாக இருக்குமானால் அல்லாஹ்வின் சாபம் என்மீது ஏற்படுமாக என்று அவள் தனக்கே சாபமிட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அவர்கள் பிரிந்து விட வேண்டும்.
ஆக, இப்படி மன அமைதிக்காக கூடி வாழும் கணவன் மனைவிக்கிடையில், மனைவி மீது விபச்சாரக்குற்றம் ஏற்பட்டு, அதை நிரூபிக்க நான்கு சாட்சிகள் இல்லாத நிலையில் மட்டுமே, தனக்குத்தானே சாபம் இட்டுக் கொள்ளும் லிஆன் என்ற முபாஹலா போன்றதற்கு அனுமதி உண்டு. வேறு எந்த நிகழ்வுக்கும் முபாஹலாவுக்கு அனுமதியே இல்லை என்பதே உறுதியாகத் தெரிகிறது. அதுவும், நான்கு சாட்கிகள் இருக்கும் நிலையில் லிஆனுக்கே அனுமதி இல்லை எனும்போது பல சாட்சிகள் இருக்கும்போது முபாஹலாவுக்கு அனுமதி எங்கே இருக்கிறது?
ஆக எந்த நிலையிலும் எந்த சூழ்நிலையிலும், மார்க்கமாயிலும், உலகியல் ஆயினும், ஓர் உண்மை முஸ்லிம் முபாஹலாவுக்கு அழைக்கவும் மாட்டார். பிறரின் முபாஹலா அழைப்பை ஏற்கவும் மாட்டார். நேர்வழிவிட்டு கோணல்வழிகளில் செல்பவர்களே முபாஹலா பூச்சாண்டி காட்டி மக்களை மயக்கி தன்பக்கம் ஈர்க்க முனைவார்கள் என்பதே உண்மையாகும்
தாய் தந்தையர்
ஒருவர் நபி அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் தமது பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்று கேட்டார். அதற்கு நபி "அவ்விருவரும்தான் உமக்கு சுவர்க்கமும் நரகமும் ஆவார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) நூல்: இப்னு மாஜ்ஜா
தந்தையின் பொருத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தமும் தந்தையின் வெறுப்பில் அல்லாஹ்வின் வெறுப்பும் உள்ளது என்று நபி கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அம்ரு (ரலி) நூல்: திர்மிதி
ஒரு மனிதர் இறைதூதரிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்? எனக்கேட்டார் அதற்கு நபி அவர்கள் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அதற்கடுத்து யார்? என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக அதற்கடுத்து யார்? என கேட்ட போது இறைதூதர் அவர்கள் உம்முடையதாய் என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் அதற்கடுத்து யார்? எனக் கேட்ட போது உம்முடைய தந்தை என்றும் படிப்படியாக நெருங்கிய உறவினர்களும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) நூற்கள் : புகாரி, முஸ்லிம்
நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது." அல்குர்ஆன் 31:14
பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! அல்குர்ஆன் 17:23
இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், "என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!" என்று கூறிப் பிரார்த்திப்பீராக! அல்குர்ஆன் 17:244
பெண்கள்
எவருக்கு ஒரு மகள் பிறந்து அதை அவமானப்படுத்தாமல் அதைவிட ஆண் மகனுக்கு அதிகச் சலுகை காட்டாமல் வளர்க்கிறாரோ அவரை இறைவன் சுவனத்தில் நுழைவிப்பான். நூல:் முஸ்னது அஹமது ஹதீஸ் எண் 1957
அவர்களில் (1400 ஆண்டுகளுக்குமுன் மக்காவாசிகளின்) ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாறாயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது; அவன் கோபமடைகிறான்.
அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்.
எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோஇ (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்) அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா? அல்குர்ஆன் 16:58,59
எவருக்கு பெண் குழந்தைகள் மட்டுமே இருந்து அவர்களை நன்முறையில் வளர்ப்பாரோ, அவரை அவர்கள் நரகிலிருந்து காப்பற்றுவார்கள். நூல்: முஸ்லிம்
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். அல்குர்ஆன் 17:31
அன்று பெண் குழந்தை பிறந்தவுடன் உயிரோடு புதைத்தார்கள். இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பிறப்பதற்கு முன்பே ஆணா, பெண்ணா என்றறிந்து பெண்ணாயிருந்தால் கருவிலேயே அழித்து விடுகிறார்கள். உண்மையில் இதுவும் ஒரு கொலைதான்.
அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! மக்கள் வினவினார்கள் "அல்லாஹ்வின் தூதரே (இழிவடையட்டும் என்றீர்களே) யார்?" முதுமை பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ பெற்றிருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்" என்று பதலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்.
பெற்றோரை கொடுமைப்படுத்துவோர் இவ்வுலகிலேயே தண்டனையை அடைவர்!
பெற்றோரைக் கொடுமைபடுத்தியதற்காகத் தரப்படும் தண்டனை மரணத்திற்குமுன் இவ்வுலகிலேயே துரிதமாகத் தரப்பட்டுவிடும் என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: பைஹகீ
பெற்றோரின் திருப்தி
பெற்றோரில் ஒருவர் கோபமடைந்தாலும் அவர்கள் திருப்தி அடையும்வரை அல்லாஹ் திருப்தியடைய மாட்டான் என்று நபி கூறியதும் அந்தப் பெற்றோர் அநீதம் செய்தாலுமா? என்று கேட்கப்பட்டதற்கு, ஆம்! அவர்கள் அநீதம் செய்தாலும்தான் என்று நபி பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), முப்ரத் அல் புகாரி
பெற்றோரை பேணுதலும் ஜிஹாத்
ஜாஹிமா(ரழி) அவர்கள் நபி அவர்களிடம் வந்து இறைத்தூதர் அவர்களே! நான் போரில் கலந்து கொள்ள நாடுகிறேன் என்று கூறினார். உனக்கு தாய் உண்டா? என்று கேட்டதும் ஆம் என்றார். அவளை (கவனிப்பதை) தேர்ந்தெடுத்துக்கொள். அவளின் இரு கால்களின் அடியில் தான் சொர்க்கம் உள்ளது என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஆவியா இப்னு ஜாஹிமா(ரழி) அஹ்மத், நஸயீ, ஹாகிம், தப்ரானீ)
அல்லாஹ்வின் தூதர் நமக்கு கூறிச்சென்ற அறிவுரைகளை மனதில் நிறுத்தி அல்லாஹ்வின் பொருத்தத்தை பெருவோமாக!
