ஆடை
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள். (அல்குர்அன் 7:31)
இந்த ஆடைதான் அணிந்து தொழவேண்டுமென்று நிர்ணயிக்கப்படவில்லை. ஆடையணிவது அவரவர்களின் வசதியை பொருத்தது. ஒரே ஒரு துணி மட்டும் உள்ளதென்றால் அதனை அணிந்து கொள்ளலாம்.
நபிصلى الله عليه وسلم அவர்கள் ஒரே ஒரு ஆடையை அணிந்துகொண்டு அதன் இரு ஓரத்தையும் இரு தோள்களின் மீதும் மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுதார்கள். அறிவிப்பவர்: உமர்பின் அபீஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
தொடைப்பகுதியை மறைக்க வேண்டும்
"தொடைப்பகுதி மறைக்க வேண்டிய பகுதியாகும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்." அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
பெண்கள் உடல் முழுவதையும் கண்டிப்பாக மறைக்க வேண்டும். ஆனால் முகம், முன்கை, கால் பாதங்கள் ஆகியவற்றை மறைக்கத் தேவையில்லை. சிலர் தொழுகைக்காக காலுறை அணிகின்றனர். இது கட்டாயம் என்றும் எண்ணுகின்றர். நபி صلى الله عليه وسلم காலத்தில் வாழ்ந்த எந்தப் பெண்களும் காலுறை அணிந்து தொழுததாக எவ்வித ஆதாரமும் இல்லை. விரும்பினால் அணியலாம்.
"நபி صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுதார்கள். முஃமினான பெண்கள் ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன் தொழுதார்கள். பின்னர் தங்கள் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். அவர்கள் யார் யார்? என்பதை யாரும் அறியமாட்டார்கள்." அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
பருவமடைந்த பெண்
"பருவமடைந்த பெண் முக்காடில்லாமல் தொழுதால் இறைவன் அதை ஏற்றுக்கொள்ள மாட்டான்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதி
பார்வையை ஈர்க்ககூடிய வண்ண ஆடைகள்
"நபி صلى الله عليه وسلم அவர்கள் பல வண்ணங்கள் உள்ள ஒரு ஆடையை அணிந்து தொழுதபோது அந்த வண்ணங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினார்கள். அவர்கள் தொழுகையை முடித்த பின்னர் "என்னுடைய இந்த ஆடையைக் கொண்டுபோய் அபூஜஹ்ம் வசம் கொடுத்துவிட்டு, அவருடைய (வண்ணங்களில்லாத) ஆடையைக் கொண்டு வாருங்கள். இந்த ஆடை சிறிது நேரத்திற்கு முன் எனது தொழுகையை விட்டு என் கவனத்தைத் திருப்பிவிட்டது" எனக்கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகள்
ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ யிடத்தில் (உருவப் படங்கள் நிறைந்த) ஒரு திரை இருந்தது. அதனால் தங்கள் வீட்டின் ஒரு ஓரத்தை மறைத்திருந்தார்கள். இதை கண்ட நபி صلى الله عليه وسلم ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ யிடம் "உன்னுடைய இந்தத் திரையை நம்மை விட்டும் அகற்றிவிடு. அதிலுள்ள படங்கள் நான் தொழுது கொண்டிருக்கும்போது (என் எண்ணத்தில்) குறிக்கிடுகின்றன" எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
ஆடை
Labels: நபி வழியில் நம் தொழுகை