பள்ளியில் பெண்கள்

பள்ளியில் பெண்கள்

நபி அவர்கள் கூறினார்கள்: (தொழுகையில் இமாம் தவறு செய்தால் தவறைச் சுட்டிக்காட்டுவதற்கு) தஸ்பீஹ் கூறுவது ஆண்களுக்கும், கை தட்டுதல் பெண்களுக்கும் உரியதாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:புகாரி



உமர்(ரலி) அவர்களின் மனைவி (ஆதிகா) சுபுஹ் தொழுகைக்கும், இஷா தொழுகைக்கும் மஸ்ஜிதுக்கு வந்து ஜமாஅத்திலே கலந்துக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள். அப்போது அவர்களிடம் (உங்கள் கணவர்) உமர் அவர்கள் இதை விரும்பமாட்டார். இன்னும் ரோஷப்படுவார் என்று அறிந்திருந்தும் எதற்காக நீங்கள் வெளியேறி (மஸ்ஜிதுக்கு) வருகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் (இதுவரை என்னை அவர் தடுக்கவில்லையே) என்னை மஸ்ஜிதுக்கு வராமல் தடுப்பதை விட்டும் அவரை எது தடுத்தது என்று வினவினார்கள். அதற்கு (அவர்களின் மகன் அப்துல்லாஹ்) இப்னு உமர் அவர்கள் அல்லாஹ்வினுடைய பெண் அடிமைகளை அல்லாஹ்வின் மஸ்ஜிதை விட்டும் தடுக்காதீர்கள் என்ற நபியின் சொல்தான் அவர்களை தடுத்துள்ளது என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி



உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி அவர்கள் எழுவதற்கு முன் சற்று அமர்ந்து இருப்பார்கள். பெண்கள் ஆண்களை சந்திக்காத வகையில் திரும்பிச் செல்வதற்காக நபி அவர்கள் இவ்வாறு தங்கியிருந்ததாக நான் கருதுகிறேன் என்று இப்னு ஹிஷாம் கூறுகிறார். நூல்:புகாரி



இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ளமுடியாது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி



நபி அவர்கள் கூறினார்கள்: உங்கள் துணைவியர் (பள்ளிவாசலுக்குச் செல்ல) அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி



"உங்களில் ஒரு பென் மஸ்ஜிதுக்கு வந்தால் அவள் நறுமணம் பூசவேண்டாம்" என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஜைனப் (ரலி) நூல்: முஸ்லிம்



நபி அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குவேன். அப்பொழுது குழந்தையின் அழுகுரலை நான் கேட்பேன். (எனக்குப் பின்னால் தொழுதுகொண்டு இருக்கும்) அந்த குழந்தையின் தாயாருக்கு சிரமமளிக்க கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கி முடித்து விடுவேன். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்:புகாரி