முஸ்லிம்களே ஒன்று படுவீர்
"மேலும் நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய (வேதமாகிய) கயிற்றை பலாமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள். (அல்குர்ஆன் 3:103)
இன்றைய உலகில் இஸ்லாம் வேகமாகப் பரவி வருகிறது. இஸ்லாத்தில் இணையும் புதியவர்களிடம் ஓர் உத்வேகம் இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது. இதுவரை தங்களை பிணைத்திருந்த விலங்குகளை உடைத்தெரிந்து தாங்கள் பெற்ற சுதந்திரத்தை ஏனையோரும் அனுபவித்திட வேண்டும் என்ற உத்வேகமே அது. ஆனால் இங்கு வேதனை என்னவென்றால் இன்றைய உலகில் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முஸ்லிம்களே பல விதத்தில் முட்டுக்கட்டையாக உள்ளனர் என்பதுதான்.
இன்றைய மார்க்க அறிஞர்கள் என்போரும், அதிகார வர்க்கத்தினரும் தங்கள் அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்வதற்காகவே இஸ்லாத்தின் தனித்தன்மையை குலைத்து மாற்று வண்ணங்கள் பூசுகின்றனர். இந்நிலைகளை தகர்த்து இஸ்லாத்தைப் பூரணமாக நிலை நாட்டப் புறப்பட்ட இஸ்லாமிய இயக்கங்களோ சிறுசிறு கருத்து வேறுபாடுகளையும் அல்லாஹ் 4:59 வசனத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல் குர்ஆன் ஹதீஸை மட்டும் கொண்டு முடிவுக்கு வராமல் தங்கள் சொந்த யூகங்களை புகுத்தி அவற்றை பூதாகார பிரச்னையாக்கி தங்களுக்குள் பிளவுண்டு கிடக்கின்றன.
துண்டாடப்பட்ட பட்ட இயக்கங்கள் அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒற்றுமையாக அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என ஒங்கி ஒலிக்கின்றனர். இவர்கள் எல்லோரும் பற்றிப் பிடித்திருப்பது குர்ஆனைத்தான். ஆனால் இவர்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால்தான் இப்படி பிளவுண்டு கிடக்கின்றனர். இவர்கள் இலக்கை எட்ட முடியாமல் எங்கோ நின்று எதையோ செய்து கொண்டு இதுதான் 'இஸ்லாமியப் பணி' என்று திருப்திப் பட்டுக்கொள்கின்றனர்.
குர்ஆன் என்ற தனது கயிற்றை அடியார்கள் அனைவரையும் ஒற்றுமையாகப் பற்றிப் பிடிக்கத்தான் அல்லாஹ் கோருகின்றான். இங்கே நிகழ்வதென்ன? ஜமாஅத்தே இஸ்லாமி என்றும், முஜாஹித் என்றும், ஸலபி ஜமாஅத் என்றும், அஹ்லே ஹதீஸ் என்றும், JAQH என்றும், TNTJ என்றும் இன்னும் எத்தனையோ இயக்கங்கள் அமைப்புகள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறார்கள். ஆனால் தாங்கள் குர்ஆனையே பற்றிப் பிடித்திருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ஏன் இந்த நிலை?
இவர்களின் இத்தகைய போக்கினால் இஸ்லாமிய மறுமலர்ச்சி என்பது வெறும் கனவாகத்தான் இருக்கும். அடுத்து நம்மிடையே ஏற்படும் கருத்து வேற்றுமைகளை களைய சம்பந்தப்பட்ட அனைவரும் ஒன்றுகூடி இறை வழிகாட்டுதலை ஆராயமல் அவசரப்பட்டு தங்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தி விடுவது இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு நம்மால் ஏற்படுத்தப்படும் மாபெரும் முட்டுக்கட்டைதான். இறை மார்க்கத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் இத்தகைய நம் செயல்களுக்காக நாளை மறுமையில் இறைவன் முன் நாம் குற்றவாளிக் கூண்டில் நின்றேயாக வேண்டும்.
இறைவன் தன் திருமறையில் கடுமையாக இப்படி எச்சரிக்கிறான்
"(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனையுண்டு. (அல்குர்ஆன் 3:105
இறை நெறியை வாழ்வு நெறியாக்குவோம்
வல்ல அல்லாஹ் இந்த உலகத்தை படைத்து அதிலுள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவையும் அளித்து வருகிறான். படைத்து பரிபாலித்து அழிக்க வல்ல அல்லாஹ் மனிதன் இவ்வுலகில் எப்படி வாழ வேண்டும் என்பதையும் வரையறைத்திருக்கிறான். அல்லாஹ்வின் தூதர்களில் ஒருவராகிய நபி மூஸா (அலை) அவர்களிடம் கொடுங்கோல் மன்னன் பிர்அவ்ன் அல்லாஹ்வைப்பற்றி கேட்ட கேள்விக்கு மூஸா (அலை) அவர்கள் அளித்த பதில் இதைத்தான் பறைச்சாற்றுகிறது.
மூஸாவே! உங்களிருவன் இறைவன் யார்?'' என்று அவன் கேட்டான்.
''ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்'' என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 20: 49,50)
முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களை இவ்வுலகத்திற்கு அல்லாஹ் அனுப்பிய போது தான் காட்டும் வழியை பின்பற்றித்தான் இவ்வுலகத்தில் வாழ வேண்டும் என்ற கட்டளையுடன் தான் அனுப்பியிருக்கிறான்.
என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்'' என்று கூறினோம். (அல்குர்ஆன் 2:38)
இவ்வாறு நபிமார்கள் மூலமாக தன்னுடைய நேர்வழியை மனிதர்களுக்கு தெளிவுபடுத்தும் வல்ல அல்லாஹ் நம்மை நேர்வழி காட்டுவதற்காக இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களை அனுப்பினான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி தன்னுடைய திருமறையிலே பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.
நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழி கேட்டில் இருந்தனர். (அல்குர்ஆன் 3:164)
நமக்கு நேர்வழியை திருமறை குர்ஆனிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் உள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இவ்வாறு நேர்வழி தெளிவாகிய பிறகு முஸ்லிம்கள் குர்ஆனின் பக்கமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் பக்கமும் அழைக்கப்பட்டால் அவர்கள் அதை உடனே செயல்படுத்தக் கூடிய மக்களாக இருப்பார்கள். அவ்வாறு இருப்பவர்களே வெற்றியாளர்கள் என திருமறையில் வல்ல அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ''செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோன் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24: 51)
அவ்வாறு இல்லாமல் தம்முடைய வாழ்க்கையில் குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளுக்கு மாற்றமாக செயல்பட எந்த ஒரு இறை நம்பிக்கையாளருக்கும் அதிகாரம் இல்லை எனவும் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனிலே தெளிவுபடுத்துகிறான்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33:36)
இவ்வளவு தெளிவான போதனைகளையும் மீறி நாம் மனம்போன போக்கிலே வாழ்ந்து அல்லாஹ்வும் அவனுடைய து}தர் (ஸல்) அவர்களும் காட்டித்தந்த வழியை புறக்கணித்தோம் என்று சொன்னால் மறுமையிலே கைசேதப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
அவர்களை வேதனைப்படுத்தும் நாளைப் பற்றி மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில்) ''எங்கள் இறைவா! குறைந்த காலம் எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! உனது அழைப்பை ஏற்றுக் கொள்கிறோம். தூதர்களைப் பின்பற்றுகிறோம்'' என்று அநீதி இழைத்தோர் கூறுவார்கள். உங்களுக்கு அழிவே வராது என்று இதற்கு முன் சத்தியம் செய்து நீங்கள் கூறிக் கொண்டிருக்கவில்லையா?
