தயம்மும்
சில நேரங்களில் உளூச் செய்வதற்கோ, கடமையான குளிப்பை குளிப்பதற்கோ தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படலாம். அல்லது தண்ணீர் இருந்தும் கடுங்குளிர், நோய் காரணங்களால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். அல்லது தண்ணீரும் இருந்து பயன்படுத்தக் கூடிய நிலையும் இருந்து உளூச் செய்வதாலோ, கடமையான குளிப்பை குளிப்பதாலோ குடிப்பதற்கு தண்ணீர் இல்லாது போய் விடுமோ என்ற பயம் ஏற்படலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் உளூவிற்கும் கடமையான குளிப்பிற்கும் மாற்றுப் பரிகாரமே தயம்மும் என்பதாகும்.
தயம்மும் எப்படி செய்வது
இரு கைகளையும் தூய்மையான மண்ணில் ஒரு முறை அடித்து, கையில் படிந்துள்ள தூசியை வாயால் ஊதிவிட்டு முகத்திலும் மணிக்கட்டு வரை இரு கைகளிலும் தடவிக் கொள்வதே தயம்மும் ஆகும்.
"நீங்கள் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால் உங்களில் எவரேனும் மலங்களித்து விட்டு வந்தாலும் அல்லது பெண்களைத் தீண்டினாலும் (அந்நேரத்தில்) தண்ணீர் கிடைக்காவிட்டால் தூய மண்ணில் தயம்மும் செய்து கொள்ளுங்கள்" (அல்குர்ஆன் 5:6)
"தயம்மும் என்பது முகத்தில் தடவுவதற்காகவும் கைகளில் தடவுவதற்காகவும் ஒரு தடவை கைகளை தரையில் அடிப்பதாகும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்" அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நுல்: அஹ்மத்
மேற்கூறிய இறை வசனத்திலும், ஹதீஸிலும் பொதுவாக கைகள் என்று கூறப்பட்டிருப்பினும் அதே நபித்தோழர் அறிவிக்கும் மற்றோரு அறிவிப்பில் மணிக்கட்டுவரை என்று கூறப்பட்டுள்ளது.
நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் இரு உள்ளங்கைகளாலும் தரையில் அடித்து, அதில் வாயால் ஊதிவிட்டு அந்தக் கைகளை முகத்திலும் மணிக்கட்டு வரை கைகளிலும் தடவி விட்டு "இவ்வாறு செய்வது உமக்குப் போதுமாகும்" என கூறினார்கள். அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நுல்: அஹ்மத்
தயம்மும் செய்து தொழுதபின் தண்ணீர் கிடைத்து விட்டால்
தயம்மும் செய்து தொழுதபின் தண்ணீர் கிடைத்து விட்டால் உளூச் செய்து மீண்டும் அத்தொழுகையை தொழ வேண்டியதில்லை.
இரண்டு நபர்கள் பிரயாணத்தில் சென்றார்கள். தொழுகை நேரம் வந்தது. அப்போது அவர்களிடம் தண்ணீர் இல்லை. எனவே, அந்த இருவரும் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்து தொழுதனர். பின்பு, அத்தொழுகையின் நேரத்திலேயே அவர்களுக்குத் தண்ணீர் கிடைத்து விட்டது. அப்போது அந்த இருவரில் ஒருவர் உளூச் செய்து விட்டு மீண்டும் தொழுதார். இன்னொருவர் தொழவில்லை. பிரயாணத்திலிருந்து ஊர் திரும்பியதும் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் இதனை அவ்விருவரும் கூறினர். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையை மீண்டும் தொழாத நபரை நோக்கி, "நீர் எனது வழிமுறையைக் கடைபிடித்தீர். (தயம்மும் செய்து நீர் தொழுத) உமது தொழுகையையே உமக்கு போதும்" என்றும், உளூச் செய்து விட்டு மீண்டும் தொழுத நபரை நோக்கி "உமக்கு இரு கூலிகள் உள்ளது" என்றும் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத்
கடுங்குளிரின் கேடு காரணமாக தயம்மும் செய்ததை நபி صلى الله عليه وسلم அங்கீகரித்துள்ளார்கள்
"தாதுஸ்ஸலாஸில்" எனும் போருக்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் என்னை அனுப்பி வைத்தார்கள். கடுங்குளிரான ஓர் இரவில் எனக்கு ஸ்கலிதம் ஏற்பட்டு விட்டது. குளித்தால் எனக்குக் கேடு ஏற்படும் எனக் கருதிய நான் தயம்மும் செய்து என் தோழர்களுக்கு ஸுப்ஹு (அதிகாலை தொழுகை) தொழுவித்தேன். மதீனாவிற்கு நாங்கள் திரும்பியதும் என் செயல் பற்றி நபி صلى الله عليه وسلم அவர்களிடம் என் தோழர்கள் கூறினர். உடனே நபி صلى الله عليه وسلم அவர்கள் "அம்ரே! குளிப்பு கடமையான நிலையில் உம் தோழர்களுக்குத் தொழுவித்தீராமே" என்று என்னிடம் கேட்டார்கள். "உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள் என்ற இறை வசனம் என் நினைவுக்கு வந்ததால் தான் தயம்மும் செய்து தொழுதேன்" என்றேன். இதனை கேட்டு நபி صلى الله عليه وسلم அவர்கள் சிரித்தார்களே தவிர குறை காணவில்லை. அறிவிப்பவர்: அம்ர்பின் அல்ஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்
மேற்கண்ட ஹதீஸிலிருந்து குளிரின் காரணமாகத் தயம்மும் செய்ததை நபி صلى الله عليه وسلم அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
தயம்மும், தயம்மும் எப்படி செய்வது,
Labels: நபி வழியில் நம் தொழுகை