(அல்குர்ஆன் 14:44)
எனவே நம்முடைய வாழ்க்கையை குர்ஆனும் ஹதீஸும் காட்டித்தந்த முறைப்படி அமைத்துக்கொள்ள வேண்டும். என்ற பேராவலுடன் இந்த நூலகம் துவக்கப்பட்டுள்ளது. இந்நூலகத்திலே குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் மார்க்க அறிஞர்களால் ஆற்றப்பட்ட ஆடியோ வீடியோ கேசட்டுகள் மற்றும் நூற்கள் இடம் பெற்றுள்ளன. எனவே இவற்றை வாங்கி கேட்டு படித்து பயன்பெற்று நம்முடைய வாழ்க்கைகளை அதன்படி அமைத்துக் கொண்டு மறுமையிலே வெற்றியாளர்களாக இருக்க முயற்சிப்போம். இவ்வாறு நாம் மார்க்கத்தை அறிந்து கொள்வதிலிருந்தும் வல்ல அல்லாஹ் நமக்கு நன்மையை நாட விரும்புகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
'எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். (போர் ஆதாயங்களை) அல்லாஹ் கொடுப்பவனாக இருக்கிறான். நான் அதை வினியோகிப்பவனாக இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில் ஒருசாரார் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என முஆவியா(ரலி) தம் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். (நூல்: புகாரி எண் 71)
வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் காட்டித்தந்த முறைப்படி வாழ்ந்து மறுமையில் சொர்கத்திற்குரிய மக்களாக இருக்க அருள்புரிவானாக.
ஷிர்க்,பித்அத் புரியும் இமாமைப் பின்பற்றலாமா?
கடமையான ஐங்கால தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவது மார்க்கத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்ட செயல். தக்க காரணமின்றி ஜமாஅத்தை விட்டு தனித்துத் தொழக்கூடாது என்பதற்கு பல ஹதீஸ் ஆதாரங்கள் இருக்கின்றன. இமாமின் தொழுகை கூடாமல் போனாலும் அதன் காரனமாக பின்பற்றித் தொழுபவர்களின் தொழுகை கூடாமல் போகாது; நிறைவேறி விடும். இதற்கு மாற்றமாக ஷிர்க் பித்அத் புரியும் சில இமாம்கள் பின்னால் தொழும் தொழுகை நிறைவேறாது; அப்படிப்பட்ட இமாம்கள் பின்னால் தொழக்கூடாது என்று கூறி ஊர் இரண்டு படுவதற்கும், தனிப்பள்ளி கட்டுவதற்கும் சிலர் வழி வகுக்கின்றனர். அவர்களின் தவறான கூற்றிற்கு சம்பந்தமில்லாத ஹதீஸ்களைக் காட்டி சொந்த வியாக்கியானத்தை கொண்டு தங்கள் தவறான கொள்கையை நிலை நாட்டுவதுடன் சமுதாயத்தில் பிளவுகள் ஏற்பட காரணமாக இருக்கின்றனர். ஆகவே எப்படிப்பட்ட இமாமையும் பின்பற்றி தொழுதாலும் அதனால் நமது தொழுகைக்கு எந்த பாதிப்பு இல்லை என்பதையும் இனி விரிவாக பார்ப்போம்.
இணை வைக்கும் (ஷிர்க்) இமாமைப் பின்பற்றலாமா?
(நபியே!) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ரு - நிராகரிப்பு உம்மை விசனப்படுத்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில்தான் இருக்கிறது. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அப்போது நாம் அவர்களுக்கு அறிவிப்போம். நிச்சயமாக அல்லாஹ்வே இருதயங்களில் உள்ளவற்றை அறிபவன். (31:23)
தோழ்வியுற்று ஓடும் எதிரிப்படையில் ஒருவனை நபித்தோழர் ஒருவர் பாய்ந்து அவரைத் தாக்க முற்பட்டபோது அவர் 'லா இலாஹ இல்லல்லாஹு' என்று கூறினார். அப்போது நபித்தோழர் அதைப் பொருட்படுத்தாமல் அவரை வெட்டி வீழ்த்திவிட்டார். பிறகு அவரை வெட்டியது பற்றி வருந்தி நபி(ஸல்) அவர்களிடம் இது விஷயத்தை எடுத்து கூறினார். அப்போது அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே கலிமாவைக் கூறினான் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீர் அவனது உள்ளத்தைப் பிளந்து பார்த்தீரோ? உள்ளக்கிடக்கியை நாவின் மூலமே வெளியிட முடியும் என்றார்கள். (அறிவிப்பாளர்: கபீஸாபின் துவைபு(ரழி), நூல்: முஸ்னத் அப்திர் ரஜ்ஜாக், இப்னு அஸாக்கீர்)
இந்த குர்ஆன் ஹதீஸ் இரண்டிலுமிருந்து ஒருவனுடைய உள்ளத்தின் நிலை பற்றிய திட்டமான அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கிறது. அது விஷயத்தில் நாம் தலையிடுதல் கூடாது என்பதை சுட்டிக் காட்டுகின்றன.
மறுமை நாளின்போது முறையே புனிதப் போரில் ஷஹீதானவரில் ஒருவரையும், தானும் கற்று பிறருக்குத் கற்பித்துக் கொடுத்த ஆலிம் - அறிஞரில் ஒருவரையும், நிறைய செல்வங்கள் அளிக்கப்பட்ட செல்வந்தரில் ஒருவரையும் கொண்டு வரப்பட்டு முதன் முதலாக இவர்களுக்கு தீர்ப்பளிக்கப்படும். இவர்களில் ஒவ்வொருவருக்கும் தான் செய்துள்ள அருட் கொடைகளை அல்லாஹ் அவர்களுக்கு எடுத்து உணர்த்துவான். அப்போது அவர்களும் அதை உணர்ந்து கொள்வார்கள். அப்போது அவர்களை நோக்கி நீங்கள் இவற்றிற்காக என்ன கைமாறு செய்தீர்கள் என்று கேட்பான். அதற்கு ஒருவர் (யா அல்லாஹ்) நான் உனக்காக குர்ஆனை ஓதினேன். இல்மை நானும் கற்று பிறருக்கு கற்பித்தும் கொடுத்தேன் என்பார். மூன்றாம் நபர் நீ விரும்பும் அத்துனை விஷயங்களுக்கும் நான் உனக்காக அனைத்துப் பொருள்களையும் செலவு செய்தேன் என்பார்.
அப்போது அல்லாஹ் முதலாம் நபரை நோக்கி நீர் பொய் சொல்கிறீர். உண்மையில் நீ ஒரு மாவீரன் என்று அழைக்கப்படுவதற்காக வெட்டப்பட்டு ஷஹீதாகியுள்ளீர். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று கூறி முகம் கவிழ இழுக்கப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவார். மற்றொருவரை நோக்கி நீர் பொய் சொல்கிறீர் உண்மையில் நீ ஓர் ஆலிம் - அறிஞர் அழகாக ஓதுபவர் என்று அழைக்கப்படுவதற்காக செயல்பட்டுள்ளீர். அவ்வாறு கூறப்பட்டு விட்டது என்று கூறி இவரும் முகம் கவிழ இழுக்கப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவார். மூன்றாமவரை நோக்கி, நீரும் பொய் சொல்கிறீர். உண்மையில் நீர் ஒரு கொடை வள்ளல் என்று அழைக்கப்படுவதற்காகவே செலவு செய்துள்ளீர். அவ்வாறு அழைக்கப்பட்டு விட்டது என்று கூறி முகம் கவிழ இவரும் இழுக்கப்பட்டு நரகில் தள்ளப்படுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஹதீஸ் சுருக்கம்: அபூஹுரைரா (ரழி) முஸ்லிம்)
சத்தியத்தை நிலை நாட்டுவதற்காக ஒருவர் அந்த சத்தியத்தை எதிர்த்து போராடுபவர்களை எதிர்த்து சண்டையிட்டு மரணிக்கிறார். அதனை நாம் கண்ணால் காணுகிறோம். அந்த சண்டையில் வெட்டுப்பட்டு மரணிப்பதும் நமக்கு தெரிகிறது. நம் காணும் அறிவின் படி அவர் வெட்டுப்பட்டு ஷஹீதாகியுள்ளார். ஆனால் அப்படிப்பட்ட ஷஹீதை முதன் முதலில் அல்லாஹ் நரகில் எறிகிறான் என்பதை இந்த ஹதீஸ் கூறுகிறது.
அடுத்து ஆலிம் ஒருவர் தனது அறிவைக்கொண்டு மக்களை அல்லாஹ்வின்பால் அழைக்கிறார். அவரது உபதேசங்களைக் கேட்டு ஆயிரக்கணக்கானோர் உண்மையை உணர்ந்து தங்களின் தவறுகளை விட்டு தெளபா செய்து நேர்வழிக்கு வந்து விடுகின்றனர். அவரைப் பெரும் சீர்த்திருத்தவாதி என உலகமே போற்றுகிறது. அப்படிப்பட்ட ஒரு ஆலிமையும் அல்லாஹ் நரகில் எறிவதாகவும் இந்த ஹதீஸ் கூறுகிறது.
அதே போல் மிகப் பெரிய செல்வந்தர் தமது செல்வங்களில் பெரும் பகுதியை அல்லாஹ்வுடைய பாதையில் அள்ளித் தருவதை நமது கண்களாலேயே பார்க்கிறோம். அவர் பெரும் கொடை வள்ளல் என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால் அல்லாஹ் அவரையும் நரகில் எறிவதாக இந்த ஹதீஸ் கூறுகிறது.
இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? நாம் நமது கண்களால் திட்டமாகப் பார்ப்பதை வைத்தோ, அல்லது நமது அறிவு ஆராய்ச்சியால் திட்டமாக விளங்கியோ ஒருவனுடைய உள்ளத்தில் இருப்பது ஈமானா - இறை விசுவாசமா, குஃப்ரா - இறை நிராகரிப்பா என்று முடிவு கட்டிவிட முடியாது. அந்த இரகசியம் அல்லாஹ்வுக்கே வெளிச்சம். கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் பார்ப்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று நம் நாட்டு பழமொழி. ஆயினும் இங்கு ஒருவனுடைய உள்ளத்திலிருப்பதை தீர விசாரித்தும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. இந்த நிலையில் தொழ வைக்கும் ஒரு இமாமின் குப்ரை பற்றித் திட்டமாகத தெரிந்து கொள்வது எப்படி சாத்தியம்?
மக்கத்து காபிர்களின் அதே கொள்கையைத் தங்களின் கொள்கையாக கொண்டிருப்பதை இணைவைத்தலை ஆதரிப்பதை நம்மால் திட்டவட்டமாக உர்ஜிதம் செய்ய முடியாது. இந்த நிலையில் தன்னை முஸ்லிம் என்று சொல்வதோடு இந்த உம்மத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ள ஒருவர் அல்லாஹ்வின் கட்டளையின்படியும் நபி(ஸல்) அவர்களின் நடைமுறைப்படியும் ஒருவர் தொழும்போது அதனைப் பின்பற்றித் தொழமாட்டேன் என்று எவ்வாறு ஒரு முஸ்லிம் சொல்ல முடியும்? அப்படிச் செய்தால் அல்லாஹ்வின் கட்டளையையே நிராகரித்த குற்றத்திற்கல்லவா ஆளாக நேரிடும். மேலும் அப்படிப்பட்ட ஒருவரைப் பின்பற்றித் தொழுவதால் அவரின் தவறான கொள்கைகளுக்கும் நாம் துணை போவதாக பொருளாகாது.
ஒரு முறை ஹஸன் பஸரீ(ரஹ்) அவர்களிடம் பித்அத்தையுடைய இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அத்தகையவருக்குப் பின்னால் அவருடைய 'பித்அத்' அவரிடமே இருக்கும் நிலையில் தொழுவீராக! என்றார்கள் (ஹிஷாமும் பின் ஹஸ்ஸான்(ரஹ்), முஸ்னத் ஸயீது பின் மன்சூர்)
அதிய்யு பின் கியார் என்பவர் உஸ்மான்(ரழி) அவர்களிடம் வந்து, நீங்கள் அனைவருக்கும் பொது இமாமாக இருந்து கொண்டிருந்தீர்கள். இப்போது நாங்கள் காணும் நிலையில் உங்களுக்குத் துன்பம் வந்து சம்பவித்துள்ளது. (இப்போது) எங்களுக்குக் குழப்பவாதியான இமாம் தொழுகை நடத்துகிறார். அவரைப் பின்பற்றி தொழுதால் நாமும் பாவிகளாகி விடுவோமோ என்று கருதி சங்கடப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்கள். அதற்கு அவர்கள் 'தொழுகைதான் மக்களுடைய அமல்களில் மிக்க அழகானதாகும். மக்கள் அதை அழகுறச் செய்யும்போது, அவர்களுடன் சேர்ந்து நீரும் அதை அழகுறச் செய்து கொள்வீராக! அவர்கள் தீமை விளைவிப்பவர்களாய் இருப்பின் அவர்களின் அத்தீமையை நீர் செய்யாமல் உம்மை தற்காத்துக் கொள்வீராக' என்றார்கள். (அதிய்யு பின் கியார்(ரஹ்) புகாரி)
மேற்காணும் உஸ்மான்(ரழி) அவர்களின் கூற்றிலிருந்து தொழ வைப்பவர், அவர் 'பித்அத்' காரராக அல்லது வேறு தவறுகள் செய்பவராக இருப்பினும், நாம் ஜமாஅத்துடைய பலன் இழந்து நஷ்டம் அடைவதைவிட அவர்களுடன் சேர்ந்து ஜமாஅத் தொழுவதே மேல் என்பதை அறிய முடிகிறது.
பின்பற்றி தொழுவோர் முறையாகத் தொழுதிருக்கும்போது, இமாம் முறை கேடாகத் தொழுது இமாமுடைய தொழுகை முறிந்து விடுவதால், அவரை பின்பற்றித் தொழுதவரின் தொழுகைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.
'உங்களுக்கு சில இமாம்கள் தொழுகை நடத்துவார்கள். அவர்கள் முறையாகத் தொழ வைப்பார்களானால் உங்களுக்கு நல்லதுதான். அவர்கள் தவறிழைப்பார்களானால் உங்களுக்கு நல்லதுதான். அன்றி அவர்களுக்குத் தான் கேடு என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா (ரழி) புகாரி)
இப்னு உமர்(ரழி) அவர்கள் ஹஜ்ஜாஜுபின் யூசுப் எனும் மிகக் கொடிய அநியாயம் செய்தவனுக்குப் பின்னால் தொழுதுள்ளார்கள் என்று இமாம் புகாரி(ரஹ்) அவர்களும், அபூஸயீதில் குத்ரி(ரழி) அவர்கள் பெரும் குழப்பவாதியாக இருந்த 'மர்வான்' என்பவருக்குப் பின்னால் பெருநாள் தொழுகை தொழுதுள்ளார்கள் என்பதாக இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்களும், மற்றும் திர்மிதீ, அபூதாவூத், நஸயீ முதலியோரும் தமது நூல்களில் வெளியிட்டுள்ளார்கள்.
அப்துல்லாஹ் பின் ஜுபைர்(ரழி) அவர்கள் காலத்தில் இப்னு உமர்(ரழி) அவர்கள் கஷ்பிய்யா, காரிஜிய்யா ஆகிய பெரும் குழப்பவாதிகளுக்குப் பின்னால், அவர்கள் தமக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தொழுதார்கள்.
அது சமயம் அவர்களை நோக்கி, தமக்குள் சண்டை செய்து கொண்டும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தாருக்கு பின்னால் நின்று தொழுகிறீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், யார் 'ஹய்ய அலஸ் ஸலாஹ்' (தொழுகைக்கு வாருங்கள்) என்று அழைப்பு விடுகிறாரோ, அவருக்குப் பதில் அளிப்பேன். யார் 'ஹய்ய அலல் ஃபலாஹ்' (வெற்றியடைவதற்கு வாருங்கள்) என்று அழைப்பு விடுகிறாரோ, அவருக்கும் பதில் அளிப்பேன். ஆனால் யார் 'ஹய்ய அலாகத்லி அக்கீல் முஸ்லிமி வ அக்தி மாலிஹீ' (உமது சகோதர முஸ்லிமை வெட்டி அவருடைய பொருளை அபகரிப்பதற்காக வாருங்கள்) என்று அழைப்பு விடுகிறாரோ, அதற்கு மாட்டேன் என்று கூறிவிடுவேன் என்றார்கள் (நாபிஊ(ரழி), ஸூனனு ஸயீது பின் மன்சூர்)
ஒரு முறை அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அவர்களிடம் ஒளூவில்லாமல் ஒருவர் மக்களுக்கு தொழ வைத்து விட்டால் என்ன செய்யவேண்டும்? என்பதாக கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அவர் மட்டும் தொழுகையை மீட்ட வேண்டும்; அவரைப் பின்பற்றி தொழுதவர்கள் மீட்ட வேண்டியதில்லை என்றார்கள். (ஸாலிம்(ரழி), தாரகுத்னீ)
ஒரு முறை உமர்(ரழி) அவர்கள் தாம் ஜுனுபாளி - குளிப்புக் கடமை உள்ளவர்களாயிருக்கும் போது (விஷயம் தெரியாமல்) மக்களுக்குத் தொழ வைத்து விட்டார்கள். பின்னர் (விஷயம் தெரிந்ததும்) மீட்டித் தொழுதார்கள். ஆனால் தொழுகையை மீட்டும்படி மற்றவர்களுக்கு அவர்கள் ஏவவில்லை. (அஷ்ஷரீதுஸ்ஸகஃபி, தாரகுத்னீ)
மேற்காணும் ஹதீஸ்கள் அஃதர்- ஸஹாபாக்களின் சொற்செயல்கள் வாயிலாக தொழ வைக்கும் ஓர் இமாம் அவர் தொழுகையிலோ அல்லது வெளியிலோ என்ன கோளாறுகள் செய்திருந்தாலும் அவற்றால் அவருடைய தொழுகைக்கு மட்டும்தான் பாதிப்பு ஏற்படுமே தவிர, அவரைப் பின்பற்றித் தொழுவோர் முறையாக தொழுதிருக்கும் போது, அவற்றால் இவர்களின் தொழுகைக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்பதை அறிகிறோம். தொழுகையில் இமாம் செய்யும் தவறுகளே மற்றவர்களின் தொழுகையைப் பாதிக்காது எனும்போது, தொழுகைக்கு வெளியில் அவர் செய்யும் தவறு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்த முடியும்?
எவர் நமது தொழுகையைத் தொழுகிறாரோ, நமது கிப்லாவை முன்னோக்குகிறாரோ, நாம் அறுத்ததைச் சாப்பிடுகிறாரோ அவர் முஸ்லிம். அவர் அல்லாஹ்வினதும், அல்லாஹ்வின் தூதரினதும் பாதுகாப்பில் உள்ளார். எனவே இந்த பாதுகாப்பில் இருப்பவருக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதீர். (அனஸ்(ரழி), புகாரி, அபூதாவூத், திர்பிதி, அப்னுமாஜ்ஜா, தாரமி, அஹ்மத்)
அப்படியானால் அவர் ஒரு முஸ்லிம், மற்ற முஸ்லிம்களுக்கிருக்கும் அதே உரிமைகளும், கடமைகளூம் அவருக்கும் உண்டு. (புகாரி) என்று இன்னொரு அறிவிப்பில் இவ்வாறு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்களிலிருந்து ஷிர்க், பித்அத் சடங்குகளைச் செய்கிறவர்கள் பின்னால் தொழுதாலும், தொழுபவரின் தொழுகை கூடாமல் போகாது; மேலும் இக்காரணங்களைக் கூறி ஒருவர் பின்னால் தொழுவதை ஒருவர் தவிர்த்துக் கொண்டால், அந்த இமாம் முஸ்லிம் இல்லை; காஃபிர் அல்லது முஷ்ரிக் என்று இவர் முடிவு செய்தே பின்பற்றாமல் இருக்கிறார். ஒருவரது உள்ளத்தில் இருப்பதை அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் அறிய முடியாது. அவர்களின் வெளிரங்கமான செயல்களை வைத்து ஒருவரை காஃபிர் என்றோ, முஷ்ரிக் என்றோ ஃபத்வா கொடுக்கும் அதிகாரம் பெறமாட்டார். இதற்குப் பல குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் ஆதாரங்களாக இருக்கின்றன.
அநியாயக்காரன் யார்?
அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? 2:140
எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! 5:45
அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள். 6:21
இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். 6:33
(நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம். 6:68
அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, "எனக்கு வஹீ வந்தது" என்று கூறுபவன்; அல்லது "அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்" என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? 6:93
இவ்வுலகத்தின் இறுதி முடிவு யாருக்கு நலமாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் - நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்." 6:135
மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய அநியாயக்காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான். 6:144
அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான். 14:34
இவர்கள் அல்லாஹ் அல்லாததை வணங்குகின்றனர்; இதற்கு அவன் எந்த விதமான அத்தாட்சியையும் இறக்கவில்லை இதைப்பற்றி இ(வ்வாறு வணங்குப)வர்களுக்கு எவ்விதக் கல்வியாதாரமும் இல்லை எனவே, இத்தகைய அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் இல்லை. 22:71
அந்நாளில் அநியாயக்காரன் தன்னிரு கைகளையும் கடித்துக்கொண்டு; "அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?" எனக் கூறுவான். 25:27
எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள். 29:49
அநியாயக்காரர்கள் கல்வி ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்; ஆகவே எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ, அவர்களை நேர் வழியில் கொண்டு வருபவர் யார்? மேலும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர். 30:29
எவன் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)? 32:22
(அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர்; ஆனால் அது அவர்கள் மீது நிகழவே செய்யும்; 42:22
உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். 49:11
எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். 62:5
இறை நம்பிக்கையும், நற்செயல்களும்
நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! 2-25
நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது. 17-9
எவர் முஃமினாக, நல்ல அமல்களை செய்கிறாரோ அவருடைய முயற்சி வீணாகி விடாது. நிச்சயமாக நாமே அதை (அவருக்காக)ப் பதிவு செய்து வைக்கிறோம். 21-94
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான-) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான். 19-96
எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு. 22-50
எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான். 65-11
ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளிலிருந்து (நற்)கூலி கொடுக்கிறான். 30-45
எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக. 18-110
எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியாவராவார். 25-71
எவர் தவ்பா செய்து நன்னம்பிக்கை கொண்டு, நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் வெற்றியடைந்தோரில் ஆவார்கள். 28-67
எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்கு நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான். 3-57
நிச்சயமாக, எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள் ஆவார்கள். 98-7
அச்சமும், துக்கமும் இல்லாதவர்கள் யார்?
(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 10-62
எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 46-13
யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்." 2-38
எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள். 7-35
நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 6-48
முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 5-69
எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 2-112
யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 2-274
நல்ல கணவன்
கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.
இதோ, அல்லாஹ்வின் தூதர் ஆண்களை எச்சரிக்கிறார்கள்:
"பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
"பெண், விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்தினால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால், அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
"பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். ஒரே நிலையில் உனக்கு நிலையாக இருக்கமாட்டாள். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்! அவளை நீ நேராக்க முயன்றால் ஒடித்து விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளைத் 'தலாக்' விடுவதாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
இலக்கிய நயமான இந்த உதாரணத்தில் பெண்ணின் இயற்கைத் தன்மைகளையும் பண்புகளையும் மிகத் துல்லியமாக நபி அவர்கள் விவரித்துள்ளார்கள். மனைவி என்பவள் கணவர் விரும்புவது போன்று ஒரே நிலையில் சீராக இருக்கமாட்டாள். அவளிடம் சில கோணலான பண்புகளும் இயல்பாகவே அமைந்திருக்கும். இதைக் கணவர் விளங்கிக் கொள்ள வேண்டும். பூரணமானது அல்லது சரியானது என, தாம் நினைக்கும் முறையில் அவளைத் திருத்திவிட முயலக் கூடாது. பெண்மைக்கென்று அமைந்துள்ள இயற்கைப் பண்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவளை, அல்லாஹ் எந்த இயல்புடன் படைத்தானோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது, 'விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக் கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன்' என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல் பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே ஒரு கணவர் தம் மனைவியை தாம் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்த்துவிடும்.
நபி அவர்கள் பெண்ணின் மன நிலைiயும் இயற்கைப் பண்புகளையும் ஆழமாக விளங்கி விவரித்திருக்கிறார்கள். இந்த வழிகாட்டுதலை உள்ளத்தில் ஏற்றுள்ள உண்மை முஸ்லிம், தமது மனைவியின் குறைகளை சகித்துக்கொள்வார். அவளது சிணுங்கல்களைப் பொருட்படுத்த மாட்டார். அதன் மூலம் அவரது இல்லறம் சண்டை, சச்சரவு, வாக்குவாதம், கூச்சல் இல்லாத மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி நிறைந்த இன்பப் பூங்காவாகத் திகழும்.
சற்றுமுன் கூறப்பட்ட நபிமொழியை ஆய்வு செய்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது நபி அவர்கள், 'பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று ஆரம்பித்து, பிறகு அவளது இயல்புகளை விவரிக்கிறார்கள். அதன் பின், மீண்டும் தாம் ஆரம்பித்த முந்தைய வார்த்தையைக் கூறியே முடிக்கிறார்கள். ஆகவே, நபி அவர்கள் பெண்ணுக்கு எந்தளவு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள் அவளது இயல்பைப் பற்றி எந்தளவு ஆழமாக விளங்கி இருக்கிறார்கள் அவள் மீது எந்தளவு இரக்கம் கொண்டுள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள்! நபி அவர்களின் இந்த மேலான வழிகாட்டுதல்களை எல்லா நிலைகளிலும் முன்மாதியாக அமைத்து செயல்படுவதைத் தவிர ஓர் உண்மை முஸ்லிமுக்கு வேறு ஏதேனும் வழியுண்டோ!
பெண்களுக்கு மிக முக்கியத்துவம் அளித்ததால்தான் தமது இறுதி ஹஜ்ஜின் பேருரையிலும் பெண்களைப்பற்றி நபி அவர்கள் உபதேசிக்க மறந்துவிடவில்லை. முஸ்லிம்களுக்கு எவற்றையெல்லாம் சொல்ல வேண்டுமோ அவை அனைத்தையும் கூறுவதற்கான கடைசி வாய்ப்பாக இறுதி ஹஜ்ஜுப் பேருரையைப் பயன்படுத்தினார்கள். அந்த உரையின் ஆரம்பமே பெண்களைப் பற்றியதாக அமைந்திருப்பது, அதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.
நபி அவர்கள் கூறினார்கள்: "அறிந்து கொள்ளுங்கள்! பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் உங்களிடத்திலே உதவியாளர்களாகவே இருக்கிறார்கள். அதைத்தவிர வேறெதையும் நீங்கள் உரிமையாக்கிக் கொள்ள முடியாது அவர்கள் பகிரங்கமான மானக்கேடான விஷயங்களில் ஈடுபட்டாலே தவிர! அவ்வாறு அவர்கள் ஈடுபட்டால் படுக்கையிலிருந்து அவர்களை ஒதுக்கி வையுங்கள். அவர்களை காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்கள் மீது எந்த மாற்று வழியையும் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமை என்பது, உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது விரிப்பை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமை என்பது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.'' (ஜாமிவுத் திர்மிதி)
நபியவர்களின் இந்த உபதேசத்தை ஒவ்வொரு உண்மை முஸ்லிமும் நிச்சயமாக செவிமடுப்பார். கணவன், மனைவி இருவரின் உரிமைகள், கடமைகள் குறித்து நபி அவர்கள் எத்துணை நுட்பமாக வழிகாட்டியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வார். இதில் குறிப்பாக பெண்கள் மீது கருணை, அன்பு காட்டுவது, அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வது பற்றி நபி வலியுறுத்தியுள்ளார்கள். ஆகையால், முஸ்லிம்களின் வீடுகளில் பெண்கள் மீது அநீதி இழைக்கப்படுவது அல்லது அவர்களுக்கு இடையூறு செய்யப்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் அறவே இருக்காது.
பெண்ணைப் பேணுவதைப் பற்றி நபி அவர்கள் கூறிய உபதேசங்கள் ஏராளமானவை. தமது மனைவியிடத்தில் அழகிய முறையில் நடந்து கொள்பவர்தான் இச்சமுதாயத்தின் சிறந்தோர்் ஆக முடியும் என்கிற அளவிற்கு நபி கூறியுள்ளார்கள்.
நபி அவர்கள் கூறினார்கள்: "நம்பிக்கையாளர்களில் நம்பிக்கையில் (ஈமானில்) பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே! உங்களில் சிறந்தோர் உங்கள் மனைவியடத்தில் சிறந்தோரே!''(ஜாமிவுத் திர்மிதி)
இந்த நபிமொழி, நம்பிக்கையாளர் மிக நேர்த்தியான குணத்தைக் கொண்டிருக்க வேண்டும் அந்த குணமில்லாமல் பரிப10ரண நம்பிக்கையை அடைய முடியாது நாம் யாரை நம்மில் சிறந்தவராக கருதுகிறோமோ அவர், தம் மனைவிக்கும் சிறந்தவராக விளங்க வேண்டும் நம்மிடத்தில் சிறந்தவராக இருந்து மனைவியிடத்தில் சிறந்தவராக இல்லையென்றால் உண்மையில் அவர் நம்மில் சிறந்தவரல்லர்' என்று வலியுறுத்துகிறது.
சில பெண்கள் தங்களுடைய கணவர்களைப்பற்றி முறையிடுவதற்காக நபி அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நபி அவர்கள் ஆண்களின் காதுகளுக்கு எட்டும் விதமாக "முஹம்மதின் குடும்பத்தாரிடம் சில பெண்கள் தங்களது கணவன்மாரைப்பற்றி முறையிட வருகிறார்கள். அந்தக் கணவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர்'' என்று கூறினார்கள். (ஸுனன்் அபூதாவூத்)
நேரிய மார்க்கமான இஸ்லாம், பெண்ணுக்கு நீதி வழங்குவதிலும் அவளைக் கண்ணியப் படுத்துவதிலும் ஏனைய மார்க்கங்களைப் பார்க்கிலும் மிக உயர்ந்தே நிற்கிறது. அவளைக் கணவன் வெறுத்தாலும் அவளுடன் நல்ல முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும் என உபதேசிக்கிறது. பெண்கள், தங்களது வரலாற்றில் இஸ்லாமைத் தவிர வேறெங்கும் இந்தக் கண்ணியத்தை அடைந்து கொண்டதே கிடையாது.
மேலும், "அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.'' (அன்னிஸா 4:19)
இந்த இறைவசனம் உண்மை முஸ்லிமின் உள்ளுணர்வைத் தொட்டுப் பேசுகிறது. அவரது கோபத்தின் கொதிப்பைத் தணிக்கிறது தம் மனைவி மீதான வெறுப்பின் வேகத்தைக் குறைக்கிறது. ஆகவே, இதன் மூலம் மண வளையம் துண்டிக்கப்படுவதிலிருந்து இஸ்லாம் அதைப் பாதுகாக்கிறது. இங்குமங்கும் அலைபாயும் மடத்தனமான எண்ணங்களாலும், மாறிக் கொண்டே இருக்கும் சுபாவத்தினாலும் தூய்மையானத் திருமண உறவில் பங்கம் ஏற்படுவதை விட்டும் கட்டிக்காக்கிறது. தம் மனைவியின் மீது வெறுப்பு ஏற்பட்டு விட்டதால் அவளை விவாகரத்துச் செய்யப் போவதாக கூறிய மனிதருக்கு உமர் (ரழி) அவர்கள் "உனக்கென்ன கேடு! இல்லறம் அன்பின் மீதுதானே அமைக்கப்படுகிறது. அதில், பராமரிப்பும் புறக்கணிப்பும் எப்படி ஒன்று சேர முடியும்?'' என்று அறிவுரை கூறினார்கள்.
இஸ்லாமில் திருமண ஒப்பந்தம் என்பது அற்பமான உணர்வுகளின் வெளிப்பாடோ அல்லது இயற்கை ஆசையைத் தணித்து விட்டுப் போவதற்கான வழியோ அல்ல. மாறாக, இதற்கெல்லாம் மேலாகத் தூய்மையானதும் மிகக் கண்ணியமானதுமாகும். உண்மை முஸ்லிமிடம் மனித நேயமும், அறிவும், நற்குணமும், சகிப்புத் தன்மையும், விசாலமான இதயமும் அமைந்திருக்கும். அந்தப் பண்புகள் தமது மனைவியிடம் காணப்படும் வெறுக்கத்தகுந்த குணங்களைச் சகித்துக் கொள்ளும் பக்குவத்தை அவருக்கு அளிக்கும். உண்மை முஸ்லிம் தமது இறைவனின் கட்டளையைப் பின்பற்றுவார். மனைவியின் மீது வெறுப்புள்ளவராக இருந்தாலும் நல்லுறவையே கடைப்பிடிப்பார். தமது இறைவனின் கூற்றுக்கிணங்க தம்மை அமைத்துக் கொள்வார். ஏனென்றால், மனிதன் சில விஷயங்களை வெறுத்து அதிலிருந்து விலகியிருக்க விரும்புகிறான். ஆனால், உண்மையில் அவை நன்மைகளால் சூழப்பட்டதாகவும், நல்லதை உள்ளடக் கியதாகவும் அமைந்திருக்கும்.
எனவே உண்மை முஸ்லிம், எப்படி நேசிக்க வேண்டும், எப்படி வெறுக்க வேண்டும் என்பதையெல்லாம் அறிந்திருப்பார். நேசிப்பவர் மீது குருட்டுத்தனமான நேசத்தைக் கொண்டிருக்கவும் மாட்டார். அதே சமயம், வெறுப்பவர் மீது கல்நெஞ்சம் கொண்ட, பிடிவாதமான, அடிப்படையற்ற கோபத்தையும் வெளிப்படுத்த மாட்டார். நேசிப்பிலும் வெறுப்பிலும் நீதமான நடுநிலையைக் கொண்டிருப்பார்.
"முஸ்லிமான பெண்ணை அவளது கணவர் எவ்வளவுதான் வெறுத்தாலும் அவளிடம் விரும்பத்தகுந்த பல நற்குணங்கள் இருந்தே தீரும். எனவே, அந்தக் கணவர் தமது மனைவியிடம் தமக்கு திருப்தி அளிக்கும் நற்குணங்கள் இருப்பதை மறந்துவிடக் கூடாது. அவளிடம் உள்ள வெறுக்கத்தக்க குணங்களைச் சுட்டிக் காட்டித் திருத்தவும் தவறக்கூடாது'' என மகத்தான இறைத்தூதர் அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.
நபி அவர்கள் கூறினார்கள்: "எந்த ஒரு முஃமினும் (நம்பிக்கையாளரும்) முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை அவர் வெறுத்தால் மற்றொரு குணத்தைப் பொருந்திக் கொள்வார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீ) நூல்: முஸ்லிம் 2915
உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள். அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத் 19160
''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: புகாரி 56
ஒரு மனிதர் நபியவர்களிடம் ''மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?'' என்று கேட்டார் அதற்கு நபி அவர்கள், ''நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162
''இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபி அவரகள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மதி 1082
அல்லாஹ்வின் வல்லமை
அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றி நபி (ஸல்) அவர்கள்:
அல்லாஹ் கூறுகிறான்: எனது அடியார்களே! நான் நிச்சயமாக அநீதியை ஹராமாக்கிக் கொண்டேன். மேலும் உங்கள் மீதும் ஹராமாக்கி விட்டேன். எனவே நீங்களும் அநீதி இழைக்காதீர்கள். என் அடியார்களே! நீங்கள் அனைவரும் வழிதவறியவர்கள்தாம். எனினும் நான் நேர்வழியில் நடத்துபவர்களைத் தவிர. ஆகவே நேர்வழியைக் காட்டுமாறு என்னிடம் கேளுங்கள். நான் (உங்களுக்கு) நேர்வழியைக் காட்டுகிறேன்.
என் அடியார்களே! உங்களில் நான் உணவளித்துப் பசியாற்றியர்வர்களைத் தவிர (மற்ற) அனைவரும் பசித்தர்வர்களே. ஆகவே அவர்களுக்கு உணவளிக்குமாறு என்னிடம் கேளுங்கள், நான் உணவளிக்கிறேன்.
என் அடியார்களே! உங்களில் நான் உடை அணிவித்தவர்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரும் உடையற்றவர்களே. என்னிடம் உடையளிக்குமாறு கேளுங்கள். நான் உங்களுக்கு உடை அணிவிக்கிறேன். என் அடியார்களே! நீங்கள் இரவிலும் பகலிலும் பாவ காரியங்களைப் புரிகிறீர்கள்; நான் சகல பாவங்களையும் மன்னிக்கிறேன். ஆகவே என்னிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள். நான் உங்களுக்கு மன்னிப்பளிக்கிறேன்.
என் அடியார்களே! எனக்கு நீங்கள் தீங்கிழைக்கவோ, நன்மை புரியவோ முடியாது. என் அடியார்களே! உங்களுக்கு முன் தோன்றியவர்களும், உங்களுக்கு பின்னால் தோன்றக் கூடியவர்களும், மனிதர்களூம், ஜின்களும், (அனைவரும்) உள்ளத் தூய்மைப் பெற்ற முத்தக்கீன்களாகி (இறையச்சமுடையவர்களாகி) விட்டாலும் அது என் அதிகாரத்தை சிறிதளவும் அதிகப்படுத்தி விடாது. என் அடியார்களே! உங்களுக்கு முன்னால் தோன்றியவர்களும், இனி தோன்றக் கூடியவர்களும், உங்களில் மனிதர்களும், ஜின்களும், (ஒன்று சேர்ந்து) மிகக் கெட்ட மனம் படைத்தவர்களாகி விட்டாலும் அதுவும் என் அதிகாரத்தை சிறிதளவும் குறைத்து விடாது!
என் அடியார்களே! உங்களுக்கு முன் தோன்றியவர்களும், பின்னால் தோன்றக்கூடியவர்களும், மனிதர்களும், ஜின்களும் அனைவரும் பூமியில் ஓர் இடத்தில் நின்றுகொண்டு என்னிடம் கேட்கட்டும் . அவர்கள் கேட்கின்ற அனைத்தையும் ஒவ்வொருவருக்கும் நான் கொடுப்பேன். (அவ்வாறு கொடுப்பதால்) கடலில் ஓர் ஊசி முனையை நுழைத்து எடுத்தால் அதி கடல் நீர் ஒட்டிக் கொள்வதால் எவ்வளவு கடல் நீர் குறையுமோ அந்த அளவுக்குக்கூட என்னிடமுள்ள அருட்கொடைகள் குறைந்து விடாது.
என் அடியார்களே! இதோ உங்கள் செயல்களைக் கூர்ந்து கவனிக்கிறேன். பிறகு (மறுமையில்) இதன் கூலியை உங்களுக்கு நான் அளிப்பேன். நீங்கள் நற்கூலி பெற்றுக்கொண்டால், அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி காட்டுங்கள்; நல்லது அல்லாததை (தண்டனை) நீங்கள் பெற்றுக் கொண்டால் அதற்கான காரணம் நீங்கள்தாம்.
அறிவிப்பவர்: அபூதர் (ரழி) நூல்: முஸ்லிம்